எனினும், நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான செலவீனங்களில் கனடா போதுமான இலக்குகளை அடைந்துள்ளதென கனேடிய தேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளார்.
ஹலிபிக்ஸில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நேட்டோ நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் டர்னர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே கனேடிய பாதுகாப்பு அமைச்சர் தமது நாட்டின் பாதுகாப்பு இலக்குகள் குறித்து விளக்கமளித்தார்.
நேட்டோ பாதுகாப்பு செலவீனங்களுக்காக அதன் உறுப்பு நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதத்தை ஒதுக்கவேண்டுமென கடந்த 2014ஆம் ஆண்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எனினும், கனடா இன்னும் அந்த இலக்கை எட்டவில்லை. ஆனால், 2024ஆம் ஆண்டுக்குள் கனடா தமது பாதுகாப்பு ஒதுக்கீட்டை 1.46ஆல் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கனேடிய தேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கனடா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், நேட்டோ இலக்குகளை அடைய ஒருபோதும் பின்வாங்கியதில்லையென்றும் கனேடிய தேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவின் பாதுகாப்பு ஒதுக்கீடுகள் தொடர்பாக பிரதமர்
ஜஸ்ரின் ட்ரூடோவும் திருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது போதுமானதல்லவென அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உறுப்பினர்கள் குறிப்பிட்டதோடு, நேட்டோவில் உறுதியளிக்கப்பட்ட 2 வீத பாதுகாப்பு ஒதுக்கீட்டை கனடா அடையவேண்டியது அவசியமென வலியுறுத்தினர்.