அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகஅந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இரண்டு நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் இந்த புயல், 15-ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.