இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறைபடிந்த நாட்களாகவே இக்காலப்பகுதியைக் கருத வேண்டியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை நாட்டின் புதிய பிரதமராக நியமித்திருந்தமை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை நாம் அவதானிக்கூடியதாய் இருந்தது.
தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ம் ஆண்டைய இரண்டாவது குடியரசு யாப்பிற்கிணங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு ஆணை பெண்ணாகவோ பெண்ணை ஆணாகவோ மாற்றுவதைத் தவிர அனைத்து அதிகாரங்களும் இந்த யாப்பினூடாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த யாப்பின் பிரகாரம் ஒரு பிரதமரை நியமனம் செய்யவோ அல்லது பதவி நீக்கம் செய்யவோ பாராளுமன்றத்தைக் கூட்டவோ அல்லது ஒத்தி வைக்கவோ அல்லது ஒரு வருட பூர்த்தியின் பின் கலைத்துவிடவோ தேவையான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது, மாறாக குற்றமிழைத்தவர் அல்லது நாட்டை ஆளும் தகுதியற்றவர் என பாராளுமன்றம் கருதும்பட்சத்தில் 2/3 பங்கு உறுப்பினர்களின் விருப்புடன் மாத்திரம் அவரை பதவியிலிருந்து நீக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவின் ஜனாதிபதி முறையையும்விட அதிகாரம் மிக்கதாக எமது நாட்டின் ஜனாதிபதி முறைமை காணப்பட்டது. நாட்டு மக்களின் மீது கரிசனையுள்ள ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்த யாப்பின் தத்துவங்கள் நன்மைபயப்பதாகவே அமையும் மாறாக சிறந்த பண்புகளைக் கொண்டிராத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் (தற்போதைய நிலைமை) நாடு அதளபாதாளத்திற்கே இட்டுச் செல்லப்படும் என்பதில் ஐயமில்லை. இதனைக் கருத்திற் கொண்டே 2015 இல் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் 19வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் சிறு தளர்வினை ஏற்படுத்தியிருந்தது. இதன் பிரகாரம் ஒரு பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. இருந்தபோதும் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்துள்ளார் என ஜனாதிபதி கருதும்பட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமென கூறப்படுகின்றது. இங்கு ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்துள்ளாரா? என்பது வெள்ளிடைமலை.
மேலும் 33(2)(C) சரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் ஒத்திவைப்பதற்கும் கலைப்பதற்குமான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தாலும் 70(1) சரத்தின் பிரகாரம் அந்த அதிகாரம் வரையறைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதன்படி 4 1/2 வருடங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது, இருந்தபோதும் பாராளுமன்றத்தின் 2/3 உறுப்பினர்கள் கோரும்பட்சத்தில் கலைக்க முடியுமென கூறப்படுகின்றது. இங்கு 4 1/2 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முதல் மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்தைக் கலைக்க முனைந்த செயாற்பாடு சரிதானா?
இது இவ்வாறிருக்க பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோன ஜனாதிபதியின் செயற்பாடு உலக அரங்கிலும் உள்ளூர் அரசியலிலும் எதிர்வினைகளைத் தோற்றுவித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது மகிந்தவினால் தாபிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியடைந்திருந்தமையும் இதன்மூலம் மகிந்தவின் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகக் காணப்பட்ட நிலையில் கேலிக்கூத்தாய் அமைந்த பிரதமர் நியமனத்தில் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளமையானது மக்களிடத்தில்அவருடைய செல்வாக்கு சரிந்துவிடுமா? என்ற அச்சத்தையும் அரசியல் அவதானிகளிடம் தோற்றுவித்துள்ளது.
அரசியலில் இரு துருவங்களாகவிருந்த முஸ்லீம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றாக கைகோர்த்திருப்பதானது மைத்திரியின் அரசியல் காய்நகர்த்தலால் ஏற்பட்ட எதிர்வினை எனக்கொள்ளலாம். இது சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் இருப்பை காலூன்றச் செய்யும் நடவடிக்கையாகவும் பேரினவாதக் கட்சிகளின் தங்கி வாழும் அரசியலை நோக்கி நகர்த்தும் செயற்பாடாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
1994ம் ஆண்டிற்குப் பிற்பாடு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதில் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதற்கு ரணில் விக்ரம சிங்க அவர்களின் தலைமைத்துவமே காரணமென கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸ அவர்கள் கட்சியின் தலைமத்துவத்திற்கு தெரிவு செய்யப்படாலாமென்ற கருத்துக்கள் நிலவுகின்றது. அப்படி நிகழ்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு ஏறுவரிசை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இதுவும் மைத்திரியின் அரசியல் தந்ரோபாயத்தின் எதிர்வினையாகக் கொள்ளலாம்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவும் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்யவும் ஓரணியில் நின்று செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் மனோகணேசன் ஹிருணிகா போன்ற அனைவரையும் புறம்தள்ளிவிட்டு ஆரோக்கியமற்ற அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதானது அரசியல் அரங்கில் ஒரு வினோதமான செயற்பாடாகவும், அரசியல் நாகரிகமற்ற ஒரு செயற்பாடாகவும், பின் முதுகில் குத்தும் ஒரு இழுக்கான செயற்பாடாகவும் ஜனநாயக விரும்பிகளால் நோக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போராளிகளையும் தமிழ் மக்களையும் இரும்புக் கரம்கொண்டு நசுக்கிய மாறா வடு இன்னும் தீயாய் கனன்று கொண்டிருக்கும் நிலையிலும்
முஸ்லீம்களுக்கு எதிராக அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் பௌத்த இனவாதிகள் பள்ளிவாசல் தாக்குதல்களையும் கலவரங்களையும் உண்டுபண்ணிய சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையிலும்தான் மைத்திரி அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி கதிரையை அலங்கரித்தார். சிறுபான்மையினரை சுபீட்சத்துடன் வாழச் செய்வேன். அவர்களுக்கு சிறந்ததொரு அரசியல் தீர்வை வழங்குவேன், கோடிக்கணக்கான சொத்துக்களை ஏப்பம் விட்ட மகிந்தவையும் அவரது கூட்டத்தினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றெல்லாம் சூளுரைத்தார் ஆனால் இன்று நடந்ததென்ன? மகிந்தவின் ஆட்சியைவிட கேவலமான முறையில் சிறுபான்மை முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்டபோதும் பௌத்த இனவாத காடையர்களால் திகன கலவரம் மூலம் முஸ்லீம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட போதும் பள்ளிவாசல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போதும் ஒரு முஸ்லீம் இளைஞர் வீட்டுடன் சேர்த்து தீயிட்டு எரிக்கப்பட்டபோதும் முஸ்லீம்களின் வாக்குகளால் ஜனாதிபதியான இவரால் ஏன் காத்திரமான நடவடிகை எதனையும் எடுக்க முடியவில்லை. அப்போதே அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் கட்சிகளுக்கும் இடேயேயான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியிருந்தமையை மறுப்பதற்கில்லை.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று மகிந்தவுடன் இணைந்து கொண்டு ரணில் மத்திய வங்கி முறிகள் தொடர்பான மோசடிகள் செய்தமையினாலயே மகிந்தவைப் பிரதமராக்கினேன் எனக்கூறுவது நகைப்பிற்கிடமான செயலாக தெரியவில்லையா?
உண்மையில் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டைக் கருத்திற்கொண்டே JVP போன்ற கட்சிகள் ஓரணியில் நின்று ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இது ரணிலைக் காப்பாற்றும் நடவடிக்கையல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் இருப்பு தொடர்பாக ரணிலின் அரசாங்கத்தால் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் அது கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விடயம்தான். அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் பின்னணியில் தயாகமகே மறைகரமாய் செயற்பட்டதையும் அம்பாறை பள்ளிவாசலின் சேத விபரங்களை நேரடியாக சென்று பார்வையிட திராணியில்லாமல் ஒலுவில் பங்களாவிற்கு சென்று கூட்டம் நடத்திவிட்டுச் சென்றமையும் ரணில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்தும் சட்டத்தை அமுல்படுத்த முடியாத கையாலாகாத்தனத்தையும் வாரலாற்றில் மறந்துவிட முடியாது.மேலும் ரணிலுடன் இனவாதிகள் கைகோர்த்திருப்பதனையும் முஸ்லீம்கள் அச்சத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது.
மைத்திரியின் இந்த அரசியல் நாடகம் சுபமாய் முடிய வேண்டுமென்றிருந்தால் சஜித் பிரேமதாஸா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே அனேகரின் எதிர்பார்ப்பாகும்.
ஏயெம்மே நிஸாம்