கோவை,திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2 மாதத்தில் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை சூலூர் அருகே உள்ள ராவுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவர். இவரது மனைவி புஷ்பா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
புஷ்பா கடந்த 1 வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தினசரி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு மாத்திரையை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
நேற்று காலை வீட்டில் இருந்த புஷ்பாவின் உடலை நிலை மோசமானது. இதனையடுத்து அவரை உறவினர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் புஷ்பாவின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
பின்னர் டாக்டர்கள் புஷ்பாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவரது மனைவி காயத்திரி (வயது 28). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அங்கு காயத்திரியின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
மேலும் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து
உறவினர்கள் காயத்திரியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சென்ற சில மணி நேரத்தில் காயத்திரி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
பன்றி காய்ச்சலால் ஒரே நாளில் 2 பெண்கள் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.