முதலாம் உலகப் போர் முடிவின் நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் நாளை கனடா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களில் மணிகள் ஒலிக்கப்பட வேண்டுமென கனேடிய அரச படைப்பிரிவுகளும், முன்னாள் படையினர் விவகார அமைச்சும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முதலாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை அறிவிக்கப்பட்டவுடன் ஐரோப்பா முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டன.
குறித்த அந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே நாளை கனடாவில் உள்ள தேவாலயங்கள், மத வழிபாட்டு இடங்கள், சமூக மையங்கள் உள்ளிட்ட இடங்கள் அனைத்திலும் மணிகள் ஒலிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமாதானத்துக்கான மணிகள் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், சூரியன் மறையும் வேளையில், ஐந்து வினாடிகள் இடைவெளியில் ஒரு மணி என்ற வகையில் நாளை ஒலி எழுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான மணியோசை எழுப்பும் நிகழ்வுகள் நாளை பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.