LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 4, 2018

கிட்டங்கி வீதிக்கு கிட்டுமா பாலம்?





'ஓவ்வொரு வருஷமும் மாரி மழை பெய்யக்குள்ள கிட்டங்கி வீதியை எட்டிக்கடக்கும் போது நெஞ்சுக்க பதை பதைப்புடன் தான் போகவேண்டியிருக்குது. கிட்டங்கிக்கு ஒரு பாலம் அமைச்சுத்தாங்க எண்டு கத்தி கத்தி எங்கட தொண்டத் தண்ணீ எல்லாம் வற்றிப்போச்சு. போன முறை எலக்ஷனுக்குள்ள பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பம் வோட்டுப்போடுங்க என்று சொன்னாங்க. இந்த முறை எலக்ஷன் வந்தாலும் பாலம் அமைக்கப்போறம் வோட்டப்போடுங்க எண்டுதான் சொல்லப்போறாங்க. இவங்க எப்ப பாலம் போடுறது. நாங்க எப்ப பயமில்லாம பாதையில போறது. ஒரு றோட்டு, பாலம் போடுறதுக்கு வக்கில்லாத தமிழ் அரசியல்வாதிகள நெனச்சா என்ன செய்யிற எண்டு தெரியாமக்கிடக்குது.  எல்லாம் எங்கட தலைவிதி எண்டுத்துப் போறதுதான்' 
இப்படிக் கூறுகின்றனர் நாவிதன்வெளிப் பிரதேச மக்கள். 
கல்முனை – நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி துறையடிக்கு பாலம் ஒன்ற அமைக்கப்படவேண்டும் என பல ஆண்டுகளாய் இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தவண்ணமுள்ளனர். ஆனாலும் இன்னும் பாலம் அமைத்தபாடாகக் காணவில்லை. இந் நாட்டில் வீதி அபிவிருத்திகள் பல இடங்களில் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பல நவீன பலம் கூட சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை மையமாக வைத்தே வீதிஅபிவிருத்தியும், பாலங்களும், அதிவேக பாதைகளும் அமைக்கப்பட்டுவருகின்றன. 
கிராமமப்புற மக்களைப் பொறுத்தவரை இவையெல்லாம் எட்டாக்கனியாகவே இன்றும் இருக்கின்றன என்பதற்கு கிட்டங்கி வீதி ஓர் எடுத்தக்காட்டாகும். 
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளிப் பிரதேசம் விவசாயச்செய்கைக்குப்பேர்போன பிரதேசமாகும் இங்குள்ள மக்கள் விவசாயத்தையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் வசிக்கும் பிரதேசமாகவும் நாவிதன்வெளிப் பிரதேசம் உள்ளது. 20 கிராம சேவகர் பிரிவுகளையும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களையும் கொண்ட பிரதேசமாக நாவிதன்வெளி பிரதேசம் அமைந்துள்ளது.
கடந்த கால யுத்தம் இப் பிரதேச மக்களின் உயிர்  உடமைகளை வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான முறையில் காவுகொண்டிருந்தது. இம் மக்களின் பொருளாதார மையமாக விளங்கிய ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரிசி ஆலையான சவளக்கடை அரிசி ஆலை இன்று இருந்த இடம் தெரியாதளவிற்கு அழிக்கப்பட்டிருக்கின்றது என்றால் கடந்தகால யுத்தம் இம் மக்களின் வாழ்வியலை எந்தளவிற்குப் பதம்பார்த்துச் சென்றிருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. 
யுத்தம் சத்தம் இன்றி தின்ற கிராமங்களில் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்கள் பலவுள்ளன.  இன்றும் கூட அங்கு வாழும் மக்கள்  அதன் வலிகளிலும்  வடுக்களிலும் இருந்து மீளமுடியாத நிலையிலேயுள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டும்  நூற்றுக்கணக்கானவர்கள் காணமல்போயுமுள்ளனர். மத்தியமுகாம் நான்காம் கிராமம் 1990 இல் ஏற்பட்ட வன்செயலின்போது முற்றாக இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்ட கிராமமாக இருந்துள்ளது. இதற்கு சான்றாக யுத்தம் விட்டுச்சென்ற எச்சங்களை பாழடைந்த கட்டிடங்களை காணமுடியும். 
யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் அப்போது நாட்டில் இரு பெண்களின் படுகொலைச்சம்பவம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பெரிதாகபேசப்பட்டது. அது அரசியல் ரீதியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததுடன். தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அப்போது வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிஷhந்தி பற்றிய வழக்கு விசாரணை மற்றையது கிழக்கில் அம்பாறை மத்திய முகாமில் படுகொலை செய்யப்பட்ட கோணேஸ்வரி வழக்கு என்பன தமிழ் மக்கள் மத்தியில் பேசுபெருளாக அமைந்திருந்தன. 
நாவிதனவெளி பிரதேசம் மத்தியமுகாமைச் கோணேஸ்வரி எனும் பெண்ணை பாலியல் துஷ;பிரயோகம் செய்து அவரது மர்ம உறுப்பில் கைக்குண்டு ஒன்றை வைத்து வெடிக்கச் செய்திருந்தனர் கொடூரர்கள். துடிக்கதுடிக்க சிதறிப்போன இப் பெண்ணின் உயிரிழப்பு உலகறிந்த விடயமாகும். 
இவ்வாறு யுத்தத்தின் உச்சக்கட்ட வலிகளை அனுபவித்த மக்கள் வசிக்கும் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று வரை வீட்டு வசதி குடிநீர்வசதி மின்சாரவசதி வீதி அபிவிருத்தி வாழ்வாதார உதவிகள்  கிராம அபிவிருத்தி எனப்பல கிடைக்கப்பெறாத நிலையிலே மக்கள் வசித்துவருகின்றனர். இந் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் எனக்கூறினாலும் கடைசியில் மக்களுக்கு எதுவுமே செய்யாது காலத்தைக்கடத்திச் செல்வதே இங்கு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது. எல்லாம் புறக்குடத்தில் வார்த்த நீர் போல போய்விடுகின்றன. 
இன்று கல்முனை – நாவிதன்வெளிப் பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கிப் பாலம் நிரந்தரப்பாலமாக அமைக்கப்படாத காரணத்தினால் இங்குள்ள மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மழைகாலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதினால் கிட்டங்கி வீதிக்கு குறுக்கே வெள்ளநீர் 4 அடிக்கும் மேலாக பாய்வதினால் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் இக்கரையில் இருந்து அக்கரைக்குமான போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படுவதும். சிரமப்பட்டு இவ் வீதியை அவசரத்துக்கு கடக்கமுற்படுபவர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதும் வருடந்தோறும் இடம்பெற்றுவரும் துயரச்சம்பவமாகும். 
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டங்கி வெள்ளத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுக்கு ஒருவர், இருவர் என உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றது. இந்த வருடம் 2018 மாரி மழைக்கு எந்த உயிர் பறிபோகுமோ என்ற அச்சம் மக்களிடம் மேலோங்கியுள்ளது. 
நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள மக்கள் தமது அன்றாடத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்முனைக்கு வருவதும் கல்முனை பிரதேசத்திலுள்ளவர்கள் விவசாயம் தொழில்துறைகளுக்கு நாவிதன்வெளிக்குச் செல்வதும் வழமையான செயற்பாடாகும். கிட்டங்கி துறை வீதிக்கு மேலாக பாதுகாப்பான பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும். இக்கோரிக்கை இன்று நேற்றல்ல மிக நீண்டகாலமாக இங்குள்ள மக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாவிதன்வெளி – கல்முனையை இணைக்கும் கிட்டங்கித்துறைக்கு பாலம் அமைக்கப்படும் என அரசியல் பிரமுகர்களினால் வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும். தேர்தல் முடிந்ததும் அவை காற்றில் பறப்பதும் வழக்கமான பழக்கமாகிப்போய்விட்டது. 
தற்போதைய நவீன காலத்தில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு இலகுவான போக்குவரத்து மார்க்கங்கள் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இக் காலத்தில் கிட்டங்கி துறைக்கு பாலம் அமைப்பது ஒரு சிரமமான காரியமல்ல. 
நேரடியாக பிரதமர் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு இவ் விடயத்தை கொண்டு சென்று நாவிதன்வெளி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்க்கு சமபந்தன் ஐயா இக் காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்கின்றனர். அடுத்த மாரிமழை காலம் தொடங்குவதற்க்கு முன்பு கிட்டங்கிக்கு பாலம் அமைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்


செ.துஜியந்தன்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7