ஒரு அமைதி நிகழ்கிறது
உன் தப்பின் நெருடல்கள்
உனது குரல்வளையை அழுத்துகிறது
சப்தம் எழுப்பபடாமல் கதறுகிறாய்
ஒரு பகலும் இரவும் அமைதியாகிறது.
காற்றின் மேல் அமர்ந்து எப்படியோ
என்னை வந்தடைகிறது உன் தப்பு
எச்சிலை விழுங்கிக் கொள்வது போல
மென்று விழுங்கிறேன்.
எனது கை பேசி அலறுகிறது
நண்பன் தப்பின் வடிவத்தை பிரதி செய்கிறான்
அவனோடு முடியட்டுமே நிறுத்த விரும்புகிறோம்.
வீட்டு முற்றத்து மரத்தில்
ஒரு பறவையாய் வந்து நின்று
என்னை தொந்தரவு செய்கிறது
உனது தப்பு.
கூழாங்கற்களைக் கொண்டு அடிக்கிறேன்
சிணுங்களோடு பறக்கிறது.
இன்னேரம் உன் வீடு வந்திருக்க வேண்டும்
என் வீட்டு கூழாங்கற்களைக் கொண்டடித்து
விரட்டிய செய்தியோடு.
..
மனித மரம்
அவன் வியர்வையால் நிறைந்து
அந்த தெருவோரத்தில் வளர்ந்து
விரிந்து நிற்கும் வாகை மரத்தடியில்
நிழலுக்கென ஒதுங்குகிறான்.
மெது மெதுவாக காற்றை
வீசத் தொடங்கியது மரம்.
உடல் வியர்வையை விட்டு விடுபடுகிறது
களைப்பும் நீங்குகிறது.
மரத்தை பார்த்து நீ எவ்வளவு பெரிய
தர்மத்தை இந்த பூமியிலே நிகழ்த்தி விடுகிறாய்.
மரமே நன்றியென்கிறான்.
மரம் இப்போது இவனைப் பார்த்து
ஒரு கேள்வி கேட்கிறது
மனிதா நீ என் காற்றைக் கொண்டு
திருப்தி பட்டு விட்டாய்
அதனை நான் உணர விரும்புகிறேன்
ஓ அப்படியா அதற்கு நான் என்ன செய்ய
ஒரு நாள் மட்டும் நான் மனிதனாக
வாழ்ந்து விடுகிறேன்
நீ மரமாய் நின்று எனக்கு அந்த காற்றை
தந்து விடு என்கிறது
இருவரும் மாறிக் கொள்கிறார்கள்
மரம் மனிதனாகி கடைத் தெருவுக்கு வருகிறது.
கட்டிடம் நிறைந்த தெரு
மரங்களற்று வெயிலால் வரண்டு கிடக்கிறது
தாகமெடுக்கிறது தண்ணீர் போத்தல் ஐம்பது ரூபா
பசியெடுக்கிறது மதிய உணவு நூறு ரூபா
இப்படியாய் அந்த நாளை கழித்து விட்டு
அந்த மரத்திற்குள் ஒதுங்குகிறது
இப்போது காற்று மெல்ல மெல்ல வீசி
வியர்வையை துடைக்கிறது.
மனசு மனிதனிலிருந்து விடுபட
மரத்திடம் பேசுகிறது.
மரம் என்னால் மீண்டும் மனிதனாக
வாழ்வதற்கு விருப்பமல்லை
என்னை மன்னித்து விடு என்கிறது
மனிதாகிய மரம் இது ஏமாற்று வேளை
இது மனித குணம்
இதனை என்னால் ஏற்க முடியாது என்கிறது
அழுது புலம்பி மரமான மனிதன்
கதறுகிறான்.
மனசு இலகி மனிதனான மரம்
அவனுக்கு சொல்கிறது ஒரு நாள் அல்ல
ஒரு மணி நேரம்கூட நான்
மனிதனாக வாழ முடியாது
மனிதனை இழுத்து பறித்து மீண்டும்
மரமாகிக் கொள்கிறது
மனிதனாய் தூக்கி வீசப்பட்டவன்
ஒரு வனத்தை தேடிப் போகிறான்.
..
முதல் காட்சி
வீட்டுச் சுவரில் நிழலாடும் உருவம்
என் தனிமையை சரி செய்கிறது.
நான் உரையாடுவதற்கென
அழைக்கும் போதெல்லாம் அது
என் கூட வந்து உரையாடுவதை
மறுத்திட முடியாது.
அப்படித் தான் நேற்றிரவு
இந்த பேய் பிசாசுகள் பற்றி
பேச தொடங்கினோம்.
மிகவும் பயங்கரமாய் பேச
தொடங்கிய உருவம்
என்னை பயத்தின் உச்சத்துக்கு
கொண்டு சென்று
எனது அறையை விட்டு
ஒரு வனப்பகுதியில் நிறுத்தி விட்டு
சிரிக்கத் தொடங்கியது.
உருவமே ஏன் என்னை
இப்படியழைத்து வந்து
நடு நிசியில் இந்த வனத்தில்
நிறுத்திருக்கிறாய் என்றேன்
நீ பேய் பற்றி கேட்டாயே
அதை காட்டிவிட தான் என்றது
எச்சிலை விழுங்கிய படி
எங்கே
இதோ இங்கே என்றது
நடு நடுங்கி திரும்புகிறேன்
கட் கட் என்கிறார் டைரக்கடர்.
..
மழைத் தேநீர்
இந்த மழையின் குளிரில்
உறையும் உடல்.
ஒரு டன் வெயிலை கேட்கிறது.
பிசிறி பாயும் கூதலை விரட்ட
நீ தேநீரோடு வருகிறாய்.
நான் அருந்துவதற்கு
தயாரில்லையென்ற போது
தனியாக சூட்டை பிரித்து தருகிறாய்
நான் பூசிக் கொள்கிறேன் உடல் முழுதும்.
கூல் தேநீர் அருந்துவது
உனக்கான விருப்பம் என்கிறேன்
முணு முணுக்கிறாய்
நெருங்குகிறேன் சமிக்ஞையறிந்து.
மழை இப்படியே பெய்யட்டும்
திறந்து விடு ஜன்னலையென்கிறேன்.
சிரிக்கிறாய்
மின்னல் வெட்டி மறைகிறது.
இப்போது காற்று ஜன்னலை அசைக்கிறது
நீ மூடி விட்டு நகர்கிறாய்
இன்னொரு தேநீர் வேண்டுமென்கிறேன்.
..
என்னிலிருந்து நான்
ஒரு காத்திருப்பை
அந்த தனிமை ஏற்க மறுக்கிறது.
ஒரு தவிப்பை
காலம் தின்று நகர்கிறது.
ஒரு கோபம்
ஆதி உறவை துண்டிக்க வைக்கிறது.
இப்போது அந்த காத்திருப்பை
நான் தொடர்வதாய் எண்ணமில்லை.
மனசு தனிமையை ஆராதிக்க
காலத்தை நோக்கி நகர்கிறது.
அந்த இரவின் அமைதி
கோபத்தை விடுவிக்கிறது.
பின்னர்
விடுபட்ட காத்திருப்பை
நான் மீளவென
தனிமை என்னை
பிரதி செய்து விடுகிறது.
நான் காத்திருப்பை தொடர்கிறேன்
என்னிலிருந்து தனிமை
நீங்கி நகர்கிறது.