LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 11, 2018

வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்வதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன.

அரசிலமைப்பு ஜனநாயக மீறலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற கருத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அதே கருத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றது. எனவே ஒத்த கருத்தோடு நாங்கள் செயற்படுகின்றோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவித எண்ணப்பாடும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.



இன்றைய தினம் (11) மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்திருக்கின்றது. முழு நாடே இதனை எதிர்கொள்கின்றது. இது தொடர்பாக பல்வேறு திசைகளில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையிலே அரசியலமைப்பின் 19வது திருத்தம் மீறப்பட்டிருக்கின்றது என்பதே எங்களுடைய நிலைப்பாடாகும். இந்த அடிப்படையிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் எங்களுடைய செயற்பாடுகள் ஏனைய கட்சிகளும் அதனைக் கையாளுகின்றன என்ற வகையிலே அவர்களுக்குச் சமாந்தரமாகச் சென்று கொண்டிருக்கின்றது.


நான் அறிந்த வகையில் நாளைய தினம் பல வழக்குகள் பாராளுமன்றம் ஒத்திப் போடப்பட்டமைக்கு எதிராக 19ம் திருத்தம் சரியான முறையில் கையாளப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை மீறுகின்ற விதமாக பாராளுமன்றக் கலைப்பு இடம்பெற்றிருப்பதாகவும் கூறி நீதிமன்றத்திடம் இதனை வெளிப்படுத்துமாறும், பாராளுமன்றத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருகின்ற தீர்ப்பு ஒன்றை வழங்குமாறும் பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிகின்றோம். அத்துடன் கட்சிகள் மற்றுமல்லாது சிவில் சமூகங்கள், பொதுமக்களும் தங்களது அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக இவ்வாறு வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.


இது ஒரு மிக அவசரமான வழக்கு என்பதால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்படுகின்ற நாளைய தினத்திலேயே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையைச் சட்டத்தரணிகள் முன்வைக்கவும் உள்ளனர்.


இதனுடைய அவசியம் கருதி பிரதம நீதியரசர் அவர்கள் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்வார் என்று நம்புகின்றோம். அத்துடன் ஜனாதிபதி அவர்களால் ஏற்கனவே 14ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்று வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துமாறும் ஒரு வேண்டுகோள் இருக்கின்றது என்றும் அறிய முடிகின்றது. அவ்வாறான விடயங்களைச் செயற்படுத்தக் கூடிய தீர்ப்பு வழங்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அந்தத் தீர்ப்பு 14ம் திகதிக்கு முன்பு சொல்லப்பட வேண்டும். விசேடமாகச் சொல்லப் போனால் இது கேட்கப்படுகின்ற அன்றைய தினமே முழு நாளும் அமர்வு இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஒரு இட்டுக் கட்டுகின்ற செய்திகளாகவே இருக்கின்றது. இவ்வாறு யாரால் பார்க்கப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். சமநோக்குடையவர்கள், பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காழ்ப்புணர்வு இல்லாதவர்கள், ஒரு நேர்முகமாக விமர்சனம் செய்பவர்கள் இவ்வாறு சொல்வார்கள் என்றால் அது பற்றி நாங்கள் யோசிக்கலாம். ஆனால் இவ்வாறு சொல்பவர்கள் வேண்டுமென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு களங்கம் கற்பிக்க முற்படுகின்றார்கள்.


ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற போது இரண்டு பக்கங்கள் இருக்கும். இது பலருடைய கூட்டாக இருக்கும். மஹிந்த மைத்திரி அணி, ரணில் அணி என்று உதாரணத்திற்கு எடுத்தால் இதில் இந்த இரண்டு அணியினர் மட்டுமல்ல இவர்களோடு ஒத்து சிந்திக்கக் கூடியவர்கள் அனைவரும் இதில் சம்மந்தப்படுகின்றார்கள்.


அந்த வகையிலே நாங்கள் அரசிலமைப்பு ஜனநாயக மீறலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற கருத்தைக் கொண்டிருக்கின்றோம். அதே கருத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றது. எனவே ஒத்த கருத்தோடு நாங்கள் செயற்படுகின்றோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவித எண்ணப்பாடும் இல்லை.


எனவே பொதுமக்கள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரே நோக்கத்திற்காகப் பல பேர் சேர்ந்திருக்கின்றோமே ஒழிய ஒருவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த நோக்கத்தை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வகையிலே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகின்றோம் என்று ஒரு தப்பான அபிப்பிராயத்தைப் பரப்பவும் கூடாது, அதனை மக்களும் நம்பிவிடக் கூடாது.


சுமந்திரன் எவ்வித காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதென்பது நடவாத ஒரு விடயம். அவர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அவர் தேசியத்திற்காக மட்டும் தான் எங்களோடு இருக்கின்றார். அவர் இளமையில் இருந்து எமது தேசியம் தொடர்பாகச் சிந்தித்தவர். அவருடைய உணர்வுகள் எங்களுக்குத் தெரியும். அவர் அரசியலுக்கு என்று வரவில்லை. அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவருக்கு எண்ணம் இல்லை. எனவே அவர் தொடர்ந்தும் எங்களோடு தான் வேலை செய்வாரே தவிர அவர் எங்களோடு வேலை செய்ய முடியாது என்ற சூழ்நிலையும் அவருக்கு ஏற்படாது.


காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் என்பது 19வது திருத்ததில் இல்லை. அது 13வது திருதத்தில் உள்ள விடயங்கள். அது சம்மந்தமாகத் தான் நாங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அந்த அரசியலமைப்புச் சட்டத்திலே இந்த விடயங்களையெல்லாம் உள்வாங்கி கவனமாக அதற்குரிய உறுப்புரைகளை எல்லாம் அமைத்திருக்கின்றோம்.


அந்த உறுப்புரைகளைத் தாங்கிய அரசியலமைப்புச் சட்டம் தான் கடந்த 07ம் திகதி பாராளுமன்றத்திலே அரசியல் நிர்ணய சபை முன் முன்வைக்கப்பட இருந்தது. இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதனை பிரதமர் அவர்கள் தான் முன்வைக்க இருந்தார். காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் இந்தப் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திலே வருவதற்கு இருந்தது. இதற்கு முன்பதாக ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கூட எமக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாங்கள் எல்லா நாடுகளுடனும் சேர்ந்து வேலை செய்கின்றோம். எல்லா நாடுகளுடைய ஆலோசனைகளையும் பெறுகின்றோம். அந்த ஆலோசனைகளில் எங்களுக்கு ஏற்றவற்றை எடுத்துக் கொண்டு எமது சக உறுப்பினர்களுடனும் கலந்து செயற்படுகின்றோமே தவிர சந்தர்ப்பவசத்தில் வரும் வார்ர்த்தைகளை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப போட்டு அடிப்பது முறையான விடயம் அல்ல.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் தேர்தலில் போட்டியிடும். நாங்கள் ஏற்கனவே கட்டமைப்புடன் உள்ள கட்சி. நாங்கள் கூட்டுக் கட்சிகள் என்ற விதத்திலே எல்லாப் பங்காளிக் கட்சிகளுடனும் சேர்ந்து பேசியதற்குப் பிறகே எமது களநடவடிக்கைகள் அமையும்.

வியாழேந்திரன் தொடர்பில் ஏற்கனவே நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கு அவர் எவ்வித பதிலும் தரவில்லை. அதை விட அவரது புளொட் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும் அவரை முற்றாக நிராகரித்து விட்டார்கள். எனவே இனிமேல் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வந்து சேர்வதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன.

நாங்கள் தமிழ்த் தேசியத்தை நோக்கிச் செல்பவர்கள். தமிழ்த் தேசியத்தோடு செயற்படுபவர்கள். அந்தவகையில் எமது கொள்கையுடன் சேர்ந்தவர்கள் எம்மோடு சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்த பின்னர் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்வோம்  என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7