2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொது நூலகங்கள், வாசிப்பு நிலையங்களின் வாசகர்கள் மற்றும், பிரதேச பாடசாலை மாணவர்களிடையே கடந்த ஒக்டோபர் மாதம் முழுவதும் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வானது இன்றைய தினம்(26) எமது சபையின் கெளரவ.தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.தேசிய வாசிப்பு மாத
இதன் போது பொது நூலகங்கள் வாசிப்பு நிலையங்களில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து வெற்றியீட்டிய மாணவர்கள், இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம்தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி வாகரை பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும், கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(உ.தர) பரீட்சையில் தோற்றி, வாகரை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வாகரை பிரதேச நலன்சார்ந்த விடயங்களில் எமது சபையுடன் இணைந்து பயணிக்கும் ஏனைய அரச, அரச சார்பற்ற திணைக்களக்கள், அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளான இன்றைய நிகழ்வின் பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள், மற்றும், கெளரவ.அதிதிகள் ஆகியோருக்கும் அவர்களது சேவைகளை பாராட்டி இந்நிகழ்வின் போது நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் s.பிரகாஷ் ,சிறப்பு அதிதிகளாக சபையின் உறுப்பினர்களும், விஷேட அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிப்பணிப்பாளர் மற்றும், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
எமது சபைக்கான செயலாளர் இல்லாத காலகட்டத்தில் சபையின் கெளரவ.தவிசாளர் அவர்களது நெறிப்படுதலின் கீழ், சபையின் உத்தியோகத்தர்கள், நூலகர், நூலக உதவியாளர்கள் மற்றும், ஊழியர்கள் அனைவரும் இந்நிகழ்விற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.