பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களின் சிகையலங்காரம் மற்றும் ஆடைவடிவமைப்பு தொடர்பில் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் ஆடைவடிவமைப்பில் ஈடுபடும் தையல்காரர்கள் ஆகியோருக்கு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை, வெல்லாவெளி பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அறிவுறுத்தல் கூட்டங்களை நடத்திவருகின்றன.
இது தொடர்பில் பட்டிருப்பு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.அருள்ராஜா தெரிவிக்கையில்...
பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கத்தினை மேன்படுத்தும் வகையில் வலயக்கல்வி அலுவலகத்தினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் கூடிய கரிசனை காட்டவேண்டும்.
இன்று பாடசாலைகளில் மாணவர்கள் அணியும் பாடசாலை சீருடை அவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள், பொதுநல அமைப்புக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. மாணவர்கள் விரும்பியவாறு தமது சிகையினை அலங்காரம் செய்து கொண்டுவருகின்றனர். இதேபோல அவர்களது சீருடையும் மிகவும் இறுக்கமாகவும் நவீன வடிவமைப்பாகவும் அமைக்கப்பட்டு அணிந்துவருகின்றனர். இதற்கு அப்பிரதேசங்களில் சிகையலங்கார கடைகளை நடத்திவரும் உரிமையாளர்களும், ஆடைவடிவமைப்பாளர்களும் ஒருவகையில் காரணமாகின்றனர்.
மாணவர்கள் வந்து விரும்பியவாறு சிகையலங்காரம் செய்யுமாறும், ஆடைவடிவமைத்து தருமாறு கேட்பதினாலே தாங்கள் அவ்வாறு செய்து கொடுப்பதாக கூறுகின்றனர். பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வாறு சிகையலங்காரம் செய்து கொள்வது தமது சீருடையினை வடிவமைப்பது என்பது தொடர்பில் ஒரு ஒழுங்கு முறையும் ஒழுக்கமும் இருக்கின்றது. இதனை மீறி ஒவ்வொருவருக்கும் விதம் விதமாக வடிவமைக்க முடியாது. இப்படி செய்வதினால் பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பாடசாலை ஒழுக்கக் குழுக்களினால் கூட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
இதனை கருத்தில் கொண்டே வடமாகாணத்தில் இருப்பதைப்போன்று அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகையலங்காரமும், சீருடை வடிவமைப்பும் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அந்தப் பிரதேச சிகையலங்கார உரிமையாளர்கள் மற்றும் ஆடைவடிவமைப்பாளர்களை தெளிவுபடுத்தி அதற்கான அளவு திட்டங்களை வரைபடங்களாக வழங்கிவருகின்றோம். எம்மால் வழங்கப்படுகின்ற அளவுகளின் அடிப்படையிலே பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு சிகையலங்காரமும், ஆடைவடிவமைப்பு ஏற்படுத்தவேண்டும் என அனைவரையும் வலியுறுத்தியுள்ளோம்.
ஒழுக்கம் உள்ள நற்பண்புள்ள மாணவ சமூதாயத்தை உருவாக்குவது சமூகத்திலுள்ள அனைவரின் கடமையாகும். பிரதேச சபை மற்றும் வலயக்கல்வி அலுவலகம் பிரதேச செயலகங்கள் இணைந்து முன்னெடுக்கம் இத் திட்டத்திற்கு சிகையலங்கார உரிமையாளர்களும், ஆடைவடிவமைப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கோட்டக்கல்வி அதிகாரி ரி. அருள்ராஜா கேட்டுள்ளார்.
செ.துஜியந்தன்