சபரிமலை கோயில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி கோயில் நடை அதே தினத்தில் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, ஆன்-லைன் முன்பதிவு வசதியை திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) ஏற்படுத்தியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு வசதியைஆண்டுதோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு கடந்த மாதம் சில பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்தனர். இதனிடையே 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இந்தஆண்டு அதை விட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று கோரி சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முடிவு செய்துள்ளது. இந்த மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பேட்டிஆன்-லைன் முன்பதிவு குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுவரை 539 பெண்கள் ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இணையதளத்தில் சில பெண்களின் பெயர்களையும் காண முடிந்தது.
ஆன்-லைனில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பஸ் டிக்கெட்டை காட்டினால்தான் தரிசன முன்பதிவு டிக்கெட் செல்லுபடியாகும். நிலக்கல் முதல் பம்பை வரை கேரள அரசு பஸ்களில்தான் பக்தர்கள் செல்ல முடியும். இந்த பஸ் டிக்கெட்களை தரிசன டிக்கெட்டுடன் இணைத்துக் காட்டவேண்டும்.
ஆனால் தரிசன முன்பதிவு செய்த பெண்கள் யாரும் கேஎஸ்ஆர்டிசி டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை. நிலக்கல் முதல் பம்பை வரை பக்தர்கள் நடந்து செல்ல முயற்சித்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் டிக்கெட்டை எடுத்துச் செல்லுங்கள் என்று ஆலோசனை கூறுவோம்” என்றார்.
5 கோடி வீடுகளில் விளக்குசபரிமலை ஐயப்பன் கோயில் பழமையையும், பழக்க வழக்கங்களையும் காக்கக் கோரி 5 கோடி வீடுகளில் விளக்கேற்றும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக இந்து அமைப்பான ஐயப்ப தர்மா ரக்ஷ சமிதி அறிவித்துள்ளது. 7 மாநிலங்களில் 5 கோடி வீடுகளில் இந்த விளக்கேற்றும் திட்டத்தை நடத்தப் போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.