ஈழத்துக் கவிதைகள் தனித்த அடையாளத்தை நிலை நிறுதியுள்ளன இதன் பிரதிகளாக அனுபவக் கூறுகளை முன் வைக்க முடியும் அல்லது வன்முறைகளின் நீட்சி என அடையாளமிட முடியும் இந்தப் போக்கு எல்லாப் பிரதியாளர்களாலும் எழுதப்படுவதில்லை அதுவொரு கடினமானதும் பல்வேறுபட்ட வாழ்வு நிலை பண்புகளை பட்டியலிடும் செயலாகவும் அமைந்து விடுகிறது.எனினும் சில பிரதியாளர்களது சுயேச்சையான வளர்ச்சி இதன் மறுபார்வையாக வேறுன்றிவிடுகிறது.
குறிப்பாக ஈழத்திலிருந்து எழுதும் பிரதியாளர்களின் நாடு கடந்த இலக்கிய உறவு நிலை கவனத்தைப் பெருகிறது .இதற்கான மெய்யியல் பண்பாக அமைவது பிரதியாளன் தனது புலத்தில் வாசகனின் பிரதியாக மாறுவதும் தனக்குள் கொண்டிருக்கும் கருத்தினை அரசியல் தன்மையின் பண்புகளாக மாற்றுவதனூடாக சமூக முன்னிலைப்படுத்துவதையும் குறிப்பிட முடியும்.இன்னும் அந்தந்த நாட்டின் அகநிலைத் துறைகளின் வெற்றிப் புத்தாக்கங்கள். ஈழம் போன்ற ஒரு சிறிய நாட்டிலுருந்து தன்னை சர்வதேச ரீதியாக அடையாளப்படுதுவதென்பது பௌதிக சூழலில் சலுகைகளின்றி கடினமே!
இதன் எதிர்வினையாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் முகைதீன் சாலி முக்கியமானவர்
சில எளிமையான சொற்களை முன்வைத்து பேசுவது வாசிப்பாளனுக்கு வசதியாக இருக்கும் அந்த அடையள பண்புகளை முகைதீன் சாலியின் கவிதைகளில் நான் காண்கிறேன் தன்னுடைய கவிதைகள் வாசிப்பாளனுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்.மொழியை உருளச் செய்யும் சாலி வாசிப்பாளனின் மனதிற்குள் புலன்களின் வழி ஊடுருவி உரையாடலைத் தொடங்குகிறார்.
எறும்பாகி நான்
அத்துமீறி
அதன் கோட்டைக்குள்
கால் பதித்தது என்தவறு
எதற்காக நான் அழறவேண்டும்!
உருவங்கள் வேறுபட்டாலும்
உயிர் என்பது
அதற்கும் எனக்கும்
பொதுவான தென்பதை
உணர்த்தியது
என்னில் மிதிபட்ட
அதன் உயிர்த் துடிப்பு
தன் இனம் அழிக்கவந்த
துரோகியாக என்னை
எறும்புகள் கருதி
எனைக் கடித்தபோது
என் பலத்தினை
பாவம் எறும்புகளிடம்
பாவித்தது என் முழுத்தவறு
யானைக் கூட்டம்
எனைத் துரத்திய போது
அதனை எதிர்த்து நான்
என் வீரத்தை காட்டியிருந்தால்
நானும் யானைதான்
பாவம்
எறும்புகளைக் கொன்று
நானும் எறும்பாகி…
இந்தக் கவிதை சொல்லப்படாத காலத்தின் குரலை பசுமையான மொழியாடலூடாக காலத்தை வென்று கருத்தாக்கங்களை பிறப்பிக்கின்றது.இந்த கவிதையின் பிரதி மற்றொரு பார்வையில் சிலரது நுண்மையான அரசியல் களத்தை ஊடுருவிப் பரப்புகிறது.
இந்தக் கவிதை சிங்கள தேசிய வாதத்தின் வரலாற்றுத் திரிபும் புனைவுகளையும் தீரமிக்க சொல்லாடலூடாக ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் அல்லது அரசியல் உள்முரண்களை கவிதை வழியாக ஊடுருவி பிறழ்வு நிலை அனுபவத்தைத் தருகிறது.
செவ்வாய் திற
செவ்வாயில்
சின்னதாய் ஒரு
குடிசையமைத்து
சூரியன் மறைக்க
வியாழனை இழுத்து
கூரையமைக்கலாம்
நிலவின்
துண்டு பெயர்த்து
நீராக்கியருந்தலாம்
இருள்வரின்
நட்சத்திரங்களை
துணைக்கழைக்கலாம்
கூதல் தவிர்க்க
மேகச் சீலையில்
வானவில் மையிட்டு
ஆடை நெய்யலாம்
பசிக்கும் போதெல்லாம்
காதல் உண்டு
களிப்புறலாம்
உறங்கி மகிழ
வெண்பஞ்சு முகில்களில்
மெத்தையமைக்கலாம்
சின்னச் சண்டை
சினம் மறக்க
பூமிக்குப் போய்
பூப்பறிக்கலாம்
அவசியமேற்படின்
புளுட்டோ சென்று
விடுமுறை கழிக்கலாம்
சந்ததி பெருகின்
தனிமை தேடி
சனியில் குடியேறலாம்
முதலில் உன்
செவ்வாய் திற
இந்த கவிதை மொழியின் அழகியலை கவி நறுமணத்தை சொல்லி நிற்கும் அதைய நேரம் நமது புலன் அனுபவமாக ஒரு காதலிஷ தொடர் உரையாடலை வாழ்வியலின் முகத்தையும் இருப்பின் அங்கிகாரத்தையும் கேள்வியல் ரீதியாக விசாரணைக்கு உற்படுத்துகிறது.
சாலியின் படைப்புகளும் தொகுதிகளும் பௌதிக நிலையில் உணரும் போது காலத்தை வென்று நிற்கின்றன குறிப்பாக "வாழ்தல் மீதான வன்முறைகள்" தொகுதி (கொடகே விருது பெற்றது) கடந்ந காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் எனும் முழுமையான கள நிலவர மற்றும் கதை சொல்லியின் பிறழ்வுநிலைகளையும் குறிப்புணர்த்துகிறதும் தொகுப்பாக பதிவாகியிருக்கிறது.
முகைதீன் சாலியின் மொழிப் பரப்பு நமக்கு வேகமும் அதிர்வையும் தருவதோடு இவரது எழுத்துக்கள் வெவ்வேறு நிலை அனுபவங்களையும் எழுப்புகின்றது.இவரது இலக்கிய அறிதல் முறை சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது .
இவரது மொழியாழுமை தனித்துவமான உழைப்பு இதன் பகுதியே இவரது படைப்புகள் வாசிப்பாளனுக்கும் இவருக்குமான உறவு நிலையையும் கவிதானுபவமாக டறுக்கிறது.
சாலியின் படைப்புகள் அரசியலை அதன் முன் பின் முகத்திரையை விமர்சிக்கின்றன.அதைப்போல் சிறுபாண்மை சமூகங்களின் குரலாகவும் பேசி நிற்கிறது.இன்னும் அச்சமூகங்களின வலியையும் காயங்களையும் படைப்புகளில் நிரப்பி வைத்திருக்கிறார். ஆக இவரது எழுத்துக்கள் வரலாற்று பதிவுகள்.
சாலியின் பல பிரதிகள் சமூக அவலங்கள் நெருக்கீடுகள்.அதன் துயரங்கள் இழப்புகள் என பேசி அவதானிப்பை எட்டி கவித்துவ ஈர்ப்பை தருகின்றன.இவரது படைப்புகள் வாசிக்கும் ஒருவாசகனால் மறக்க முடியாத வஸீகரத்தையும் ரசனைப் பிரதியையும் வெவ்வேறு சுவையுடன் பல்குரல் வடிவ உணர்வுகளாக நமக்குள் உட்செலுத்துகிறது.
ஆழ்மன அனுபவத்தின் மொழி ஒருவனை தன்னுணர்வுடன் எழுதத்தூண்டுவதை படைப்பு என்று சொல்லலாம்.அந்த மொழி கதை ,கவிதை,விவரணம் என வடிங்கள் பெறலாம்.
இந்த மொழி ஒவ்வொரு படைப்பின் தன்மையாலும் வடிவத்தாலும் மெய்யியல் புலத்துக்குள் ஆழமாய் நகரும்.இதில் எனது வாசிப்பின் பிரதியில் கவிதையின் அனுபவம் மிக முக்கிய இடத்தை ஒரு தனிமனித வாழ்வியலில் ஊடுருவி அவனை வாசிப்பு பித்தனாய் மாற்றுகிறது.கவிதை இந்த சக்தியை அதன் மொழியிலிருந்து அடையாளப்படுத்துகிறது.
கவிதையின் விரும்புதலை கவிச் சுவையை வாசகனுக்குள் விளமபரப் படுத்துவது ஒரு பிரதியாளன் வாசிப்பாளனின் புலத்துக்குள் நகர்த்திச் செல்லும் தன்மையில் வெற்றி பெறுகிறது.அப்படி வாசிப்பாளனிடம் வெற்றி பெற்ற கவிதைகளாக முகைதீன் சாலியின் கவிதைகளை நான் காண்கிறேன் .
சாலியின் "மழை நின்ற போதும் தொகுதி (கொடகே விருது பெற்றது).இது சாலியின் தொகுதிகளில் வாசிப்பாளனுக்குள் கவிதை அனுபவத்தை உடைத்து சாலி இந்த கவிதைத் தொகுதிக்கு முன்னம் பல தொகுதிகளுக்கு சொந்தக் காரனாக இருப்பார் என்ற கவனத்தைப் பெறுகிறத.இந்த காரணியால் எல்லைகளை உடைத்து வெற்றி பெறுகிறார்.இவரை இந்த ஒரு தொகுதியினூடாக வாசிப்பாளன் கொண்டாடியிருக்க வேண்டும்.ஏனெனில் இவர் அப்போது இளையவர்.மாறாக சாலியின் மழை நின்ற போதும் பாடப் பொருற்களைப பாடியிருக்கிறது.அதீத கவிதைப் பெருக்கை மனசுகளில் சன்னமாக பாய்ச்சிகிறது
சிவப்புக்கிரக மனிதன்
மரங்கொத்திப் பறவைகளின்
சொண்டுகள் உடைதலுக்கு
சொந்தக்கார மெய்யுடையான்
சுறுசுறுப்பை கற்பதற்கு
எறும்புகள் படையெடுக்கும்
பள்ளிக்கூடம் அவன்
அவன் வேர்கள்
ஈரங்களைத் தேடி
மண்ணுக்குள் இறக்கை விரிக்கும்
மாயக்காரன்
பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி
அள்ளிக் கொடுக்கும்
அட்சய பாத்திரம்
செந்நதி ஓடும்
சிவப்புக் கிரகமவன்
பனிமலை அவனில்
படர்வதில்லை…
பாலை வனத்தில்
வெப்பக் காற்றிலும்
அவனது மரம்
பெருமழை பொழியும்
பெருங்குளத்து முதளைகள்
அவன் மழையில்
நனைந்து இன்புறும்
இயங்கி இயங்கி
இகத்தை வாழவைக்கும்
இன்பக்காரனவன்!
"சிவப்புக்கிரக மனிதன்" என்கிற கவிதை இது.இந்த கவிதையில் வரும் சாமானியன் எல்லாக் காலங்களிலும் இருப்பான். சில பொழுது எல்லோருக்குள்ளும் வசிப்பான். இயலாமையின் பிரதியாக இதனைக் கடத்தாமல் ஒரு குரலின் ஆத்திரமாக ஆவேசமாக வெளிப்படையான அரசியல் களமாக நான் பார்க்கிறேன்.அரசியல் இயக்கத்திலிருந்து வேறுபிரித்து இந்தக் கவிதையை பார்க்க முடியாது.இது வாழ்நிலை அனுபவத்தின் கூறு.இன்னும் சூழலியலின் அன்றாட அரசியல் சங்கிலி.
மக்களின் மன அசைவுகளை திமிறியெழும் ஆத்திரங்களை காட்சிப்படுத்த தவறவில்லை.இந்தக் கவிதை வடிவமும் முழுக்க முழுக்க அரசியல் பேசி நிற்பதையும் மார்க்சிய நோக்கில் சமூகப் புலன்களை சொல்லி கவித்துவ அழகியலை அடைந்திருக்கிறது.குறிப்பாக அரசியலின் பிரச்சார மொழியூடகமாகவும் சாலியின் இந்தக் கவிதை உள்ளமை புலப்படுகிறது.
சாலியின் சிவப்புக்கிரக மனிதர்கள் தொகுதி கவிதைகளை வாசிக்கும் போது வெவ்வேறு அரசியல் முகங்களும் அவர்களின் உரையாடல்களும் என்னைக் கடந்து செல்கின்றன.இனனும் கவிதைக்கான முனையை கடந்து குறுங்கதைகளையும் உரைநடை நவீனத்துவத்தையும் தனித்து ஒலிக்கிறது இந்த தொகுதி
சாலியின் சமகாலப் படைப்புகள் பல்வேறு வித்தியாசமான வெளிப்பாட்டு முறைகளில் சூழ்நிலைக் கேற்ப தாக்கம் அதிகமாயிருக்கிறது.கவிதைகளின் வடிவமும் சூழலியலின் நெருக்கத்தன்மையை சுட்டிக் காட்டுகின்றன. தனித்துவமான கவிதை மொழி சாலியின் பிரதிகளில் முக்கிய இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
_ ஏ.நஸ்புள்ளாஹ்