சிரியா நாட்டுப் புகழ்படைத்த தளபதி நாமானுடைய தொழுநோய் குணமடைய வேண்டும் என்று அவனுடைய மன்னனே விரும்புகின்றான். அவனிடம் தெரிவிக்கப்பட்டபடி இஸ்ராயல் நாட்டு தீர்க்கதரிசி எலிசாவிடம் அனுப்ப முடிவு செய்து, இஸ்ராயல் மன்னனிடம் நாமானையும் அனுப்பி, தகவலும் கொடுத்தனுப்புகின்றான். மன்னனுக்கு மன்னன் என்ற ரீதியில் தன் படைத் தளபதிக்கு நல்ல கவனம் கிடைக்கும் என்பது அவன் எண்ணம்.
இஸ்ராயல் மன்னனுக்கு சிரிய மன்னனின் இந்த ஏற்பாடு வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதன் உண்மை வித்தியாசமாகப் படுகிறது. சுகமாக்க முடியாத தொழுநோயாளியைத் தன்னிடம் அனுப்பி வைப்பதன் மூலமாகத் தன்னுடன் போர் தொடுக்கவும், தனது நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளவும் சிரியா மன்னன் போடும் திட்டம் என்று தன் மனம் கொண்ட போக்கில் புது அர்த்தத்தை அவன் உருவாக்கிக் கொள்கின்றான். அவன் காணும் உண்மை நிஜமான உண்மையினின்றும் வேறுபட்டு நிற்கின்றது.
சந்தர்ப்பம் ஒன்றிற்கும், தடை ஒன்றிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் உன்னுடைய அணுகுமுறையே என்று சொல்வார்கள். நாமானின் தொழுநோய் குணமாக்க அனுப்பப்படும் சந்தர்ப்பத்தில் இஸ்ராயல் மன்னனின் அணுகுமுறை பிழைத்துப் போகிறதை காண முடிகிறது. அச்சம் அச்சந்தர்ப்பத்தை தனக்கான ஒரு தடையாக எடைபோடப்பண்ணுகிறது. இறைவாக்கினர் எலிசா தன் நாட்டிலேயே இருப்பது அவனுக்கு ஒரு வாய்ப்பான சந்தர்ப்பம் என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றான். அவனது விசுவாசத்தைவிடவும், அவனது அச்சம் மேலானதாக இருக்கின்றது. எனவே உண்மையைத் தானே திரிபு படுத்திக் கொண்டு அச்சத்தில் அலறுகின்றான்.
கஷ்டமான காலகட்டத்தினூடாக ஒருவன் கடந்து செல்லுகின்றபோது அவன் எதிர் நோக்கும் சவால்கள் அவனை அழிப்பதற்காக இறைவனால் அனுப்பப்படுபவையல்ல. மாறாக, அவை அவனை பலப்படுத்தவும், அவனது வாழ்வை வளப்படுத்தவும், மேன்மைப்படுத்தவுமே தரப்படுகின்றவையாக இருக்கின்றன என்பதை நமது விசுவாசம் நமக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் ஒளியிலேயே நாம் சரியான உண்மையைக் கண்டு கொண்டு அதற்காகக் குரல் கொடுக்க முடியும்.
பல வேளைகளில் நாம் எது உண்மை என்பதைக் கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளவும் முனைவதில்லை. நம்மிடம் வரும் தகவல்கள் தரவுகளைக் கொண்டு இதுதான் உண்மையாக இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு அதற்கேற்றபடி நமது நடத்தைகளை வரையறை செய்து கொள்ளுகின்றோம். அதற்காகக் குரல் கொடுக்கவும் செய்கின்றோம். சரியான உண்மை வெளிவரும்போது நாம் வெட்கித்துப் போக வேண்டிய நிலமைதான் நமக்கு ஏற்படும்.
வாழ்வில் சரியானவற்றையும், நமக்குக் கைகொடுக்கக் கூடிய உண்மைகளயும் கண்டு கொள்ள நமக்குத் தடையாக இருப்பது நமது தலைதான். பெரும்பாலும் எதையும், ஏன்? எல்லாவற்றையுமே, நமது அறிவைக் கொண்டு நாம் எடைபோட முனைவதுதான் அதற்குக் காரணம். அறிவால் நோக்குவதைவிட்டு மனத்தால், விசுவாசத்தின் ஒளியில், உள்ளுணர்வின் அடிப்படையில் நோக்குகின்றபோதே பல நியாயங்களும், நீதிகளும், உண்மைகளும் நமக்குத் தெளிவாகும்.
இயேசுவும் மக்களுக்கு சரியானதை- உண்மையானதை எடுத்துச் சொல்ல முற்படுகின்றார். யாரிடம் இறைவாக்கு அனுப்பப்படவுள்ளதோ அவரிடமே அது அனுப்பப்படும் என்கின்ற அவர், எலிசாவின் காலத்தில் அவர் நாட்டில் பல தொழுநோளிகள் இருந்தும் சிரியா நாட்டு நாமான்தான் குணமாகின்றான், எலியாவின் காலத்தில் இ;ஸ்ராயலர் மத்தியில் கைம்பெண்கள் பலர் இருந்தபோதும் பிறநாட்டுக் கைம்பெண்ணிடமே அவர் அனுபப்பட்டார் என்ற உண்மையைச் சொல்லி அவர்கள் மத்தியில் இருந்திருக்கக் கூடிய விசுவாசக் குறைபாட்டை எடுத்துக் காட்டியபோது அவர்களால் அந்த உண்மையைச் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே உண்மை கசக்கிறதேயென்பதற்காக, 'இறைவாக்கினன் ஒருவன் தன் சொந்த மண்ணில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை' என்று இயேசு சொன்னதைக் கூட மறந்து விட்டவர்களாக அவரையே மலையிலிருந்து தள்ளிவிட எத்தனிக்கின்றார்கள். 'எப்பொருள் எவர் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்ற நியதியை வாழ்வில் நாம் கைக் கொள்ளத் தவறக் கூடாது.
கோழைகள் உண்மையைக் கண்டு அஞ்சுகிறார்கள்: அதனால் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். நம்பிக்கையில் திளைத்திருப்பவர்களோ, தொடர்ந்தும் முயன்று கொண்டேயிருப்பார்கள். தாங்கள் கண்டு கொண்ட உண்மைகளுக்காக வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
நம் வாழ்வில் அர்ப்பணிப்பும், விசுவாசமும், விடாமுயற்சியும், உண்மைக்கான தேடுதலும் இருக்கின்றவரையில் தோல்விகள் எம்மை அணுகுவதில்லை. நம் வாழ்வும் பொய்த்துப் போவதில்லை.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்