இன்று இனிதே திரு நிறைவுபெறும் தமிழ் கடவுள்
முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத நாளை ஒட்டி அவரின் பக்தர்களுக்காக ..
இந்த திருமுருக திருவந்தாதியை முருகப்பெருமானின் அருளாசியோடு சமர்ப்பணம் ஆகின்றது....
.......திரு முருக திருவந்தாதி.......
*************************************
இருதாள் ஏற்றிப்பணிந்தே வேண்டி
இபமாமுகனே இறைவா துணைவா
இனிதே எந்தன் முருக அத்தாதி
இயல்பாய் சிறக்க வரம்தா வரதா
****காப்பு)****
மலைவாழ் மன்னா சங்கரன் புதல்வா
மலைகுற வள்ளி மங்கள நேசா
புவிவாழ் தமிழர் சுந்தர தலைவா
மண்டூர் நகர மண்ணாள் அரசே
.........................................(1).....
அரசே அரசே தமிழின் அரசே
அரனின் மகனே தணிகாசலனே
உகந்தை பதியின் உன்னத தலைவா
தமிழர் கடவுள் தனிப்பெரும் இறைவா
.........................................(2).....
இறைவா முருகா சிவனின் மகனே
சிவகுரு நீயாய் பிரணவ பொருளே
அகர உகர மகர தமிழின்
முப்பொருள் உரைத்த நீயே வேலா
.........................................(3).....
வேலா சரணம் விசாகா சரணம்
விளங்கு தண்டை கால சரணம்
கண் நிறைந்த கோலா சரணம்
குமரி பெற்ற பாலா சரணம்
.........................................(4).....
சரணம் சரணம் சண்முகத்தரசே
சரணம் சரணம் சரவணபவனே
சரணம் சரணம் என் உயிர் தமிழா
சரணம் சரணம் என்தமிழ் முருகா
.........................................(5).....
முருகா முருகா திருமால் மருகா
வள்ளி மணாளா வடிவேலவனே
அருள்வாய் அழகா நல்லூர்க்கந்தா
வெருகல் பதியின் வெற்றிவேலவனே
.........................................(6).....
வெற்றிவேலவனே வீரவேலவனே
சக்திவேலவனே கந்தவேலவனே
கந்த கடம்பா கதிர்வேலவனே
மகிழ்கதிர்காம துறையின் வாசா
.........................................(7).....
வாசா நேச வாசவன் மருகா
தேவ சேனாபதியே தேவா
தேவயானி உத்தம கணவா
தேவர்வீர பாகுத்தோழா
.........................................(8).....
தோழா நீயே இருதாள் அழகா
இருதோள் அழகும் ஈராருகரமும்
ஆறுமுகமும் அழகிய மார்பும்
சேவல்கொடியும் கையில் குகனே
.........................................(9).....
குகனே குழந்தை குணமானவனே
கருணாநிதியே கருணை கடலே
செல்ல சன்னதி உறையும்கடவுள்
இறவா பிறவா அருள்தா வரதா
........................................(10).....
வரதா வரதா கலியுக வரதா
வாகை மாலை வன்னி இலையும்
சூடி சூரன் வன்மார்துளைத்து
திருப்பெரும்குன்றின் குமரிக்குமரா
........................................(11).....
குமரிக்குமரா செந்தில் குமார
திருசீரலைவாய் திருச்செந்தூரில்
சண்முகர் ஜெயந்தி நாதர் என்றும்
குமாரவிடங்கர் அலைவாய் பெருமாள்
........................................(12).....
பெருமாள் மருகா பெருமான் மகனே
சுவாமிமலையில் இருந்தே குருவாய்
பிரணவ ரகசியம் சிவனுக்குரைத்த தகப்பன் சாமி சுவாமிநாத
........................................(13).....
சுவாமிநாதா சுப்பிரமணியா தணிகைமலையின் கணிகாசலனே
திருத்தணி வாசா அற்புத நேசா
ஐந்தாம் படையின் வீடாய் கொண்டாய்
........................................(14).....
கொண்டாய் குலமலை கொற்றைமலையை
பழமுதிர்சோலை ஆறாம் படையாய்
நாவல் பழத்தை உதிர்த்து கொடுத்தாய்
ஒளவைக்களித்த அற்புதம் அறிந்தேன்
........................................(15).....
அறிந்தேன் அறிந்தேன் அறியா மறையை
தெளிந்தேன் தெரிந்தேன் உந்தன் சுவையை
சுவைத்து திளைத்தேன் உன் திருநாமம்
முத்தொழில் செய்யும் மூவரும் நீயே
........................................(16).....
நீயே அவராய் அதற்கும் மேலாய்
அழியா அழகும் குறையா மனமும்
குன்றா இளமை தெவிட்டா இனிமை
ஒன்றாய் நின்ற ஞானக்கொழுந்தே
........................................(17).....
ஞானக்கொழுந்தே ஞானப் பழமே
மங்களமணியே ஒளிக்கொடை அழகே
சாத்வீக வீர சடாச்சர நாதா
சகரம் ரகரம் சரவணபவனே
........................................(18)...
சரவணபவனே சைலொளிபவனே
அழகிரிபவனே சிவகுரு நாதா
சிவனால் உதித்த சித்திரவேலா
வேலே உனது சிவகிரிசக்தி
........................................(19)...
சிவகிரிசக்தி கிரி என மலையை
இடும்பன் காவடி கட்டி வந்தான்
ஆவினன் குடியில் ஆட்க்கொண்டவனை
காவல் தெய்வம் ஆக்கி மகிழ்ந்தாய்
........................................(20)...
மகிழ்ந்தாய் கந்தா திருப்புகழ் கண்டு
அருணகிரியின் அருமை தமிழில்
மயில் மீதேறி கட்சி தந்தாய்
தாய்மடி விட்டு ஓடி நீ வந்தாய்
........................................(21).....
வந்தாய் குமர குருபரர் முன்னே
தந்தாய் அவர்க்கு பேசும் திறனை
குமர குருபர குமரா சரவண
அருள் குருமணியே கரியின் இளையோன்
........................................(22).....
இளையோன் முருக அனுதினம் உனையே
ஓதும் அருளை நீதர வேண்டும்
கொடிய வினைகள் பூண்டுடன் ஒழிய
மயில்மீதேறி விரைவாய் வருவாய்
........................................(23).....
வருவாய் அயிலும் மயிலும் உடனே
துணையாய் என்முன் சீக்கிரம் வருவாய்
கருணை கடலே சங்கரன் புதல்வா
சங்கரி தேவி செல்ல குழந்தை
........................................(24).....
குழந்தை வேலா வள்ளிமணவாளா
வயலூர் கந்தா வடிவேல்கரசே
வளமாய் வாழ வரமது அருளி
சீர் பெற்றென்னை சிறப்புற செய்வாய்
........................................(25).....
செய்வாய் குகனே செவாய்யின் தலைவா
சென்நிற ஆடை அணியும் பிரியா
எனக்கென யாவும் கிடைத்திட வேண்டி
யான்உனை பாடும் திருவந்தாதி
........................................(26).....
திருவந்தாதி தினம் உனை நினைத்து
பாடிட நாவில் சரஸ்வதி வசிக்க
கேட்போர் அவரின் தீவினை அகல
படித்திட பாவம் பொடிபட விலகும்
........................................(27).....
விலகும் வினையும் பகையும் அகலும்
தண்டாயுதத்தான் தாள் பணிந்தேத்தி
எடுத்திட்ட தேகம் திடத்துடன் இருக்க
அருள்வாய் மணியே முத்துக்குமாரா
........................................(28).....
முத்துக்குமாரா முத்தமிழ் எழிலே
ஆறுமுகமே அளப்பெரும் சக்தி
ஒருமுகம் வந்து சம்காரம் செய்ய
முக்தி பக்தர் அளித்திட ஒருமுகம்
........................................(29).....
ஒருமுகம் வந்து ஞானம் அருள
ஒருமுகம் வந்து அஞ்ஞானம் அகற்ற
மறுமுகம் தன்னில் வள்ளியோடிணைய
பக்தர்கருளும் ஒருமுகம் கண்டேன்
........................................(30).....
கண்டேன் உனையே உருவாய் கண்டேன்
கண்டேன் உனையே அருவாய் கண்டேன்
கண்டேன் உனையே குருவாய் கண்டேன்
கண்டும் கேட்டும் களி கொண்டேன்
........................................(31).....
கொண்டேன் உனையே துணையாய் கொண்டேன்
கொண்டேன் உனையே எதிலும் கொண்டேன்
கொண்டேன் உனையே சிவனாய் கொண்டேன்
சிவகுரு நீயே முழுமுதல் பொருளே
........................................(32).....
பொருளே அருளே பொதிகை மலையில்
அகத்தியருக்கு அருளும் அமுதீசா
சித்தர்க்கு எல்லாம் சித்தன் நீயே
சித்தாண்டி புகழ் வீரா
........................................(33).....
வீரா நீயும் நவவீரருடனே
வீர போரில் சூரனை வென்றாய்
வேலாயுதத்தால் சூர்மார் துளைத்து
சேவலும் மயிலும் நீயதை வென்றாய்
........................................(34).....
வென்றாய் நீயே அமரர் மனதை
வென்றாய் நீயே அமரன் மகளை
வென்றாய் என்றும் தினைக்குற மகளை
நின்றாய் என்னுள் என்றும் துணையாய்
........................................(35).....
துணையாய் நின்று காத்திட என்னை
விரைவாய் வரட்டும் வேலும் மயிலும்
சிரித்தவர் பழித்தவர் இகழ்த்தவர் எல்லாம்
அதிர்ந்திட நானும் உயர்ந்திட வேண்டும்
........................................(36).....
வேண்டும் முருகா கடைக்கண் பார்வை
வேண்டும் உந்தன் அருளும் பொருளும்
வேண்டும் உந்தன் இளமையும் திறமையும்
வேண்டும் உந்தன் முத்தமிழ் அறிவும்
........................................(37).....
அறிவும் திறனும் அழியா நின்று
என்னுள் என்றும் விளைந்திட வேண்டி
உந்தன் புகழை படி மகிழ்தேன்
சுரகோன் மருகா பத்துமலையின்
........................................(38).....
பத்துமலையின் கோ தண்டபாணி
மாவிட்டபுரத்தில் மா கந்தசாமி
எல்லா நாகரின் அரசே முருகா
ஏராளம் அருளும் என்னருள் விசாகா
........................................(39).....
விசாகா வேலா குஞ்சரி மணாளா
மாலவன் மருகா மலரவன் பேரா
ரெத்தின தீபா சக்தி பாலா
சிகிவாகனனே சுகிர்த தீபா
........................................(40).....
தீபா ஒளியே தணிகை வேலா
சென்னிமலை தன்னில் கிரகிரி வேளே
அருள்வான் எவர்க்கும் ஏவையும் அருள்வான்
பிணிகள் நீங்க மலையில் தேடும்
........................................(41).....
தேடும் இடத்தில் இறைவன் இருப்பான்
காணும் இடத்தில் முருகன் இருப்பான்
பாடும் பாவில் அதிலும் இருப்பான்
தமிழும் வாழும் இடத்தில் இருப்பான்
........................................(42).....
இருப்பான் அவனும் அகிலம் எல்லாம்
எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான்
தமிழின் சுவையில் தமிழர் மணத்தில்
இருப்பான் எந்தன் ஆறுதலையான்
........................................(43).....
ஆறுதலையான் அவன் ஆறுதலை தருவான்
மேருமலையான் அவன் இன்பசுகம் தருவான்
கோண மலையில் அவன் வில்லூண்டி வருவான்
அந்தாதி எழுதிட சொல்லூண்டி தருவான்
........................................(44).....
தருவான் அவனும் ஆயிரங்கள் தருவான்
தருவான் எனக்கு தன்பலம் தருவான்
தருவான் எனக்கு ஞானமும் செல்வமும்
வேண்டும் யாவும் கருணாகரனே
........................................(45).....
கருணாகரனே கருணாலயனே
கிருபாகரனே குலிசாயுதேனே
ஐந்து முகத்தோடு அதோ முகம்கொண்டு
ஆறாய் நின்ற ஆறுமுகத்தவனே
........................................(46).....
ஆறுமுகத்தவனே ஆனைமுகன் தம்பி
வேடர்குல வள்ளி வென்ற வடிவேலா
ஆதி வயலூரில் சந்தக் கவி கொண்டு
திருப்புகழ் போற்றும் எந்தன் திருமாறா
........................................(47).....
திருமாறா முருகேச திறனான ஒருஞானி
ஓம்கார உருவாகி உயர்கின்ற பெருஞானி
வனசாரர் வள்ளிக்கு வாய்த்த மணவாளா
கணநாதர் பின்னுக்கு சிவநாதர் மகனே
........................................(48).....
மகனே திருமாலின் மருகா நீ
பக்தருக்கு முத்திதரும் முதல்வோனே
சித்தற்கு சித்தருளும் தலைவா நீ
குறிஞ்சி மலையின் கிழவோனே
........................................(49).....
கிழவோனே கந்தவேலே கருணைக்கு உன்தன்பெயரே
பெருவாழ்வை தருவோனே
குன்றெல்லாம் குமரேசா
........................................(50).....
குமரேசா குகனேசா
கதிர்காம பெருமானே
மிகையான பெருவாழ்வை
பெறவேண்டி சந்தத்தில்
........................................(51).....
சந்தத்தில் உனைப்பாடி
அந்தாதி படைக்கின்றேன்
அழகோனே அழகேச
அருள்வேண்டும் கிரிராஜா
........................................(52).....
கிரிராஜா தன தான
தமி தொமி திதியாடும்
மயிலேறி அயிலேந்தி
போர்வென்ற பெருவீரா
........................................(53).....
பெருவீரா பெருமானே
கொடுசூரர் படை மோதி
விடு வேலை வடிவேலா
பகை வெல்ல அருள்வோனே
........................................(54).....
அருள்வோனே குருசாமி குறவள்ளி குணவாளா
வெல்படையின் நாயகனே வேண்டியதை தருகிறான்
ஏற்றியவன் பா அதனை நாள்முழுதும் சொல்லவே
செந்தமிழின் ஓசையும் கந்தனவன் நாமமும்
........................................(55).....
நாமமும் நாவினிலே நாதவிந்து தத்துவம்
நான்மறையின் உண்மையும் நானறிந்து கொண்டதும்
பார் அறிந்து சொல்கிறேன்
பலர் அறிந்து கொள்ளவே
........................................(56).....
கொள்ளவே கொள்ளவே விரதம் மேற்கொள்ளவே
செய்த பாவம் ஊழ் வினைகள் பாழதுவாய் போய்விடும்
பிரணவனை எண்ணியே விரதம் மேற்கொள்ளவே
பரப்பிரம்மம் ஆகுவீர் பலனாகி வாழுவீர்
........................................(57).....
வாழுவீர் செம்மையாக வையகத்தில் வாழவே
ஐயமற்று ஐங்கரன் தம்பியை பற்றினால்
சங்கரன் மகனுமக்கு சங்கடங்கள் நீக்குவார்
சாவிலும் உமதருகில் யமனை அண்ட விட்டிலார்
........................................(58).....
விட்டிலார் விட்டலார் என்றும் கைவிட்டிலார்
பன்னிரெண்டு கரத்திலும் ஆயத்தங்கள் கொண்டவர்
பாரிலே பரமனுக்கு ஒத்ததாக நின்றவர்
ஐந்து பஞ்சபூதமும் ஒன்றதாகி உள்ளவர்
........................................(59).....
உள்ளவர் என்னுளே உம்மிலே உள்ளவர்
உள்ளவர் சிவனுமாகி உலகமெலாம் உள்ளவர்
சிவனும்வேறு முருகர்வேறு வேறுவேறு அல்லவே
இரண்டுமே ஒன்றதாகி நின்றதோர் உண்மையே
........................................(60).....
உண்மையே உண்மையே அழகுதமிழ் உண்மையே
உண்மையே உண்மையே
அழகன் முருகன் உண்மையே
அண்ணல் அவர் உண்மையே
அகிலம் எல்லாம் காணாலாம்
.......................................(61).....
காணலாம் புலன்களால் ஆண்டவனை காணலாம்
கேட்கலாம் காதிலே அவனின் ஓசை கேட்கலாம்
விட்ட மூச்சு தன்னிலும்
துடிக்கும் இதய ஓசையில்
.......................................(62).....
ஓசையில் அண்டமும் பிண்டமும் வந்ததே
பிரணவத்தின் பொருள் விளக்கி
சொல்லிவிட்ட உத்தமா
மெய்துலக்கி பல்துலக்கி தூய்மை சொல்லும் மூடரே
அகம்துலக்கி உயிர்துலக்கி சுத்தமான தன்மையே
.......................................(63).....
தன்மையே தாற்பரம் கொண்டதா சண்முக
சித்தனே சற்று கொஞ்சம் விளக்கிச் சொல்லமுடியுமா
சத்குரு நீயாதாகி வந்து சொல்லமுடியுமா
செத்தசூடு காடுஅலையும் சிவனாரின் புத்திரா
.......................................(64).....
புத்திரா நீ எனக்கு புத்திதந்த வள்ளலே
பிரமனுக்கும் தலையிலே கொட்டி விட்ட பாலகா
ஆணவம் கலையவே ஆண்டவன் உனைத்தொழ
சிக்கலில் உள்ளவர் துயர்களையும் வேலவர்
.......................................(64).....
வேலவர் சிங்கராவேலவர் சிக்கலில் உள்ளவர்
அம்பிகை கையிலே வெல்பெற்ற தலமிது
நலமோடு வாழவே சிக்கல் சென்று பாருங்கள்
நோய் நொடிகள் போக்குவார்
சிங்காரவேலர்
.......................................(65).....
சிங்கார வேலவர் என்று பெயர் கொண்டவர்
சிங்கார வேலவர் வள்ளி தெய்வானையுடன்
சுந்தர விநாயகர் முனைவர் வணங்கியே
வேல் தந்த அன்னையை கண்களால் காணுவீர்
.......................................(66).....
காணுவீர் அன்னையை வேல்நெடுங்கண்ணியாய்
வேல் வாங்கும் காட்சியை காண்பதே புண்ணியம்
முகத்தினில் வியர்வையும் துளிர்த்துடும் எம்பிரான்
வேல்பெரும் கட்சியை காணவே அதிசயம்
.......................................(67).....
அதிசயம் அதிசயம் சிவனும் ஒரு அதிசயம்
அதிசயம் அதிசயம் அவன் மகனும் அதிசயம்
ஆயுதங்கள் அதிசயம் ஆறுமுகமும் அதிசயம்
திருக்கைவேலும் அதிசுகம்
.......................................(68).....
அதிசுகம் ஆண்டவன் நினைப்பில் நின்றுருப்பது
அதிசுகம் என்றுமே பற்றுஅற்று இருப்பது
தாமரையில் நீரைப்போல் வாழ்வில் இங்கு இருப்பது
உள்ளம் என்ற கோவிலில் உள்ளிருக்கும் உத்தமா
.......................................(69).....
உத்தமா வேலவா கருணையுள்ளம் கொண்டவா
மெல்லினம் இடையினம் வல்லினம் கொண்டவா
தெள்ளு தமிழ் வள்ளியை மணம்புரிந்து கொண்டவா
தமிழ் மனக்கும் இடமெல்லாம் நின்று இருக்கும் சாமியே
.......................................(70).....
சாமியே சோதியே விண்ணோர் சிறை மீட்ட மெய் ஞானியே
ஞான சக்தி ஆத்மனே எனக்கு
ஞான கண் திறந்த சோதியே
.......................................(71).....
சோதியே தோன்றப் பொருளின் ஒளியே
நெற்றி பொறியே ஆற பிழம்பே
ஆறாய் இருந்ததோர் ஒன்றே
கார்த்திகை கன்னியர் அன்பு செல்வமே
.......................................(72).....
செல்வமே சக்தியின் மைந்தனே
நந்தனே சக்தி வேலே முருகா
அப்பனுக்கு அப்பனே ஆண்டி சுப்பனே
தந்தை முக்கண் பிறப்பே சொல்லே
.......................................(73).....
சொல்லே பொருளே சொல்லும் பொருளே
அல்லும் பகலும் உனைத்துதித்து
பொல்லா வினையும் போய் அகன்று
இல்லாபிறவி அருளுவதே இனி எனக்கு
.......................................(74).....
எனக்கு துனை உன் கைவேலும்
எனக்கு துனை உன் திருநாமமும்
எனக்கு துனை உன் ஆறுமுகமும்
எனக்கு துனை என்றும் சேவற்கொடியே
.......................................(75).....
சேவற்கொடியே செஞ்சசுடர் மணியே
காவல் படையே உன் வேல் படையே
நாவல் பழம்நல்கி நற்தமிழ் கேட்டு
மகிழ்ந்த என் முருகா என்முன்னே வெளிப்படவே
.......................................(76).....
வெளிப்படவே உன் பொருளும்
வெளிப்படவே உன் அருளும்
வெளிப்படவே என்முன்னே முருகா
நான் காண வேண்டும் உன் திருரூபம்
.......................................(77)....
திருரூபம் காணும் காட்சி
திருப்ப திரும்ப கிடைத்திட வேண்டும்
நினைக்கும் போதும் அழைக்கும் போதும்
முருகா முன்னே வந்திடுவாயே
.......................................(78)....
வந்திடுவாயே முருகா முன்னே
அத்தாதி கேட்டு வந்திடுவாயே
முருகா நீயும் முன்னே வரவும்
வாழ்வே என்றும் இனிக்கும்
.......................................(79)....
இனிக்கும் இந்த திருவந்தாதி
படிப்போர் மனதில் நிலைத்திட
பாடும் வீட்டில் பொன்னும் பொருளும் என்றும் நிலைபெற
.......................................(80)....
நிலைபெற நிம்மதி மகிழச்சியுமே
படித்திட பாவம் விடுபடவே
வாரம் தோறும் படித்திடுவீர்
முருகன் அருளை பெற்றுடுவீர்
.......................................(81)....
பெற்றுடுவீர் பெரும் புகழும்
செல்வம் எல்லாம் பெற்றுடுவீர்
வாழும் வாழ்வில் இன்பம் பெற்று
வளமோடு வாழ படித்திடவே
.......................................(82)....
படித்திடவே பதினாறு செல்வமும்
படித்திடவே பிறப்பில்லா மென்மையும்
படித்திடவே பரம் பொருள் உண்மையம்
படித்தே உயர உண்மை கல்வியும்
.......................................(83)....
கல்வியும் புகழும் வலிமையும் வெற்றியும்
நன்மக்கள் உறவும் என்றும் குன்றா பொன்னும்
நெல்லும் என்றும் நல்லுள்ளமும் நுகர்ச்சியும் அறிவும் ஆற்றலும் நல்லுகவே
.......................................(84)....
நல்லுகவே முருகா நீ எனக்கு
பொறுமையும் என்றும் இளமையும்
துணிவும் நோய்யில்லா நீண்ட வாழ்வும்
அருளுகவே முருகா மேன்மையும் பெரு வாழ்வும்
.......................................(85)....
வாழ்வும் தாழ்வும் உனதே முருகா
நீஎனக்கு மேலும் பலமும் சக்தியும்
என்றும் குறைவில்லா கீர்த்தியும்
என்றும் மாற பத்தியும் கனிந்து
.......................................(86)....
கனிந்த பொலிவும் புன்னகை பூத்து
கதிர்மதிய திருமுகமும் முருகா
மயில் மேல் ஏறி அணிந்த கீரிடமும்
முத்தணி மார்பும் ஆறிரு புயமும்
.......................................(87)....
புயமும் அதன் மேல் பட்டும்
பன்னிரு கரமும் போராயுதமும்
வில்லும் அன்பும் வஜ்ஜிராயுதமும்
அங்குசம் தண்டம் கமலாயுதமும்
.......................................(88)....
கமலாயுதமும் கதிர்வேல் அழகும்
விமலா நீயே அமரர் முனிவர்
அவர்களுக்கருளி குறைகள் தீர்த்தாய்
வீணாய் நானும் அழியாதிருக்க அருளுகவே
.......................................(89)....
அருளுகவே அருள் செல்வா
வாழ்வே மலர அருளுகவே
மகிழ்வுடன் நானும் யாவும் மகிழ
நீயும் அருளுகவே அருள்தமிழே
.......................................(90)....
அருள் தமிழே என் பொருள் தமிழே
உயிர் தமிழே எந்தன் இசை தமிழே
நானும் நீயும் தமிழே தமிழே
கந்தா நீயே தமிழ் கடவுள்
......................................(91)....
கடவுள் தமிழர் தனி கடவுள்
தமிழும் எமக்கு ஒருகடவுள்
சுவையாய் இனிக்கும் தமிழோசை
அங்கும் நீயே முருகோனே
......................................(92)....
முருகோனே முருகையா முறையாக குறுமுனிக்கு
தமிழ் சொன்ன ஆசானே
உன் தாளில் பணிகின்றேன்
......................................(93)....
பணிகின்றேன் திரு முருகா
திரு முருக திரு அந்தாதி
சிறந்திடவே உன் துணை வேண்டும்
குறை பொறுத்து அருளதருவாய்
......................................(94)....
அருள்தருவாய் அகிலேசன் மகனாரே மலை வாச
யாவர்க்கும் அருளிடவே
இவ் உலகம் தழைத்தோங்கி
......................................(95)....
தழைத்தோங்கி எவ் உயிரும்
இயல் போடு வாழ்ந்திடவே
அருளவேண்டும் கந்தையா
தமிழ் ஞான பண்டிதனே
......................................(96)....
பண்டிதனே பரமேசன்
புத்திரனே உத்தமனே
சீரலைவாய் சீராளா
சேயோனே மால் மருகா
......................................(97)....
மருகா அமரகோனின் மருகா
முருகா தமிழின் முருகா
உருகாதவரும் எவரும் உளரோ
உன் திரு நாமம் கேட்டால்
......................................(98)....
கேட்டால் தருவாய் முருகா நீயே
யாவும் தருவாய் கருணை கடலே
வாழ்வில் பணமும் சுகமும் பொலிவும்
யாவும் தருவாய் மங்களனேசா
......................................(99)....
மங்காளனேசா மங்களம் மங்களம்
மாமலைவாச மங்களம் மங்களம்
வெற்றிவேல் முருகா மங்களம் மங்களம்
கருணை கடலே மங்களம் மங்களம்
......................................(100)....
முற்றும்
சங்கரன் ஜெய சங்கரன் ❤️
சிவனடியான்🙏
Attachments area