LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 7, 2018

சூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள்

அனாரின் "எனக்கு கவிதை முகம்"கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்துக்கவிதைகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.கால நகர்வில் இன்று அனாரின் இன்றைய கவிதா கூடங்களுக்குள் நுழைகிறேன்.மேலும் பல பரப்புகளால் அனாரின் கவிதைகள் வான் உயரத்தை நெருங்கியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது 

வேகமும் அதிர்வும் கவிதைகளில் நிரம்பி வழிவதை நான் காண்கிறேன். சொற்களை பிரதியாளனுக்கு கொடுக்கும் அனார் அச் சொற்களில் மந்திரப் புன்கையை பிரத்தியேகமாக சூடுகிறார். கவிதையில் வரும் இறுதி வரிகள் கவிஞரை நிரந்ரமான தளத்திலிருந்து மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது.

ஒவ்வொரு காலத்துக்குமான பிரதிகளை எல்லாப் பிரதியாளர்களாலும் தரமுடிவாதில்லை.ஆனால் தனது எழுத்தின் வேகத்தை எதிர்நிலைச் சித்திரங்களாய்த் தந்துகொண்டிருப்பவர் அனார் இவரின் அண்மைய கவிதை


அவன் நிறங்களாலானவன் என்பது

எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது



காலை ஒளி 

மாவிலைத் தளிர்களில் மினுங்கும் நிறம்

கடைசிச் சொட்டு மதுத்துளியின் ருசி
அவனுடைய சொற்களுக்கு



அவன் செருக்குமிகு கவிதைகள்

மாயாலோகத்தின் 

மொத்த நிறங்களையும் ஆள்கின்றன


என் திசைகள் அணிந்திருக்கின்றது

அவன் காதலால் நிறந் தீட்டிய இசையை



அவனைக் காத்திருக்கும் தருணம்

வாயூறிக் கொட்டும் 

வர்ணங்களாகிவிடுகின்றன பிரார்த்தனைகள்


ஒரு மயில் தோகையின்

ஆனந்த வர்ணமெருகுடன்

காலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை


அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்



மீன் குஞ்சுகளின் 

அபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து

குறும்பாய் நரம்புகளுக்குள் நீந்தவிட்டு
எங்கு போய் மறைந்தான்



இதமும் புதிரும் பூசிடும்

இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது

தாபம் துளிர்த்திடும் அவனுடைய கருநிற விழிகளுடன்
அறையில் உயிருடன் அவிந்து
மெழுகு உருகித் தீர
அணைந்து போன சுடரின்
சாம்பல் நிறப் புகை காற்றில் கீறும்
என் இறுதிச் சொற்கள் ...
நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்



ஒரு பிரதியை வாசிப்பாளன் கொண்டாடுவதற்கு பிரதியின் உட்தள முன்னிறுத்தம் பிரதியாளனின் அனுபவ மொழிவழியும் அவசியமானது அந்த வேலைப்பாடுகள் அனாரின் இந்தக் கவிதையில் நிறையவே சாத்தியமாகியுள்ளது.வாசிப்பாளனின் ஆன்மாவை தொந்தரவு செய்யும் தாய்க் கவிதையாக இதனை பார்க்கிறேன்.



எல்லாக் பிரதிகளிலும் தன்னுடைய மொழிப்பரப்பை நிலை நிறுத்தும் அனார் வாசிப்பாளனின் மனப் பரப்பில் வேரூன்றி மறுவாசிப்புக்கான வசீகரத்தையும் பிரதி முழுக்க நிரப்பி விடுகிறார்.



நமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது..........



உன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம் தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு..... 

குறைவதுமல்ல கூடுவதுமல்ல…. 

முழுமையாக இருப்பது… 
தன்னிறைவானது நிலவொளி.



அனாரின் கவிதை சூட்சுமத்தை இந்தப் பிரதியில் நிறையவே நான் காண்கிறேன்.ஒரு வாசிப்பான் கிரகித்துக் கொள்ளும் மொழிவழியும் மொழிசார் அர்த்தப் பரப்பும் இந்தப் பிரதியில் ஒலிக்கின்றது.



வெளிச்சத்தை இருட்டைத்

தின்று வளர்கிறது கனவு



தண்ணீரிலும் காற்றிலும்

தன்னைப் பூசிவிடுகின்றது



காலத்தின் தொலைவுவரை தகிக்கும்

வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென

உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது


அறியப்படாத புலத்திலிருந்து

நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று

அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவை
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில் 
உருவற்று அலைகின்றன



ஆதியில் விடுபட்டுப்போயிருந்த

என் பொற்காலக் கனவை

மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்


இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு

அதன் இயல்புகளுடன்

அனுமதிக்கின்றது


மழையின் கனவை

நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்

தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்



கட்டிலின் மூலை நான்கிலும்

முயலின் பளபளக்கும் கண்களாய்

மிரட்சியுடன் 
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு



புனைவு வெளியில் நுண்கதையாடலை ஆதி கனவுப் பாதையை கவிதைச் சம்பவமாய் அனார் அணுகிய அமைப்பியல் வாழ்வியல் சார்ந்த மற்றும் மொழியல் சார்ந்த வாசகப் பிரதி இது.



ஈழத்துக் கவிதைப் புலத்தில் அனார் கவிதைகள் அனுபவ பரவசத்தை அரசியல் நுண்ணுணர்வை சூஃபிச வடிவத்தை ஆத்மாவின் சந்தம் பிசகாது தருகின்றன.



அனாரின் பிரதியில் காணப்படும் துவக்கமும் நிறைவும் அவரது பிரதியுடன் வாசிப்பாளன் பயணப்படுவதுமாய் வாசிப்பாளனின் மனசு முழுக்க அதிக உராய்வை ஏற்படுத்தக்கூடியதுமாய் தயாரிக்கப்படுகின்றது.இதன் ஒற்றை வடிவமே கவிதை வெளியில் அனார் கொண்டாடப்படுகிறார்.



சூஃபித்துவம் வழியும் இவரின் கவிதை

"இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை"



வெண் சாம்பலின் நினைவிலிருந்து

இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை



ஒற்றயாய் சுவரில் சாய்ந்தும்

இருவர் இருக்கமாய் சாய்க்கப்படும் நிற்கும்போது

பரிசுத்தமான ஔியில்
தாழ்ந்து...
ஆழம் சென்று மீள்கிறோம்



தன்னை சிலாகித்தபடியே

மற்றுமொரு சமமான செருக்குமிகும்

பதிலீட்டை
எச்சிலால் கோர்க்கின்றான்
கர்வமிடும் பெண் உதடுகளுக்கு



மூடியிருந்த முத்தத்தை

பிரித்தெடுத்த ஔித்திரவத்தை

சுவரில் தெளிக்கிறாள்


சூஃபியின் தனித்த புல்லாங்குழலிலிருந்து 

வழியும்

தனிமையின் பித்து
புனிதத் தவப் பெருக்கின் உயிரை
அப்படியே சாரமாய் சுவருக்கு ஊதுகிறது



அவளோடு சேர்த்து இசையையும்

உறிஞ்சுகிற சுவரில்

செவிவைத்துக் கேட்டால்
சூ.ஃபி
சுவரிலிருந்தே
இசைத்துக் கொண்டிருப்பார்.



சூஃபி கவிதைகளில் ஜென் கவிதைகளின் உரையாடல்கள் பிரதிபலித்தல்கள் ஆங்காங்கே பயணப்பட்டாலும் சூஃபிக்கவிதைள் வேறு புள்ளியிலிருந்து செல்லும் தவத்தை மற்றும் பரவத்தை ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்



அனாரின் இந்தக் கவிதையும் சூஃபிக் கவிதைகள் மொழியும் நான் அற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகின்றது.என்,எனது,என்ற இருந்தலையும் ஒவ்வொரு வரிகளிலும் பிரபஞ்ச ரீதியாக ஒன்றினைக்கின்றது.சூஃபிகளுக்கே உரியதான இசைக் களிப்பையும் சந்தோஷத்தையும் நடனத்தையும் கொண்டு காதாலின் மர்மத்தைப் பேசுகின்றது.



இசையின் மென்னுடல் தரும் ஒலியில் பிரபஞ்சத்தை ஆரத்தழுவி மிகவும் புதுமையான புள்ளியிலிருந்து புனைவுகளால் கவிதையை உயிர்ப்பிக்கும் கலைநுட்பம் அனாருக்கு மட்டுமே விசித்துரமானது.இவரது மற்றுமொரு கவிதை "மென் சொற்கள்"



மெருகேறிய இரண்டு மென்சொற்கள்

மாபெரும் கடலையும்

ராட்சத மலையையும்
அருகருகே நகர்த்துகின்றன



பொன்னொளிர் நீலக்கடல் வாசனை

விண் மீன்கள் மினுங்கும்

மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமானர்



தன் பிரமாண்டத்தில்

புதையுண்ட இரு உடல்களை

பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல் பட்டுக்கிடந்தன
இரு சொற்கள்



அவளது தோழில்

அலைகள் ஆர்ப்பரித்தன

அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது



அதி ரகசியமான அவ்விரு சொற்களும்

ஜின்னின் இரு தோகையென

வானளாவ விரிந்து கொண்டன.


மாட்சிமைக்குரியவன் கடவுள் அவனது இயக்குதலின் படியே பிரபஞ்சத்தின் கோணங்கள் இயங்குவதை நான் அறிவேன்.கடவுளின் படைப்புகளில் மனிதன் மற்றும் ஜின்கள் முக்கிய வகிபாகத்தையுடைய படைப்புகள் மனிதன் கண்களுக்கு உருவ அடிப்படையில் புலப்படுவதும் ஜின்கள் உருவ அடிப்படையில் கண்களுக்கு புலப்படாத வகையுமாகும் இந்த ஜின்னின் இரு தோகையென வானளாவ விரிந்து கொண்டன அதி ரகசியமான அவ்விரு சொற்களும் என அனார் கவிதையை நிறைவு செய்திருப்பது பிரதியின் ஆன்மிகம் நோக்கிய விரிவையும் காதலின் தீவிர அழகியலையும் உருவாக்கியிருக்கிறது.

கவிதையென்பது எல்லோருக்கும் எப்படியோ அதன் கோணங்கி தனமாகவே அனாரும் பார்க்கின்றார். அதுவே அவரின் மகிழ்ச்சியை அவரின் துயரை பேசுகின்ற வெவ்வேறு அனுபவமாகின்றன .அனாருக்குள் ஒரு காதலிஷ நதி முன் நோக்கிப் பாய்ந்ததன் ஒரு குறியீட்டுப் பிரதியாக மற்றும் ஒரு ரசனையின் ஔிப்பதிவாக புதிய பரிசோதனை முயற்சியக இக்கவிதையை அடையாளமிட முடியும்.

இவரின் "தலைப்பிறைக்கு சலாம்"என்ற கவிதை


இன்மையின் திசையிலிருந்து

நீ ரோஜா என உச்சரித்த கணம்

என் நேர் எதிராக 
முதல் மாதப்பிறையை நோக்கினேன்



வெள்ளிக் கிழமைகளை

வளைத்து நெகிழ்த்து

கொண்டாட்டத்திற்கு ஈர்க்கிறது


அத்தியின் மீதும் 

செய்த்தூனின் மீதும் சத்தியம் செய்தவனின்

பிரமாணடத்தை
அந்நறு மணத்தின் களிப்பும்
குளிர்ந்திருக்கலாம்



ஹசன் ஹுசையினின் குழந்தைமையாய்

பேரீச்சைத் தோப்புகளில்

தவழ்கின்றன பல்லாயிரம் வளர்பிறைகள்


முடிவுகளுக்கும் ஆரம்பங்களுக்குமான

அழைப்புவிடுகிறது வாளின் குருதியில்

தோய்ந்துள்ளது அத்தர்மணம்


சாட்டைத் தழும்புகளில் உருவான

ரோஜாவின் அடர் சிவப்பு

தவறுகளுக்காக
பிராய்ச்சித்தங்களை கோருகின்றன



எண்ணற்ற சிலிர்ப்புகளை துய்க்கும்

ரோஜா மலர்

பேராசிகளின் பொருட்டு முளைக்கும்
தலைப்பிறைக்கு சலாம் உரைப்பதில்
என்னை முந்திக் கொள்கிறது.



ஜிப்ரான்,உமர் கயாம்,ரூமி போன்றவர்களுடைய சூஃபிச கவிதைகளிலிருந்து அனாரின் இந்த கவிதை தள்ளிப் போவதாகவும் ஜிப்ரான்,கயாம் இருவரின் கவிதைகள் ஒரே பாதையில் பயணிப்தையும் ரூமியின் கவிதைகள் இவர்கள் இருவரின் கவிதைகளிலிருந்து தள்ளிப் போதையும் ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்.



சூஃபிச கவிதைகள் நான்அறிந்தவரை ஒரு நிகழ்ந்த சம்பவமாக இருக்கும் அல்லது கவிதை ஒரு நிகழும் சம்பவமாக இருக்க வேண்டும்.அப்படியான முன்வைப்பை அனாரின் இந்த கவிதையும் கொஞ்சமும் சம்பவம் பிசகாத வடிவமாக தயாரிக்கப்பட்டுள்ளது .



சூஃபிச கவிதை முனைப்பு புதிய தலைமுறை பிரதியாளர்களால் தயாரிக்கப்படுவது மிகக் குறைவு என அடையாளப்படுத்த முடியும்.எனினும் மனித முயற்சியினால் பலதையும் உற்பத்தி செய்ய முடியும் தயாரிக்க முடியும் என்பதற்கு அனாரின் இவ்வகையான கவிதைகள் பெரும் சான்று.வைரத்தின் தேவை குறைவாக இருப்பினும் அதன் மதிப்பு குறைந்துவிடுவதில்லை.ஒரு தலைமுறை கொண்டாடும் சூஃபிச கவிதைகளில் அனாரின் கவிதைகள் முதன்மை பெரும் என்பது திண்ணம்.



ஏ.நஸ்புள்ளாஹ்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7