ஔியுள்ள இடத்தில்
முளைக்கத் துவங்குகிறது ஆன்மா
ஒரு விநாடியேனும்
ஔியற்ற இடத்தில் அது
வாழ விரும்பவில்லை
இறுகி விலங்கிடப் பட்ட
இதயத்தின் மேல்
ஔி பட்டுப்பட்டு விலகும் போதெல்லாம்
ஆதியில் விடுபட்டுப் போன எல்லாம் அறியப்படாத புலத்திலிருந்து
ரேகைகளைத் தடவிப்பார்க்கின்றன
அடர் துயர்
கனத்த வலி
மிக எளிதாக ஆன்மாவுள்ளே
நுழைய முடியாமல்
ஔி பறந்து திரிந்து பசுமையின்
உச்சம் தருகிறது
நீ கோப்பையில் வழங்கிய
நஞ்சின் ருசியும்
ஔி ஊடுருவும் சிறு கணத்தில்
நிறமுமற்று சுவையுமற்று உனது பிரதியாய்
காதல் விதைத்து நிற்கிறேன்.
இரவின் வெளி நிறைய இசை
♪
இரவும் இசையும்
தூங்கப் போதுமானதாக இருக்கின்றன
போதியளவு தூங்காத
இரவும் இசையும் இருக்கின்றன
இரவின் பேரலையைப் போல
இசையின் பேரலைகளும்
துயர் கணங்களை நிசப்தப்படுத்துகின்றன
இந்த உலகம்
இசையின் பிரதி
இந்த இரவின் வெளி நிறைய இசை இருக்கின்றது
இசை ஆன்மாவில் பயணித்து
என்னை ஆசீர்வதிக்கிறது
நட்சத்திரங்களை ஒரு சிறுமி பொறுக்குவதைப் போல
இசையை இரவு முழுவதுமாய் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
தின்று தொலை
காமம் உடைந்த பின்னிரவில்
புதைந்துவிட முயலும்
தனிமையின் அந்தி வானத்தில்
ஒற்றைத்துளியின் இம்சை
சற்று முன் தொலைத்த
மௌனக் காட்டின் வார்த்தைகள்
பிறிதொரு போதாமையை
வரையத் தொடங்கும் ரகசியம்
நீ அறிய மாட்டாய்
நீண்ட காமத்தின்
இம்சை என் நேர்மையினை உடைத்து
மெல்லிய இருளோடு
உன் பாதை நோக்கி பயணப்படுகிறது
கட்டுப்பாடுகள் தளர்த்தி
முடியும்வரை
கருணையின்றி என் காமத்தை
தின்று தொலை
முன்னிரவு விளையாட்டு போதுமானதாயில்லை.
_ ஏ.நஸ்புள்ளாஹ்_