மண்முனை தென் எருவில் பற்றிலுள்ள 681 மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு மண்முனை தென் எருவில் பற்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
மாற்றத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் த.வரதராஜன் செயலாளர் சி.குமாரசிங்கம் ஆகியோர் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
கடந்தகால இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் போன்ற மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் பற்றியோ அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்கள் பற்றியோ இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் கண்டுகொள்வதில்லை. மண்முனை தென் எருவில் பற்றுப்பிரதேசத்தில் 681 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 103 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மூவாயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.
இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் எவ்வித வருமானமும் இன்றி மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கான வீட்டுவசதிகள், வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு வசதிகளற்ற நிலையிலேயுள்ளனர். மாற்றுத்திறனாளிகளக்கென்று முறையான செயற்திட்டம் ஒன்றை பிரதேச ரீதியாக செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கரிசனைகாட்டவேண்டும்.
தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாது அதனை செயலில் காட்டவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செ.துஜியந்தன்