(ஒரு நெடுங்கதையின் தொடக்கம்)
- பாலசுகுமார் -
கங்கை வேலி எங்கும் நெற்கதிர்களால் பந்தலிட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது .மாவலி கங்கை இவ்வூரை சுற்றி வேலி போல் கங்கும் கரையுமாக வளைந்து வளைந்து வருவதால் இப் பெயர் பெற்றது.ஊரெங்கும் தோரணங்கள் தொங்க கங்கேஸ்வரர் கோயில் பூரண கும்ப வரிசையில் வாழ்த்துக்கு காத்திருக்கும் தருணம்.மேங்காமத்து கங்காணங்களும் அங்கு கூடினர் மன்னன் வரவுக்காய்.கங்கேஸ்வரர் கோயிலும் ராஜேந்திரன் கட்டளைப் படிதான் நிர்மாணிக்கப் பட்டிருந்தது.கங்கு வேலி பார்பவர் மனதை அள்ளிச் செல்லும் அழகு நிலம் மா பலா வாழை என முக்கனி கூடல் அது.மூங்கில் புற்கள் காற்றில் ஒன்றோடொன்று மோதி உறுமும் ஒலி ஊர் வாசல் கோடிவரை ஒலித்து கட்டியம் கூற மன்னன் படயணியின் ஒற்றர் படை ஊரின் எல்லையில் முகாமிட்டிருந்தது.
மங்கல வாத்தியங்கள் முழங்க மன்னன் வரவு மகிழ்வின் தருணங்களாய் எல்லோர் முகத்திலும் சந்தோசத்தை தந்தது.மன்னன் மங்களேஸ்வர் கோயிலில் வழிபட சோழ நாட்டிலிருந்து கொண்டு வரப் பட்ட பெரும் கண்டா மணி நிவந்தமாக கையளிக்கப் பட தன் வரவையும் கோயில் பற்றிய பணிகளையும் ஸ்தபதிகள் கல்வெட்டாய் பொறித்தனர்.தன் தந்தையார் உருவாக்கிய ராஜ ராஜேஸ்வரத்தின் பிரதி பிம்பங்களாகவே தான் அமைக்கும் கோயிகளை கருதினான்.
இப்போதெல்லாம் அவனுக்கு ஈழதேசம் கனவு தேசமாய் மாறிக்கொண்டிருந்தது இந்த தேசத்தின் மூதாதயரான தமிழ் மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தான்.ஆக்கிரமிப்பாளனாக வந்தவன் இன்று அரவணைப்பாளனாக மாறியிருந்தான்.காலம் காலமாக நடந்த சிங்கள மன்னர்களின் படையெடுப்புகள் இத் தேசத்தை சின்னா பின்னப் படுத்தியிருந்தது.இங்குள்ள பல குறு நில மன்னர்கள் சிங்கள மன்னர்களுக்கு கப்பம் செலுத்தி வந்தனர்.அந்த அடிமை முறையயை நீக்கி சுதந்திர ஆட்சியயை பிரகடன்ப் படுத்தினான் ராஜேந்திரன்.
ஆலய வெளியில் அமைக்கப் பட்டிருந்த மன்றத்தில் குடவோலை முறையில் ஊரின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு மன்னன் முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்தது.
மன்னன் இழைப்பாற இடம் தேடி நகர்ந்தான்.எண்ணங்கள் சிறகடிக்க சமுளமரங்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலைக்குள் புகுந்தான் மன்னன்.பச்சைக் கிளிகள் கீச்சிட இரண்டு கிளிகள் இன்பம் பொங்க பேசி மகிழ்வது திரிபுவனையின் ஞாபகத்தை தஞ்சையிலிருந்து இழுத்து வந்தது.கண்களுக்குள் அவள்
பொன்னேர் முகத்தாள்
கயல் நேர் விழியாள்
பூ நேர் இதழாள்
மென்னேர் நடையாள்
சிரிப்பால் சிலிர்ப்பாய்
சிவப்பால் அழகாய்
வனப்பால் எடுப்பாய்
வருவாள் என் மடியாய்
கன்னல் மொழியில்
கவிதைத் தமிழ் தருவாள்
என்னில் படரும் கொடியாய்
இன்பம் தரும் வல்லாள்
குதிரை கனைக்கும் சத்தம் ராஜேந்திரனை குழப்பிவிட எரிச்சல் மிகுந்தவனாய் எழுந்த அவன் முன் மண்டியிட்டு நின்றனர் ஒற்றர்கள்.
"அரசே பச்சையூர் பக்கம் எதிரிகள் ஊடுருவி இருப்பதாக செய்தி வந்துள்ளது நம் தளபதி குருகுலத்துராயர் நாம் போகும் திசையயை மல்லிகைத்தீவு வழியாய் சென்று எதிரிகளை துவம்சம் செய்யலாம் என்கிறார் நம் பயண வழி மாற்றப் படுகிறது"
என்று சொல்ல கறுத்து பெருத்த தன் போர்க் குதிரையில் மின்னெலென பாய
தயாராய் அணிவகுத்திருந்த அவன் வேழப் படை விர்ரென கிழம்பியது.
(தொடரும்)