கொலைசெய்யப்பட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு கதறியழுதனர்
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், படகுமூலம் கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்றார்.
அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால், நண்பர்களுடன் மறைந்து வாழ்ந்துள்ளார்.
அதன் பின்னர் இவர் காணாமல் போனபோதும், உறவினர்கள் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. தமது மகன் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படலாம் என்று அஞ்சி தாம் முறையிடவில்லையென அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கனடாவை அச்சுறுத்தும் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மக் ஆர்தரினால் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு, தற்போது இறுதிக்கிரியை நடத்தப்பட்டுள்ளது.
புகலிட கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், தமது உறவினர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துவதோடு, மறைந்து வாழ்வது ஆபத்தானதென மனிதநேய செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.