நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தியேட்டர்களில் அவர்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி உள்ளனர். மதுரையில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. கோவையிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. போராட்டம் காரணமாக சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள சர்கார் பேனர்கள் அகற்றப்பட்டது. சென்னை ராயபேட்டையிலும் திரையரங்கு முன்னதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும். காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவினர் புன்படக்கூடாது என்பதை எங்களுடைய இலக்காகும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தணிக்கை குழுவால் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப்படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.