LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 10, 2018

பாராளுமன்றக் கலைப்பு

.
ஏற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன என்ற பழமொழிதான் இலங்கையின் ஜனாதிபதிக்குப் பொருந்தி வருகிறது. நிதானமாகச் சென்றுகொண்டிருந்த இவங்கை ஆட்சிமுறையை அரசியலமைப்புக்கு மாறாகக் கடந்தமாதம் 26ந் திகதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கியதன் மூலம் குழப்பியடித்து ஏதோ நன்மை கண்டுவிடத் துடித்த ஜனாதிபதி மைத்திரி நவம்பர் ஒன்பதாந்திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தன் நிலையை இலங்கை மக்களிடமும் சர்வதேச அரசியல் வல்லுனர்களிடமும் படுமோசமாகத் தாழ்த்திக் கொண்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக மைத்திரி; தெரிவு செய்யப்பட்டபோது இலங்கையில் ஜனநாயக விரும்பிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். தமிழர்கள் தங்கள் நெடுநாட் பிரச்சினைக்கு முடிவு காணுகின்ற நாள் நெருங்கிவருவதாக எண்ணினார்கள். அவரும் மூன்றாண்டுகளாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற பாவனையில் நல்ல பிள்ளையாகவும் மக்கள் தலைவராகவும் நடந்து கொண்டார். அரசியல் போக்கிரித் தனங்களும் இன ஒடுக்குமுறைகளும் நிறைந்த நாடு என்ற அவப்பெயர் சர்வதேச அரங்கில் மெல்லமெல்லக் குறையத் தொடங்கியது.
தமிழர்கள் தங்கள் தீர்வுத்திட்டம் இரண்டொரு மாதங்களில் நிறைவேறிவிடும் என நம்பிக் கொண்டிருந்த வேளையில் அதனைக் குழப்பிவிடும் கபடநோக்கிலோ என்னவோ இலங்கைப் பாராளுமன்றத்தைக் குழப்பியடிக்கத் துணிந்த மைத்திரி இறதியில் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தனக்குத்தானே சேறு பூசிக்கொண்டார்.
இலங்கை அரசியற் சட்டப்படி ஒரு பிரதமரை எழுந்தமானத்தில் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. பிரதமரை நீக்க வேண்டுமானால் பிரதமராக இருப்பவர் தன்கைப்படக் கடிதம் எழுதி விலகிக் கொள்ளலாம். அல்லது அவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் பதவி நீக்கப்படலாம். இவற்றுக்கு அப்பால் வருடாந்த பட்ஜட் அறிக்கையைத் தோற்கடிக்;கச் செய்து பாராளுமன்றத்தைக் கலைப்பதன்மூலம் பதவியிழக்கச் செய்யலாம். இவற்றின் எந்த முறையிலும் ஜனாதிபதியின் நேரடி அதிகாரம் பயன்படுத்தும் வாய்ப்புகள் இல்லை.
எனவே மேற்சொன்ன காரணங்கள் எதுவுமில்லாத நிலையில் ஜனாதிபதி தன் நேரடி அதிகாரத்தின் கீழ் பிரதமரைப் பதவிநீக்க வேண்டுமானால் நான்கரை ஆண்டுகால ஆட்சி முடியும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் ரணில் விடயத்தில் ஜனாதிபதி அப்படி நடந்து கொள்ளவில்லை. தன் விருப்பப்படி எதேச்சதிகாரமாக ரணிலைப் பதவிநீக்கம் செய்திருக்கிறார். அதுவுமல்லாமல் பதவிநீக்கற் கடிதம் பிரதமருக்குக் கிடைக்குமுன்னரேயே எந்தக் காரணமுமில்லாமல் பழைய ஜனாதிபதியும் தன் கட்சிக்குள்ளிருந்து தனக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவருமான மகிந்த ராஜபக்ஸவைப் புதிய பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்வித்தும் இருக்கிறார்.
இவையிரண்டும் அரசியலமைப்புக்கு விரோதமான செயற்பாடுகளாகும். முறையற்ற விதத்தில் பதவியிலிருந்த பிரதமரை அகற்றியும், அந்தப் பதவிநீக்கம் சட்டவலுப் பெறாத நிலையில் புதிய பிரதமருக்குச் சத்தியப்பிரமாணம் செய்வித்தும் அரசியற் குழப்பத்தை ஜனாதிபதியே உருவாக்கியுள்ளார். அத்துடன் ஒருநாட்டில் இரண்டு பிரதமர்களா என்ற சட்டச் சிக்கலையும் தோற்றுவித்திருக்கிறார். இச்செயற்பாடு முற்றுமுழுதான அரசியல் அடாத்தாகும்;.
தன்செயற்பாட்டின் பலவீனத்தை உணர்ந்ததாலோ என்னவோ ஜனாதிபதி அவசரஅவசரமாக டிசம்பர் 16ந் தேதிவரை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருக்கிறார். அதற்கிடைப்பட்ட காலத்தில் மகிந்தவுக்குச் சார்பாக ஆள்தேடலில் வெற்றிபெறலாமென்ற திட்டம் இருக்கக்கூடும் எனப் பரவலாகச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சந்தேகம் சரியானால் மகிந்த பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையிலேயே பிரதமராக்கப் பட்டிருக்கிறார். இதுகூட அரசியலமைப்புக்க முரணானதுதான். அத்துடன் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்றியதற்கு ஜனாதிபதி சொன்ன காரணங்கள் எவையும் வலுவானவையாகக் காணப்படவில்லை. மாறாகச் சிறுகுழந்தைகள் ஒருவர்மேல் ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் போலவே இருந்தன.
ரணிலின் பதவிநீக்கம் அரசியற்சட்டத்துக்கு முரணானது என்றகருத்து பொதுமக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த நிலையில் புதிய அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறது. இது அரச திணைக்களங்களையும் பொதுமக்களையும் வெளிநாடுகளையும் குழப்பத்திலாழ்த்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை ஆட்சிமுறையில் நம்பிக்கை வைத்திருந்த சர்வதேசம் இந்நிகழ்வுகளால் இலங்கைமேல் சீற்றம் காட்டத் தொடங்கின. பாரளுமன்றத்தை உடனடியாகக்கூட்டி இச்சிக்கல்களுக்கு ஜனநாயகவழியில் தீர்வுகாணுமாறு கடுமையாக வற்புறுத்தி வருகின்றன. உள்நாட்டிலும் மகிந்த ஆதரவாளர்கள் தவிர்ந்த அனைத்துமக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் போக்குக்கு எதிராகவே கருத்துத் தெரிவித்தனர். இந்த நெருக்கடிகள் காரணமாக வேறுவழியின்றி எதிhவரும் 14ந்தேதி பாராளுமன்றத்தைக் கூட்டுதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். அதற்கேதுவாக மகிந்தவுக்கு ஆள்சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
9ந் திகதி மாலைவரைக்கும் மகிந்தவும் அவரது புதிய அமைச்சர்களும் 14ந் தேதி கூடவிருக்கும் கூட்டத்தொடரில் தம் பெரும்பான்மைக்காக செயல்பட்டுக் கொண்டிருக்க- ரணிலும் தன் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தைரியத்தில் காத்திருக்க - எவருமே எதிர்பாராத வண்ணம் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருக்கிறார். பெரும்பான்மைப் பலத்தை உறுதிப்படுத்துவோம்: மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுவோம் என்றெல்லாம் சவடால் அடித்துக்கொண்டிருந்த மகிந்தவும் அவரது பதிய அமைச்சர்களும் ஆதரவாளர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள்.
வர்த்தமானி அறிவத்தலின்படி பொதுத்தேர்தல் 2019 ஜனவரி 5இல் இடம்பெற்றுப் புதிய நாடாளுமன்றம் பதினேழாந் திகதி கூடவிருக்கிறது. அரசியலமைப்பு உறுப்புரை 62(2)இன் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது. அந்த உறுப்புரையோ முன்னதாகக் கலைக்கப்பட்டாலொழியப் பாராளுமன்றம் தனது ஆட்சிக்காலமான ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்தபின் கலைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடதத்துதற்குமுன்னர் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். இது முன்னெப்போதும் இடம்பெறாத ஒன்று. இந்த அறிவிப்பு பாராளுமன்றக்கலைப்பில் அரசியற் சட்டத்தவறுகள் இருக்கின்றனவா என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருக்கிறது. “முன்னதாகக் கலைக்கப்பட்டா லொழிய” என்ற வாசகத்துக்குப் பொருள்கோடல் தேட அவர் முயல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இலங்கை மக்களாலும் சர்வதேச அரசுகளாலும் மதிக்கப்பட்ட மைத்திரி இப்போது தன்தலையில்; தானே மண்ணைவாரி இறைத்துக் கொண்டார் என்பதுதான் உண்மை.
கந்தவனம் கோணேஸ்வரன்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7