நொவம்பர் 3 ஆம் திகதி முதல், நான்கு குழந்தைகள் உட்பட 101 குடியேறிகள் ஆங்கிலக் கால்வாயூடாக இங்கிலாந்தினுள் நுழையும் முயற்சியில் முன்னெப்போதுமில்லாதவகையில் மிகவும் ஆபத்தான 21 மைல் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்தவருடம் மார்ச் மாதம் பிரெக்ஸிற்றின் பின்னர் இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படக்கூடுமென்ற அச்சத்தில் கடத்தல்காரர்கள் துரிதகதியில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது.
ஈரானிலிருந்து சேர்பியாவுக்குள் விசா இன்றி நுழையக்கூடிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் சுமார் 40000 ஈரானியர்கள் சேர்பியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது ஒரே நோக்கம் சேர்பியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதேயாகும்.
சேர்பியாவிலிருந்து கடத்தல்காரர்கள் மூலமாக சிறிய படகுகளில் இவர்கள் இங்கிலாந்தினுள் கொண்டுவரப்படுகிறார்கள். இதுவரை எவ்வித உயிர்சேதமுமின்றி இக்குடியேறிகள் இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் காலநிலை மோசமடைந்து வருவதனால் இனி வருங்காலங்களில் படகுகள் மூலம் இப்பயணத்தை மேற்கொள்வோர் கடுமையான நிலைமைகளுக்கு முகம்கொடுக்க நேரிடலாமெனவும் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்