கனடா மற்றும் சீன நாடுகள் தமக்கிடையில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஆழமான வர்த்தக யுத்தத்தின் பின்னணியிலும் சீனாவும் கனடாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீஜிங்கில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர்.
சீனா தன்னிச்சைவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் நோக்கில் கனடாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனாவின் மாநில கவுன்சிலர் வாங் யோங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கனடாவின் நிதியமைச்சர் பில் மோர்நியு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் ஆகியோர், சீனாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் பெருகிவரும் வர்த்தக யுத்தத்தில் சிக்கியுள்ளன. அந்த நாடுகள் தமக்கிடையில் இறக்குமதி துறையில் அதிகமான மற்றும் கடுமையான சுங்க வரிகளை அமுல்படுத்தியுள்ளன.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை இந்த மாத இறுதியில் ஆஜன்டீனாவின் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இடம்பெறவுள்ள ஜீ 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளார்.
குறித்த உச்சிமாநாட்டில் தங்களுக்கிடையிலான வணிகப் போரில் இருந்து விடுபடுவது தொடர்பில் ஒரு சாத்தியமான வழியை விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.