ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனுமதி பெறாத நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடிய பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலையீட்டினால் ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டது.
குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலககொட அத்தேஞானசார தேரரை விடுதலை செய்யக் கூறி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முற்பட்டவர்கள் மீது தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உள்ளே செல்ல வேறு ஒரு தினத்தில் அனுமதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் பிக்குகளிடம் கூறிய போதிலும் அவர்கள் அதற்கு உடன்பட வில்லை.
இதன்போது, பதற்ற நிலைமை அதிகரித்துக் கொண்டு வரும்போது, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தலையிட்டு பிக்குகள் குழுவொன்றை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்ற பிக்குகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கிண்ணியா செய்தியாளர்)