(சிறப்பு நிருபர் தீபன்)
நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்று கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி எங்களுடைய வசதிகளைக் கூட்டிக்கொள்வதற்காக ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தியது கிடையாது. மக்களின் அபிவிருத்திக்கான நிதியை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே அமைச்சுக்களை நாடியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மக்களின் ஆணைக்கு மாறாக நாங்கள் ஒரு போதும் செயற்படவும் மாட்டோம். ஐந்து சதக் காசு கூட வாங்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, செங்கலடி பதுளை வீதியில் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (26) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுமார் ஒரு கோடி ரூபாய் நிதியில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 50 இலட்சம் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் முயற்சினால் அமைச்சு ஊடாகவும் மிகுதி நிதி ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
வரட்சி காலத்தில் செங்கலடி பதுளை வீதியை அணடியுள்ள கிராம மக்கள் பிரதேச சபையின் பௌசர்கள் மூலம் வழங்கப்படும் நீரினையே நம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் தொடரந்து உரையாற்றுகையில் - தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமையை மாத்திரம் கேட்கின்றது .அபிவிருத்தியைச் செய்யவில்லை எனப் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நாங்கள் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை விளம்பரப்படுத்துவதில்லை. பல வீதிகள், மதகுகள் இந்த பிரதேசங்களில் எமது முன்மொழிவுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் அமைச்சர்களுடன் கதைத்து இந்த நிதியினைப் பெற முற்படுகின்றபோது அமைச்சர்களுடன் வால் பிடித்துத் திரிகின்றோம் என ஒரு மனிதன் கூறியிருந்தார்.
நாங்கள் அமைச்சர்களிடம் செல்வது பணத்தை,பதவிகளைப் பெறுவதற்காக அல்ல. அமைச்சர் பதவி கேட்டு நாங்கள் ஒருபோதும் செல்ல மாட்டோம். கோடிப்பணங்களை தேடி எமது பைகளில் போடுவதற்கு நாங்கள் அமைச்சர்களிடம் செல்வதில்லை.
எமது மக்களின் அபிவிருத்திகளுக்கு நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே நாங்கள் அமைச்சர்களை நாடிச் செல்கிறோம்.
எங்களைக் கூட 30 கோடி தருவோம், அமைச்சு பதவி தருவோம் என பேரம் பேசுபவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எம்முடன் இணையாவிட்டாலும் பர யில்லை, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்போது நெஞ்சுவலி என வைத்தியசாலையில் இருங்கள் என உங்களுக்கு ஐந்து கோடி ரூபாய் தருவோம் என இறுதியாக கூறினார்கள். மக்களின் ஆணைக்கு மாறாக நாங்கள் ஒரு போதும் செயற்படவும் மாட்டோம் ஐந்து சதக் காசு கூட வாங்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றார்.