பேரிடர் காலங்களில் கேரளாவைப் போன்று தமிழக எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து வாகனம் மூலம் முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
தமிழகத்தில் பல மாவட்டங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. புதுக்கோட்டையில் கிராம, நகரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. நகரத்தில் பல வீதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தாழ்வான, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதனால், பாதிப்புகள் குறைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
மத்திய அரசிடம் நிதி கோருவீர்களா? என்ற கேள்விக்கு
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. கணக்கீடு நடைபெறுகிறது. அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். மின் கம்பங்கள் அதிகமாகச் சேதமாகியிருக்கின்றன. சரிசெய்யும் பணியில் வெளிமாவட்ட, வெளிமாநில ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரப் பகுதிகளில் நாளை மாலைக்குள்ளும், கிராமப் பகுதிகளில் 4-5 நாட்களுக்குள்ளும் மின்சாரம் தொடர்பான பிரச்சினை சரிசெய்யப்படும் எனத்தெரிவித்தார்
அத்தோடு பல பகுதிகளில் அதிகாரிகள் வரவில்லையென மக்கள் கோபமாக இருக்கிறார்களே? என்ற கேள்விக்கு
ஆட்சியர்கள் மூலமாக அந்தந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் அங்கேயே தங்கி பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆட்சியர்களுக்கு உதவியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர் என்று கூறினார்.
பேரிடர் பாதித்த இடமாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கிறார்களே? என்ற அடுத்த கேள்விக்கு
பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். அநேகமாக நாளை மறுநாள் நேரம் கிடைக்கும் என நம்புகிறோம். தேவையான நிவாரணம் கிடைக்க அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பணிகள் சரிவர நடைபெறவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?இது இயர்கை சீற்றம். கேரளாவில் வெள்ளம் வந்தபோது அனைவரும் ஒன்றாக இணைந்து உதவி செய்தனர். இங்கிருக்கும் எதிர்க்கட்சி அப்படியில்லை. ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.