அர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடுமையான வாழ்வாகத் தோன்றினாலும், உண்மையாக அது நாம் வாழும் நாளாந்த வாழ்வை கடவுளின் அருளோடு செவ்வனே வாழ்ந்து நிற்பதுதான். துறவு பூண்டவர்களானாலும் சரி, பொது நிலையினரானாலும் சரி தத்தம் வாழ்வைத் தக்கபடி வாழ்வதுதான் அர்ப்பணமுள்ள வாழ்வாக அமைகின்றது.
கடவுளின் மீது நம்பிக்கை வைத்து வாழுகின்றபோது அவர் வார்த்தைகள் நமக்குத் தெளிவைத் தருகின்றன. இறைமகன் கிறீஸ்துவின் வாழ்வும், வார்த்தைகளும் நமக்கு முன்னே வழிகாட்டிச் செல்கின்றன. நம்பிக்கை இருக்கும்போது மௌனம் கூட விளங்கிக் கொள்ளப்படுகிறது. நம்பிக்கையற்ற நிலையிலே ஒவ்வொரு வார்த்தையும் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்பட முடியும்.
நம்;பிக்கையும், விசுவாசமும், நேர்மையும் இல்லாத எந்த உறவும் ஆழமாக இருப்பதில்லை. அர்த்தமுள்ளதாக அமைவதில்லை. பொருள் பொதிந்ததாகக் காணப்படுவதில்லை. நம்மில் பலரும் இறைவனோடும் பிற மனிதர்களோடும் நேர்மையும், விசுவாசமும், நம்பிக்கையுமில்லாத வாழ்வையே கொண்டிருக்கின்றோம். இதனால் பல வேளைகளில் நமது உறவுக்கு அர்த்தமே இருப்பதில்லை. அர்ப்பணமுள்ள வாழ்வில் இந்த நிலை இருக்கவே மாட்டாது. அங்கு விட்டுக் கொடுப்பும், ஒப்புவிப்பும், ஏற்றுக் கொள்ளலும் நிறைந்திருக்கும். அதனால் ஒரு உறவைப் பேணுபவர் மத்தியில் அமைதியும் சமாதானமும் நிலவக் காணலாம்.
இறைவாக்கினர் சாமுவேல் காலந் தாழ்த்திப் பிறந்த பிள்ளை. மலடி என்று நாமம் சூட்டப்பட்டு அணுவணுவாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு தாயின் குமுறலைக் கேட்ட இறைவனின் கொடை அவர். ஆனாலும் தன்னைத் தாய் என்று அழைக்கப்படும் பேற்றைத் தந்த இறைவனுக்கு அவள் அளித்த வாக்குதிக்கேற்ப இறைவனுக்கேற்ற அர்ப்பண வாழ்வை வாழ சாமுவேல் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
வாழ்வு என்பதில் மிகச் சிறு பகுதியானது நமக்கு என்ன நடக்கின்றது என்பதைக் கொண்டது. மீதமுள்ள பெரும்பகுதியோ நமக்கு நடப்பவற்றுக்கு நாம் எவ்வாறு பிரதிபலன் காட்டுகின்றோம் என்பதை உள்ளடக்கியிருக்கிறது என முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நடப்பவைகள் மட்டில் நமது அணுகுமுறை, பிரதிபலிப்பு என்பவை நமது வாழ்வின் 90 சதவீதமான பாகத்தை எடுத்துக் கொள்கிறன. நான் யார் என்பதற்கும் நான் யாராக இருக்க விரும்புகின்றேன் என்பதற்கும் இடையில் உள்ள தூரம் அல்லது வித்தியாசமானது எமது சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள தூரம் அல்லது வித்தியாசமாக அமைகின்றதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்குகந்த அர்ப்பணமுள்ள வாழ்வை வாழும்போது இந்த இடைவெளி மிகவும் குறுகிவிடுகிறது. தூரம் அநேகமாக அற்றுப் போய்விடுகின்றது. உறவு ஒன்றைப் பேணும்போது அது பெறுமதி மிக்கதாக, அத்தகைய உறவைப் பேணுவது நலன் மிக்கதாக அமைவதுதான் சிறந்தது. பயணத்தின்போது வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக அத்தகைய உறவகள் ஜொலிக்க வேண்டும். முடியாவிட்டால் அத்தகைய உறவு இல்லாதிருப்பதே மேலானது.
சாமுவேல் இறைவாக்கினரின் தாய் அன்னா தன் மனதில் தோன்றிய ஏக்கத்;தை - கவலையை இறைவனின் பாதத்தில் கொட்டினாள். தனக்குள்ளே குமுறி அழுதாள். அவளது நிலையைத் தவறாகப் புரிந்து கொண்ட ஏலி அவள் குடித்திருப்பதாகக் கூட எடைபோடுகிறார். இருப்பினும் அந்தப் பேதை மனந் தளரவில்லை. தான் சோகத்தோடு கடவுளிடம் உரையாடுகின்ற பேதை என்பதை அவருக்குப் புரியவைக்கின்றாள். அவள் அருள் பெற்றபோது தன் நிலையில் மாற்றம் எதையும் காண்பிக்கவில்லை. தான் இறைவனோடு கொண்டிருந்த உறவுக்குக் கடைசிவரை விசுவாசமாக, உண்மையுள்ளவளாக, நேர்மையுடன் நடந்து கொண்டு தன் வார்த்தைகளில் பின் வாங்காமல் அதை மதிக்கும் வண்ணம் செயல்படுவதை நாம் காணமுடியும். தன் வாழ்வில் அர்ப்பணமுள்ளவளாக நடந்து சாமுவேல் பால்குடி மறக்கும் வரையில் தன்பணிக்கேற்ற ஒருவனாக அவரைத் தயார் செய்கின்றாள்.
அர்ப்பணமுள்ள வாழ்வை மேற்கொள்ளும்போது மனதில் எழக் கூடிய சந்தேகங்கள், கேள்விகள் குறித்து கலக்கமடையத் தேவையில்லை. நேரடியாக இறைவனிடமே நாம் அவற்றை ஒப்படைக்க முடியும், 'இறiவா நான் உம்மை நம்புகின்றேன். நடப்பவை சகலவற்றை நான் விளங்கிக்கொள்ள முடியாதவனாக இருக்கின்றேன். ஆனாலும் உம்மை முற்றிலுமாய் நம்பி நிற்கின்றேன்' என்று வாய்விட்டுப் பேசும்போது அவர் விளங்கிக் கொள்வார், நமக்குரிய வழிகாட்டுதலை வழங்குவார். நம்மைத் தேற்றுவார். நம் கலக்கத்தை நீக்குவார்.
நாம் வாழ்வது நமக்குக் கடனாக வழங்கப்பட்ட ஒரு வாழ்வு. ஒரு முறைதான் வாழக் கிடைத்த வாழ்வு. அதை நல்லபடியாக வாழ்ந்து கடன் கொடுத்தவரிடமே கையளிக்க வேண்டியது நம் கடன். அதை அவருக்கே அர்ப்பணமாக்கி ஒழுங்கு முறை தவறாமல் வாழும்போது கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கத் தேவையில்லை. தலை நிமிர்த்தி அவர் முன்னிலையில் கணக்கை ஒப்புவிக்கும் தகுதி நமக்குக் கிடைக்கும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்