சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.