உத்தரபிரதேசத்தின் பைஸா பாத் மாவட்டத்தின் பெயர் ‘அயோத்யா’ என மாற்றப்பட்டுள் ளது. தீபாவளிக் கொண்டாட்டத்தில் இதை அறிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலையும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. தன் வனவாசத்தை முடித்த ராமர் 14 வருடங்களுக்கு பின் தீபாவளி நாளில் அயோத்தி திரும்பியதாக மக்களின் நம்பிக்கை. எனவே, இரண்டாவது ஆண்டாக அயோத் தியில் உ.பி. அரசு சார்பில் தீபா வளியன்று விழா கொண்டாடப் படுகிறது. இதற்கான விழாவை முதல்வர் யோகி ஆதித்ய நாத் துவக்கி வைத்தார். விழாவில் ஆளு நர் ராம்நாயக் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட னர். சிறப்பு விருந்தினராக தென் கொரியாவின் முதல் பெண்மணி யும், அந்நாட்டு அதிபர் மூன் ஜொய் இன்னின் மனைவியுமான கிம் ஜங் சூக் கலந்து கொண்டார்.
அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், 3.35 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் உலக சாதனை புரியும் முயற்சியும் நடைபெற்றது. இதன் முதல் விளக்கை ஏற்றிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பைஸாபாத் மாவட்டத்தின் பெயர் ‘அயோத்யா’ என்று மாற்றப்படுவ தாக அறிவித்தார்.
அத்துடன், அயோத்யாவில் புதிதாக மருத் துவக் கல்லூரி அமைக்க இருப்ப தாகவும், அதற்கு ’ராஜா தசரத்’ எனப் பெயரிட உள்ளதாகவும் இங்கு அமைக்கவிருக்கும் விமான நிலையத்திற்கு ‘மரியாதை புருஷர் ராம்’ எனப் பெயரிடப்படும் என்றும் அறிவித்தார்.
அப்போது யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘‘புனித நதியான சரயு நதி அசுத்தமடை வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்திவாசிகள் என்ன விரும்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அயோத்திக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது. கடந்த நான்கரை வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடி, நம் நாட்டில் ராம ராஜ்ஜியம் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தினர், ‘‘யோகி ஏக் காம் கரோ! ராம் மந்திர் கா நிர்மாண் கரோ (யோகி ஒரு வேலை செய்யுங்கள்! ராமர் கோயிலை கட்டி விடுங்கள்!)’’ எனக் கோஷமிட்டனர்.
தென்கொரிய ராணி
அயோத்தியின் இளவரசி சுரிரத்னா என்பவரை சுமார் 2000 வருடங்களுக்கு முன் தென் கொரியா நாட்டுக்கு மணமுடித்து அனுப்பியதாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியா-தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவு மேம்பட உ.பி. அரசு சார்பில் தென் கொரிய ராணியான ஹோ என்பவர் பெயரில் ஒரு நினைவகமும் அமைக்கப்பட உள்ளது. அயோத்தி யில் இதற்கான அடிக்கல்லையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.
இதனிடையே, அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில்,
‘‘அயோத்தி வருபவர்களின் நீங்காத நினைவுகளை இங்கு அமைக்கப்படும் பிரம்மாண்ட ராமர் சிலை பூர்த்தி செய்யும். பூஜைக்கான ராமர் சிலை அதன் கோயிலில் உள்ளதுபோல், அயோத்தியின் அடையாளத்திற்காக மற்றொரு சிலை வெளியில் அமைக்கப்படும்’’ எனத் தெரிவித்தார். சரயு நதிக்கரையில் 152 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என்று தெரிகிறது.
இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள வல்லபபாய் படேல் சிலையை விட ராமருக்கு பெரிய சிலை அமைக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.