திருவள்ளூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 8 பேரை போலீஸார் கைது செய்ததோடு, 5 வாகனங்கள் மற்றும் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி, வாகனங்களில் கடத்திச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னிக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில், திடீர் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்கும் படியும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் திருவள்ளூர் நகர் போலீஸார், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது, திருவள்ளூர் சங்கச்சாவடி அருகே ஏரியில் இருந்து மணல் அள்ளி வந்த லாரியையும், புன்னபாக்கம் ஏரியில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அப்பவரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், குமரன், பிரகாஷ் மற்றும் புல்லரம்பாக்கம் மாட்டு வண்டி உரிமையாளரான பிருதிவிராஜன், ஏரியில் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தியதாக உதயகுமார்(33), விடையூர் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ்(40), புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜு(35), சொக்கநல்லூர் டிராக்டர் ஓட்டுநர் குமார்(30) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒரு லாரி, ஒரு டிராக்டர், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மாட்டுவண்டி ஆகிய 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.