மழை இசைக்கும் பாடல்
அறை முழுவதுமாய் புகுந்துவிட்டது
வாசிப்பாளர்களாகிய நீங்கள் யோசிக்கலாம்
அங்கு குளம் ஒன்று உருவாக்கியிருக்கலாம்
மீன்கள் பாய்ந்து கட்டிலில் தூங்கலாம்
தவளை ஒன்று குதித்து
என் சொற்களுக்குள் தஞ்சமடையலாம்
பின்
ரெஜிபோம் ஒன்று
என் கவிதைகளை எறும்புகளை போல் சுமந்து செல்லலாம்
என் மீசை நுனியில்
நதியின் இரு கரைகள் தோன்றலாம்
நீளமாய் கிடந்த என் தனிமையை
மெஹரூனின் நினைவுகள் முடித்து வைக்கலாம்.
இப்படி காட்சி நடந்திருந்தால்
ஒரு கவிதை சில நகரங்களை
கடந்து செல்லலாம்.
கொலையாளி நான் அல்ல.
சன்னலுக்கு வெளியே
எறிந்த கனவுகள்
மீளவும்
ஒரு குழந்தையின் புன்னகை போல
என் படுக்கையறைக்குள் அத்து மீறி
நுழைகின்றன.
எரிச்சல் மிகுந்த இரவதென்று சொன்னால்
அந்த தனிமையும் நம்பும்.
நான் தூக்கி வளர்த்த கனவுகள்
விஷச் சூழலை
மெழுகுபத்தியில் ஏற்றி
என்னை அதில் எரிய விடுகின்றன.
இதன்
துரோகம் கனவுகளோடு உறங்குவதோ
அல்லது
உறவு வைத்துக் கொள்வதோ இல்லை
என்கிற முடிவிற்கு
நான் வந்திருக்கிறேன்.
ரத்த நிறத்தில்
கனவொன்று செத்துக் கிடக்கிறது
கொலையாளி நான் அல்ல.
சிற்பங்களின் சாயல்.
ஒரு பௌர்ணமி நாளில்
மலைகளைக் குடைந்து
ஆதியின் சிற்பங்களை கண்டடைகிறேன்
எனது கைகள் பட்டதும்
சிற்பங்கள்
பறவைகளாகிப் புறப்படுகின்றன
பிரபஞ்ச வெளியில்
போராட வேண்டியிருக்கும்
எனவே நீங்கள் சிற்பங்களாகவே
இருந்து விடுங்கள் என
பறவைகளிடம் கட்டளையிடுகிறேன்.
நிகழ் காலத்தில்
சாத்தியமற்ற ஒன்றெனெ சொல்லி
பறவைகள்
பிரபஞ்ச ஆசைகளின் திரட்சியில்
நெடுவனம் நோக்கிப் புறப்படுகின்றன
பறவைகள் புறப்படுவதற்கு முன்
ஒரேயொரு கட்டளையிடுகிறேன்
அவா அடங்கிய ஒரு நாள்
மீண்டும் வரவேண்டும்
சிற்பங்களாய் இருந்த உங்களை
பறவைகளாய் உருவாக்கம் செய்தது போல்
பறவைகளாய் இருக்கும் உங்களை
தேவதைகளாய் உருவாக்கம் செய்வேன்
தேவதைகளைப் பிடிக்காதவர்களும் உண்டா என சொல்லி வைக்கிறேன்
கட்டளையை ஏற்ற பறவைகள்
வனம் நோக்கிப் புறப்பட்டன
வனம் நுகர்ந்ததில்
கனவுகள் முகிழ்ந்து
பறவைகளுக்கு
பிரபஞ்ச வெளி பிடித்துப்போனது
பிரபஞ்ச வெளி பிடித்துப்போனதில்
பறவைகள் கட்டளைகளை மறந்தன
காத்திருந்ததில்
நான் இப்போது
சிற்பங்களின் சாயல் கொண்டிருந்தேன்.
நிறங்கள்.
என் மீதான நிறங்களை
ஒரு பறவை எடுத்துச் சென்று
நான் ஆற்ற அறையில் வைத்திருக்கிறது
அல்லது பெருங் காடொன்றில் மறைத்து வைத்திருக்கிறது
அதனால்
வர்ணங்களால் நான் கண்ட கனவுகளை
தொடங்க முடியாமல் அப்படியே வைத்திருக்கிறேன்
நம்பிக்கை தரக்கூடிய அந்நிறங்கள்
தவறிய பொம்மையென
பல பொழுதுகள அங்கேயே இருக்கின்றன
நிறங்களற்றதால்
நான் காகத்தைப் போல
கறுப்பாக இருக்கிறேன்
சில நேரம் மொழி தெரியாத சிறு குழந்தையைப் போல
அழவும் முற்படுகிறேன்
துயர் முற்றியதன் மூன்றாம் நிலையாக இருக்கக்கூடுமென
எனதறை முழுக்க பேச்சு
ஓ......
பறவையே வானத்திற்கு
அப்பாலான வெளியில்
என் நிறங்களை வைத்திருந்தாலும்
சோடி சோடியாய்
என் நகரத்திற்கு அந்நிறங்கள்
ஒரு நாள் பறந்து வரும்
பிரிந்த உருவங்கள் கிடைத்து
நான் மறுபடியும் நிறங்களுடைய
மனிதனாய் மிகத்தாமதமாயினும்
என் உரையாடலை தொடங்குவேன்.
மின்மினிகளின் நகரம்.
நேற்று மின்மினிகளின்
நகரத்திற்கு செல்லக்கிடைத்தது
மின்மிகளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே
பூச்சிகளின் மொழியை கற்றுருந்தேன்
மிகவும் கனதியான நிமிசங்களது
உடலில் ஔியை சுமந்திருப்பதால்
பூச்சி இனங்களில்
இரண்டாம் இடம் மின்மினிகளுக்குண்டு
ஏனெனில்
தேன் பூச்சிகளே
உலகின் அதியுயர் பூச்சி இனமாக இருக்கின்றன.
எனினும் அவை சாதி பிரித்ததாய்
எந்த குறிப்பக்களும் இல்லை
மின்மினிகளின நகரம் மிக அழகானது
குழந்தைகளிடம் காண்பிக்க வேண்டிய காட்சிகள்
நிறையவே கலர் கலராய் கிடந்தன
நட்சத்திரங்கள் மின்மினிகளிடம்
ஔியை கடனாய் வாங்கிச் செல்வதை அங்கு காணக்கிடைத்தது
எனது குழந்தைகளுக்காகவும்
கொஞசம் ஔி வாங்கி வந்தேன்
அவை என் அறை முழுக்க மின்மினிகளாய் வளர்கின்றன.
ஏ.நஸ்புள்ளாஹ்.