நம்மை இணைத்த ஒரு நிகழ்வு
நேற்றிலிருந்து எனது இரவை
கனவுகளால் போர்த்திக் கொள்கிறது.
குளிர் பொதிந்த கனவு
நிகழ்வின் சூட்டைக் கொண்டு
என்னை ஆளுகிறது.
நீயும் நானும்
நதிகளையும்,
மலை கடலையும்.
கடந்த அந்த பெரும் நிகழ்வை
நான் உன்னுடனான உரையாடலில்
சொல்லி தொலைக்கிறேன்.
நீ
மழை இரவில் அருந்திய
தேநீர் பற்றியும்
பகலை கூவி வரவழைத்த
சேவல் கறிக் குழம்பாகியதையும்
பற்றியே பேசி ருசிக்கிறாய்
அது கடந்த களவு நொடிகள்
என்பதை மறந்து.
இப்போது நான்
விழிக்கப் போறதாக சொல்கிறேன்
நீ பெரும் கோபத்தை
அள்ளி எனக்குள் விசுறுகிறாய்.
நீ மறுப்பதனாலேயே
நான் உன்னை கனவென்பதிலிருந்து
அகற்றி விடுகிறேன்.
#
பழுது பட்ட சொல்
பழுது பட்ட சொல்லொன்றை
கடந்த காலங்களிலிருந்து
பாதுகாத்து வருகிறேன்
எனது புத்தக அலமாரியில்.
புத்தகஙகளை தூசி தட்டும் போதும்
புத்தகங்களை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கும்
போதும்.
அந்த சொல் என்னை
படிக்க வேண்டி நிற்கும்.
காயம் தீர்ந்து போகட்டுமே என்பேன்.
சலித்துக் கொள்ளும்.
பாவப்பட்டு நான் உன்னை
படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை
எனக்கான சொல்லை நானே
உருவாக்குவதில் விருப்பமுடையவன்.
நீ சொல் உன்னை உருவாக்கியவன் யார்
உனை பழுதுபடுத்தியவன் யாரென
நான் நேற்று அந்த சொல்லிடம்
உரையாடிய போது.
கோபமாக எனது அலமாரியை விட்டு
வெளியேறியது.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர்
நான் அந்த சொல்லை காண்கிறேன்
இன்னொருவரின் அலமாரியில்.
.#
வரட்டியில் இன்னுமிருக்கிறது பச்சை
ஒரு ஆதிக் கால
துரோகத்தின் நிழல்
மாயப் பொழுதில்
ஓரப் புன்னகையுடன்
உதடுகளை அகல விரித்து
மொழிந்தது அந்தச் சொல்லை.
இரவு அது வெளியே வருகிறது
வெள்ளையாடையுடன்.
எல்லோரும் சிவப்பு நிறத்தில்
நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர் மஞ்சள் பச்சையென நிறங்களோடு
ஒதுங்கி நிற்கிறார்கள்.
நீல வர்ணத்தை அள்ளி வந்து
சிலர் ஊற்றி குதூகலிக்கிறார்கள்.
ஒரே நிற வாடை பூமியெங்கும்
வீசுகிறது.
இப்போது விடியக் காத்திருக்கிறது
இரவு.
சிலர் வரட்டி தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
.#
ஆதி இரவு
தேடி களைத்தே போன
பொழுதொன்றில்.
சம்மணம் கொட்டி
தனிமையோடு வாழப் பழகிய நான்
ஆதிகால நிகழ்வொன்றை
நினைத்தழுகிறேன்.
நீ தர மறுத்த இரவென்பதால்
அப்போது நான் உறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
களைப்போடு நா வரண்டு
வார்த்தைகளை உச்சரிக்க
முடியாமல் தாகித்திருக்கிறேன்.
நீ பாவப்பட்டு உறங்குவதற்கென
அந்த இரவை பரிசளிக்கிறாய்.
இரவல் வாங்கி உறங்கிக் கொள்ள
நான் பழக்கப்படாததால்
உனக்கே அந்த இரவை
தந்து விடுகிறேன்.
இனி நீ
அந்த இரவை விடிய விடாமல்
பார்த்துக் கொள்ள
உன் கவிதையைக் கொண்டு
வழி நடாத்து.
.
#
வானமானவன்
அந்த பயணம் என்னை திருப்திப்படுத்தவில்லை.
நான் என்பது சிறகு
றெக்கையடிக்க சிறுபராயம் தாண்டி
தயாராகிறேன்.
தவழும் போதே நீ
பாதை பற்றியேதும் அறியத்தந்ததா
ஞாபகமில்லை.
வானம் உனதென பிரகடனப்படுத்திய பிறகு
சிறகுகள் எதற்கு.
பயணம் தடைப்படுமென்ற செய்தி
நிச்சயமாக உன் செவிகளை சேராது
நான் இறகுகளை துறந்து
நீந்த தயாராகிறேன்
பயணத்தை முடிப்பதற்கு நான்
மீன்களாவதில் தப்பில்லை.
காத்திரு இந்த சேதி வரும்
நான் பயணத்தை முடித்து விட்டேன்.
...
ஜே.பிரோஸ்கான்