மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்தும், 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்பக்கூடிய மக்கள் எதிர்ப்பார்த்த தீர்வை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நாட்டில் இன்று ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.
சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான நாட்டில் அதிகப்படியான சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதியானவர் கடந்த 26 ஆம் செய்த மாபெரும் மோசமான செயலிற்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இனிமேல் இவ்வாறான ஒரு செயலை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவையும், புதிய அமைச்சரவையையும் நிராகரிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, சபாநாயகரிடம் கையளித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையை உயர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளோம்.
இதன் பிறகு நாட்டிலே நல்லதொரு அரசியல் நிலை ஏற்படும் என்ற பாரிய நம்பிக்கை எமக்குள்ளது என்று ரிஷாட் பதியுதீன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்