செப்டெம்பர்
26ந் தேதியன்று பிரதமராகவிருந்த ரணிலை நீக்கிவிட்டுப் பெரும்பான்மை ஆதரவற்ற மகிந்தவை வலிந்து பிரதமராக்கியதன்மூலம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றத்திற் தொடக்கிவைக்கப்பட்ட குழப்பநிலைமை, மூன்றுவாரங்களைக் கடந்தும் முடிவுகாணா முடியாமல் நீடித்துவருகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்பியல்புகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு தாக்குதல்களும், மிளகாய்த்தூள் வீச்சுகளும், சபாநாயகரைச் செயல்பட விடாதிருத்தலும் என்று மோசமான செய்கைகள் அங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்ற
நடவடிக்கைகள் சிதைந்து போனமைக்கு இந்தநாட்டின் ஜனாதிபதியே தொடக்கப்புள்ளியாகச் செயல்பட்டிருக்கிறார் என்பது அனைத்து இலங்கையர்களுக்கும் தலைகுனிவைத் தரும் உண்மையாகும். ஜனாதிபதி மைத்திரியை உன்னதமான இடத்தில்வைத்து நம்பியிருந்த மக்கள் இன்று அவர்மேல் மிகவும் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்காகத் தாய்நாட்டின் அமைதியையே அழிக்கத்துணிந்த மனிதராக அவரைப் பார்க்கிறார்கள்.
இதன்
வெளிப்பாடாகவே ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றுதல் பற்றிய சிந்தனையும் பல்கலைப் பேராசிரியர்கள் மட்டத்தில் தோன்றியிருக்கிறது. கேட்பதற்குச் சுவையாக இருக்கும் இவ்வெண்ணம் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி மக்களிடம் எழுவது இயல்பேயாயினும், அது நடைமுறைக்கு வருமோ இல்லையோ அத்தகைய முயற்சிக்கு அரசியல் சட்டத்தில் வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உண்மை.
இலங்கை
அரசியலமைப்பின் 38ஆவது உறுப்புரையின் முதலாம்பிரிவின்படி ஜனாதிபதியானவர் (அ)இறப்பதன்மூலம், (ஆ)தன்கைப்பட
பதவியைத் துறப்பதாக நாடாளுமன்றச் சபாநாயகருக்கு முகவரியிட்ட கடிதத்தை அனுப்புவதன்மூலம், (இ)இலங்கைப்பிரசை என்ற
அந்தஸ்தை இழப்பதன்மூலம், (ஈ) ஜனாதிபதியாகத்
தோந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டுவாரங்களில் வேண்டுமென்றே பதவியை ஏற்காதிருப்பதன்மூலம் தன் பதவியை இழக்கிறார். இவை ஜனாதிபதி தானாகவே பதவியிழப்பதற்கான வழிமுறைகள்.
ஆயினும்
38ஆவது உறுப்புரையின் இரண்டாம் பிரிவு ஜனாதிபதியை எவ்வாறு பதவியிழக்கச் செய்யலாம் என்பதுபற்றிப் பேசுகிறது. இவற்றுள் இன்றைய ஜனாதிபதிக்குப் பொருந்திவருகின்ற பிரிவுகளாக 38ஆவது உறுப்புரையின் இரண்டாம் பிரிவின் துணைப்பிரிவுகளான (1) அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம், (4) தனது பதவிக்குரிய அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட துர்நடத்தை அல்லது ஊழலுக்கான குற்றம் என்பவற்றை நோக்கலாம். உறுப்புரை 33—1இல் ஜனாதிபதியின் கடமைபற்றிக் குறிப்பிடுகையில் முதலாவதாக வருவது “அரசியலமைப்பு மதிக்கப்பட்டுப் போற்றப்படுதலை உறுதிப்படுத்தல்.”; என்பதையும் இங்கு பொருத்திப் பார்ப்பது சிறப்பானதாகும்.
இன்று
இலங்கைமக்களிற் பெருவாரியானோரின் கருத்து அரசியலமைப்பு மதிக்கப்பட்டுப் போற்றப்படுதலை உறுதிப்படுத்துவதைத் (33-1-அ) தனது பிரதான
கடமையாகக் கொண்டிருக்கவேண்டிய ஜனாதிபதி அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறித் தனது அதிகாரத்தையும் துஸ்பிரயோகம் செய்து வருகிறார் என்பதாகும். உச்சநீதிமன்றத்தின் நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாக விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையுத்தரவும் இக்கருத்துக்கு வலுவூட்டுவதைக் காணலாம். எனவே அரசியலமைப்பு விதிகளுக்கமைய ஜனாதிபதிமேல் குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்திற் கொண்டுவருவதற்கான வசதிகள் உள்ளன. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
சபாநாயகருக்கு
முகவரியிடப்பட்ட கடிதத்தின்மூலம். ஜனாதிபதியால் நிகழ்த்தப்பட்டவையெனக் கருதப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான விளக்கங்களும், அவை குற்றங்களே எனத் தாம் கருதுவதற்கான நியாயமான காரணங்களும், அவற்றை உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டியதன் நியாயங்களையும், உள்ளடக்கிய பிரேரணை யொன்றைச் சமர்ப்பிப்பதன்மூலம் குற்றப்பிரேரணையொன்றைக் கொண்டுவரலாம். மேற்சொல்லப்பட்ட விடயங்களோடு மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கும் குறையாதோரால் (குறைந்தது 113 உறுப்பினர்கள்) இப்பிரேரணை கையெழுத்திடப்பட்டிருப்பின்
இதனைச் சபாநாயகர் உகந்தது எனக்கருதினால் நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலிற் சோக்கலாம். அல்லது சேர்க்காமலும் விடலாம். இதுபற்றிக் கேள்விகள் எழுப்பமுடியாது.
ஆனால்
அத்தகைய ஒரு பிரேரணை மேற்சொன்ன தரவுகளோடு மூன்றிலிரண்டு பங்குக்குக் குறையாத (ஆகக் குறைந்தது 150பேர்) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்களோடு சமர்ப்பிக்கப்படுமாயின் சபாநாயகர் கட்டாயம் அப்பிரேரணையை நிகழ்ச்சிநிரலிற் சேர்த்தேயாகவேண்டும். இத்தகைய பிரேரணை குறிப்பிட்ட தினமொன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சபையால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டால் திரும்பவும் அதனை வருகை தராதோருட்பட மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றிலரண்டு பங்குக்குக் குறையாதோரால் (150க்குக் குறையாமல்) ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அது நிறைவேறியதாகக் கருதப்படும். அவ்வாறு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சபாநாயகர் உச்சநீதிமன்ற ஆய்வுக்கு அனுப்பிவைப்பார்.
உச்சநீதிமன்றி;ல் இப்பிரேரணை ஆய்வுக்கு
எடுத்துக் கொள்ளப்படும்போது தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான மறுப்புவிளக்கங்களை ஜனாதிபதி நீதிமன்றில் நேரிற் தோன்றியோ, அல்லது தனது சட்டத்ததரணிகள் மூலமோ சமர்ப்பிக்கலாம். இவற்றை ஆய்வுசெய்த உச்சநீதிமன்றம் தனது முடிவகளை சபாநாயகருக்கு அறிவிக்கும். அது பிரேரணையில் சார்த்தப்படட குற்றங்ளை ஜனாதிபதி செய்தாரென்றோ அல்லது குற்றங்களை அவர் புரியவில்லை என்றோ அமையக்கூடும்.
ஜனாதிபதி
குற்றஞ் செய்தாரென்று நிரூபணமாகுமிடத்து அது திரும்பவும் நாடாளுமன்ற விவாதத்துக்குட்பட்டு மேலுமொரு மூன்றிலிரண்டு பங்குக்குக் குறையாத வாக்குகளால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றத்தால் நீக்கமுடியும்.
இலங்கை
நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ஒருதரப்பு பெறுவது என்பது சிக்கலான ஒன்று. இந்தநிலையில் மூன்றுதடவை மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையைத் தக்கவைப்பதும் உச்சநீதிமன்றிலிருந்து பிரேரணைக்குச் சாதகமான தீர்ப்புப் பெறுவதும் மிகமிகச் சிக்கலான செயற்பாடுகளாகும். எனவே சட்டம் ஜனாதிபதியை நீக்குதற்கன அதிகாரத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொடுத்திருக்கும் அதே வேளையில் நடைமுறையிற் பலதடைகளையும் உள்ளடக்கியே வைத்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டால் ஜனாதிபதியைப் பதவி நீக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது புரியும்.
கந்தவனம்
கோணேஸ்வரன்.