கஸல் என்பது காதலியுடன் பேசுதல் என்று அர்த்தப்படுவதாக புரிந்து கொள்ளப்படுவதோடு மனித வாழ்க்கையில் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பிரியத்துக்குரியவளிடம் உரியவன் பேசும் காதலிஷ மொழி என்றும் கூறப்படுகிறது.
கஸல் அரேபியாவில் புகழ் பெற்ற கஸீதாவிலிருந்து வார்த்தெடுக்கப்பட்ட வடிவமாகும்.கஸீதா என்றால் ஒரு குறிக்கோளை நோக்குதல் என்று பொருள்படும்.கஸல் காதலையும் இறைமையையும் பாடுவதோடு,வாழ்வின் எதார்த்தத்தையும் பாட வேண்டும்.
கோ.பாரதிமோகனின் கஸல் கவிதைகள் காதலின் இருமுனை பண்புகளை பேசுவதை நான் காண்கிறேன அந்நியப்பட்ட உரியவனது பிரதியை நினைத்து உருகும் உரையாடல் அணுகுமுறைமையும் வாசகபிரதி புனைவு நுட்பத்திற்குள் பயணப்படும் வகையில் மொழியியல் உருவாக்கமும் என பண்புகளைத் தருகின்றன.
கோ.பாரதிமோகனின் கவிதைகள் கஸல் சூழலுக்கு மிகையுணர்ச்சிகளை அல்லது உணர்ச்சிக் கழிவுகளை நுகர்முனைக்குத் தரவில்லை மாறாக வாசகனுகுள் சுயேச்சையாக ஒரு வளர்ச்சி போக்கை தருகின்ற சாத்தியத்தை கொண்டுள்ளது.
பாரதியின் கஸல் கவிதைகளை புதியதோர் இடத்தில் உட்கார வைத்து பார்க்க முடிவதோடு வாழ்வின் தளத்திலிருந்து அனுபவ வரைதலின் நிமிர்த்தமான பிரதிகளாகவும அவை வாசிப்பாளனுக்குள் உட்கார்ந்துவிடுகின்றன.பாரதி யதார்த்தத்தை படைப்பவனாவும் அவ் யதார்த்தம் வாசிப்பாளனுக்குள் கிளை நதிகளாய் மனம் முட்டி பாய்வதையும் இக்கவிதைகள் மறு உருவம் தருகின்றன.
காதல் வயப்பட்ட வரிகள் என்பதால் உணர்வுபூர்வமான கஸல் இங்கு ஒலிப்பதை நேரடி வடிவமாக வலியின் ஈரத்துடன் ஒரு பெருங்கடல் நமக்குள் உருட்டி எறியப்படுவதாக சொல்லுவேன்.நவீன தமிழ் கஸல் கவிதையின் முதல் தொகுதியை கவிகோ அப்துல் ரகுமான் மின்மினிகளால் ஒரு கடிதம் பிரதியினூடாக தந்திருப்பதோடு அவை காதலின் உள்ளார்ந்த சோகத்தையும் ஆன்மிகத்தையும் பேசி துழாவுவதை அவதானிக்க முடியும்.கஸல் கவிதைகளில் எப்போதுமே மனநிலையின் விளைவுகள் வெவ்வேறு நிறங்களில் அமைந்துவிடுவதை புலத்தை ஊடுருவிச் செல்லும் அந்த மொழியியல் அமைப்பு பாரதியின் கஸலிலும் நிறையவே விரவிக்கிடக்கின்றது.
வாசிப்பாளின் பயணத்தை நுட்பமாக அறிந்த புனைவாளனாய் மிக எளிய உரையாடலூடாக பாரதி தனது எல்லாக் கஸலையும் அணுகிய அமைப்பியல் எனக்கு பிடித்திருக்கிறது.இந்த அமைப்பியல் முறைமையி்னூடாக பிரிதொரு வாசகப் பிரதி உருவாக்கத்தினையும் நெருங்கத் தொடங்குகிறார்.காதல் எனப்படுவது அதிகார குரலில் இயங்கு நிலையை அடையும் போது அங்கு காதல் வன்முறையையும் அரசியல் எதிர் நிலையில் கட்டியெழுப்பப் படுவதையும் காண முடியும் இவ்வகை கவிதைகளையும் பாரதியின் பிரதிகள் முன்வைக்கின்றன
கஸல் எனப்படுவது பெருந்துயரின் ஒப்பாரி எனவும் அதன் பாதையில் இசைக்கப்படும் முகாரி ராகம் எனவும் உணரப்படுகிறது இந்த உணர்வு வடிவங்களை பாரதியின் கஸலில் வாசிப்பாளன் வெவ்வேறு அனுபவங்களாய் புரிதலுக்கு உட்படுத்த முடியும்.
பாரதியின் கஸல் பிரதியொன்று,
பெட்டிக்குள் அடைக்க இசைக்கும்
மகுடியைப் போன்றது
உன் குரல்
பிழையொன்றுமில்லை
அறிவதில்லை ஒருபோதும்
விட்டில்கள் தன் சாபத்தை
அறிந்து கொண்டேன்
பசுமை படர்ந்த என் பாலை
ஔிக்குள் மறையும் இருள் போன்றதென
யார்தான் இணங்க மறுப்பார்கள்
வசீகரத்தின் கையசைப்புக்கு
மூழ்கிப் போகிறேன் நான்
இந்தக் காதல்
ஒரு புதைகுழி.
ஏ.நஸ்புள்ளாஹ்