மதுரை பனங்காடி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் நாகேந்திரன் (வயது 22). இவர் களிமங்கலம் பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையை பார்ப்பதற்காக தனது சகோதரர் நாகராஜ் மற்றும் நண்பர் அரவிந்த் (22) உள்பட 9 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து நாகேந்திரனும், அரவிந்தும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டி பகுதியில் வந்த போது அரவிந்த், நாகேந்திரன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரவிந்தை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த நாகேந்திரன் பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆனாலும் அந்த கும்பல் ஆத்திரம் தீராமல் காரில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்து அரவிந்த் உடல் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீ வைத்து எரித்தது. பின்னர் அந்த கொலை கும்பல் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அரவிந்த் தம்பி வசந்திற்கும் (19), அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியை வசந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வசந்தை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
கொலைக்கு பழி தீர்ப்பதற்காக கருப்பசாமியின் கூட்டாளிகள் வசந்த்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் ஜாமீனில் வெளிவராததால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமியின் மாமா மணிகண்டன் (வயது 37) உள்ளிட்ட 8 பேர் வசந்திற்கு பதிலாக அவரது அண்ணன் அரவிந்தை கொன்று எரித்துள்ளனர். இது குறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கருப்பசாமியின் கூட்டாளிகள் சரத்குமார், சரவணன், பூபதி, மணிகண்டன், பிரவீன், வெள்ளையன் என்ற கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது