தமிழர்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. தமிழர்களிற்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்காக தாம் செயற்படுவதாகக் கூறும் கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களின் எதையுமே செய்யவில்லை.
இந்நிலையில், வடக்கு, கிழக்கிற்கு கடந்த மூன்று வருடகாலமாக எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்காத ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் கூட்டணியமைப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த அரசியல் ரீதியான உரிமைகளை தேசிய அரசாங்கம் பறித்தது.
மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்குத் துரோகம் செய்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.