மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு யானைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்த நிலையில் காணப்பட்டதாக பொது மக்கள் மூலம் அறியக்கிடைத்ததாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணானை மேற்கு கிராம சேவகர் பிரிவில் சாளம்பன்சேனை பகுதியில் உள்ள நீரோடையில் உயிர் இழந்த நிலையில் நான்கு யானைகள் கிடப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தியதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் போது புணானை குளம் உடைக்கப்பட்டு சாளம்பச்சேனை ஓடையில் நீர் அதிகரித்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் நீரோடையை கடப்பதற்கு முற்பட்டவேளையில் யானைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலனறுவை வன ஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரி மற்றும் கிரான் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உயிர் இழந்த யானைகளைப் பார்வையிட்டதுடன் பிரதேச மக்களின் உதவியுடன் நீர் வற்றியதுடன் யானைகளைப் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிரான் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி எஸ்.எச்.ஜி.ஏ.பேரேனந்த தெரிவித்தார்.
யானைகள் கூட்டமாக மேற்குறித்த நீரோடையினை கடந்து அருகிலுள்ள பிரதேசங்களான புணானை, வாகரை, கிருமிச்சை, ஆலங்குளம் போன்ற கிராமங்களுக்கு செல்வது வழக்கமாகும் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.