இன்று எமது நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இந்தவேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜனநாயகத்தை காப்பாற்றவே போராடுகின்றது. தமிழ்மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்பவே செயற்படுகின்றது. எல்லோரும் நினைப்பது போல் நாம் ரணிலுக்கோ மகிந்தவிற்கோ ஆதரவு வழங்கவில்லை. இந் நாட்டின் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவே கூட்டமைப்பு செயற்படுகின்றது.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தொரிவித்தார். கல்முனை பன்னிரெண்டாம் வட்டாரத்திலுள்ள ஏகாம்பரம் வீதியை இரண்டு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு கல்முனை மாநகர சபையின் பன்னிரெண்டாம் வட்டார உறுப்பினர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான கே.துரைராசசிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கனகசபை, மாநகரசபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்....
இன்று நாட்டின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது. இரு பெரும் பிரதான கட்சிகளும் எம்மிடம் கையேந்தி நிற்கின்றது. தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்க்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றும் வரை நாம் யாருக்கும் சோரம் போகமாட்டோம். எமக்கு ரணிலோ, மகிந்தவோ முக்கியமல்ல இங்கு ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே நோக்கமாகும்.
தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளோம் தமிழன் படித்தவன் பண்புள்ளவன் என்பதை நிருபித்துள்ளோம். சும்பந்தன் ஐயா வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து எம் மக்களின் பிரச்சினைகளையும் பேசியுள்ளார். தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களுக்கான இழப்புக்களுக்கான ஒரு நியாயமான தீர்வு தற்போது கனிந்து வந்துள்ளது.
இங்கு நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் எம்மிடம் ஐந்து கோடிரூபாவும் அமைச்சுப்பதவியும் தருவதாக பேரம் பேசப்பட்டது. நாம் பணத்திற்காக சோரம் போவபவர்களல்லர். நான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை விற்று அவர்களின் முதுகில் சவாரி செய்யபவனல்ல. அறப்போர் அரியநாயகத்தின் வழியில் தோன்றிய பரம்பரையினம் எங்கள் இனமாகும். எனது மக்களின் துயர்கள் களையப்படவேண்டும். தமிழர்கள் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழும் ஒரு அரசியல் தீர்வு வரும் வரை எனது போராட்டம் தொடரும்.
கல்முனை என்பது தமிழர்களின் இதயமாகும். இம் மாநகரத்தில் வாழும் தமிழ்மக்கள் இங்குள்ள சகோதர இன அரசியல்வாதிகளினால் பல்வேறு அடக்குமுறைகளக்குள்ளாகிவருகின்றனர். இப் பிரதேசத்தை நாம் பாதுகாக்கவேண்டும் எமது தனித்துவ அடையாளங்களைப் பேணவேண்டும். கல்முனை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்பதை பாராளுமன்றத்தில் அடித்துச்சொன்னவன் நான்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் இன்னும் சில மாதங்களில் தரம் உயர்த்தப்படும்.
கல்முனை வாழ் தமிழ்மக்களின் நீண்டகாலப் பிரச்சினைiயான கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் இன்னும் ஒரு சில மாதங்களில் தரம் உயர்த்தப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 95 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தொடர்பிலான அங்கீகாரம் அமை;சசர் மட்டுமல்ல அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோரினாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனது காலத்திலே இப் பிரதேசசெயலகம் தரம் உயர்தப்படும். அதனை நான் செய்தே தீருவேன்.
அதுமட்டுமல்ல கல்முனையில் தமிழர் கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகம் ஊடாக இதற்காக ஐந்து கோடியே அறுபது லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை தமிழ் மக்களின் ஒற்றுமையும் பலமுமே இம் மாநகரத்தை பாதுகாக்கும். கல்முனையின் அபிவிருத்திக்காகவும், உரிமைக்காகவும் நான் தொடர்ச்சியாக போராடிவருகின்றேன் என்றார்.
செ.துஜியந்தன்