இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைகளுக்கு பொதுத்தேர்தல் ஒன்றே சிறந்த வழியாகும். பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சென்று மக்கள் ஆணையைப் பெற்றுவருபவர்கள் ஜனநாய ரீதியில் ஆட்சிசெய்ய முடியும். ஜனாதிபதியின் பொதுத்தேர்தலுக்கான அழைப்பை அனைவரும் ஏற்கவேண்டும்.
இவ்வாறு கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்ரட்ணதேரர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கரட்ணதேரர்...
கடந்த மூன்றரைவருடங்களுக்கு மேலான நல்லாட்சியில் மக்களுக்கு எதுவித நன்மையும் நடக்கவில்லை. கள்ளனைப் பிடிக்கிறேன் என்று ஆட்சிக்கு வந்த ரணில்விக்கிரம சிங்க அரசே மத்தியவங்கியை கொள்ளையடித்துள்ளது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை அதாலபாளத்திற்கு கொண்டுசென்றுள்ளது. எல்லாவற்றிற்கும் வட்டி என்கிற நிலையிருந்தது. இந் நிலையில் சாதராண மக்களால் வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாது போனது. ரணில் விக்கிரம சிங்க அரசினால் இந்நாட்டை சிறந்த முறையில் நிர்வாகிக்கமுடியாது.
இதனாலேயே ஜனாதிபதி ரணில்விக்கிரம சிங்கவை விட்டுவிட்டு வேறு ஒருவரை பிரதமராக பதவிவகிக்குமாறு கேட்டார். ஜக்கியதேசியக் கட்சியைச்சேர்ந்த சஜித்பிரமதாச அல்லது கருஜெயசூரியவை பிரதமராக பதவிவகிக்குமாறும் கேட்டுள்ளார். இந் நிலையிலேயே அதற்க்கு அடுத்த நிலையில் பெரும்பான்மை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தைப் பெற்ற மகிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார். அதுவும் இல்லாவிட்டால் பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே அவரின் முடிவாக இருந்தது. அதற்காகவே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இவ் அறிவிப்பை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
தற்போது பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பரிகாசத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சுகநலன்களுக்காகவே சண்டைபிடிக்கின்றார்கள். பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெய்ய பொதுத்தேர்தல் ஒன்றே தற்போதைய வழியாகும். கிழக்குமாகாணத்தைப் பொறுத்தவரை இங்குள்ள மக்கள் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளனர். இந் நாட்டில் பொதுத்தேர்தலுக்குப்பின் வருகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் கிழக்குமாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை செலுத்தவேண்டும் என்றார்.
செ.துஜியந்தன்