
பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பட்டாசுகளை வெடிப்பதற்கான கால அளவை நிர்ணயித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில், தீபாவளி பண்டிகையன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்திருந்தது.
இரண்டு மணி நேரம் போதாது என்பதால், கூடுதலாக இரண்டு மணி நேரத்தை தமிழக அரசு கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு ஏழு நாள்களும், தீபாவளி பண்டிகைக்கு பின்பு ஏழு நாள்களும் என மொத்தம் 14 நாள்கள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசு இல்லாத சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நமது ஒவ்வொரு கடமையும், பொறுப்பும் ஆகும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தோடு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை புதுவை அரசும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் என அறிவித்துள்ளது.
