வரும் இந்திய நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக பலகட்சிகள் தத்தமக்கு சாதகமாக காய் நகர்த்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தனது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை விலக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் கைகோர்த்துக்கொண்டார்.
டெல்லியில் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பின் பின்னர் தேசிய அளவிலான அணி மாற்ற நிகழ்வில் இந்த சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இடம் பெற்றது என்றாலும் ஆந்திராவிற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்ற காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது யாவரும் அறிந்ததே.
இதன் பின்னர் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துவரும் சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அவரின் அடுத்த முயற்சியாக அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்தித்தார். வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தலிலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது; “ஜனநாயகத்தை பாதுகாத்திடவும், நாட்டின் எதிர்காலம் கருதியும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்” என்று கூறினார்.
தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில்
“நாட்டினை பாதுகாக்கும் வகையில் நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோம், கடந்த காலத்தை நாம் மறக்க வேண்டும், தற்சமயம் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டியது ஜனநாயகக் கட்டாயம்” எனவும் கூறினார்.
இந்த சந்திப்பு தேசிய அளவிலான அணி மாற்றங்களில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதோடு தமிழ் நாட்டில் திரவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டு வைத்துள்ள கங்கிரஸுக்கும் தென் இந்திய ஆதரவை பெற்றுத்தரும் என்பதே நிதர்சனமாகும்.