நாம் நலமாகச் சந்திக்க வாய்ப்புத் தந்த இறைவனை நன்றி கூறித்துதிக்க வேண்டும். இன்றைய நாள்மட்டுமல்ல இந்தக் காலகட்டத்தில் மலரும் ஒவ்வொரு நாட்களையும் காணவும் அனுபவிக்கவும் வாய்ப்புத் தருவது அவரின்றி வேறு யாராக இருக்க முடியும்? எனவே அவருக்கு பலகோடி நன்றிகள் சொன்னாலும்; தகும்.
புலரும் பொழுதிலெல்லாம் நிலைத்திருப்பவரும் அவரே, கடக்கும் பொழுதிலெல்லாம் நம்மை வழி நடத்துபவரும் அவரே! எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிருணயிக்கின்றவர் அவர்தான், அவை கடக்கின்ற தூரத்தை அளந்து வைப்பவரும் அவரே! நாம் சந்திக்க மனிதரை முன் கொண்டு வந்து நிறுத்துபவரும் அவரே, அவர்களில் நமக்கு ஒரு உறவை ஏற்படுத்தித் தருபவரும் அவரே! நூம் செய்கின்ற பணியில் உயிரூட்டம் தருபவருமு; அவரே, அதன் மூலம் நம் தொழிலில் உயர்;வை முன்வைப்பவரும் அவரே! மொத்தத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப நம்மை வழிநடத்துகின்ற தலைவனாக இருப்பவர் இறைவனே! இருந்தாலும் இவை அனைத்தலும் அவருக்கிருக்கும் பங்கினைப் புறக்கணித்து விட்டு வாழ்வு என்பது நம்மால்தான் நிருணயிக்கப்படுகின்ற ஒன்றென எண்ணிச் செயற்பட நாம் முனைகின்றபோது அவரது வழியைவிட்டு நாம் தடம் புரண்டு விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாக நம் வாழ்வில் அமைந்து விடுகின்றன.
பாதையில் போகின்ற ரயில் வண்டி தண்டவாளம் இரண்டும் விலகாதவரையில் தடம் புரள்வதில்லை. நம் வாழ்வு கூட ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்களும் விலகாத வரையிலும் தடம்புரளப் போவதில்லை. நமது வாழ்வை அமைத்துத் தருகின்ற இறைவன் அதைத் தனித்து கொண்டு போகின்றவரல்ல வாழ்வை நிருணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செல்ல நம்மைத்தான் அவர் எதிர்பார்த்திருக்கின்றார். இதனால் நம் வாழ்வு என்னும் ரயிலுக்கு ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்கள் அமைகின்ற என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று நாம் இறைவனின் உறவிலிருந்து பிரிகின்றோமோ அன்றே நாம் அவரிலிருந்த விலகிவிடுகின்றோம் வாழ்க்கையும் தடம் புரளத் தொடங்கிவிடுகின்றது. இதன் பின்னர் ஒன்றில் நாமாகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு நமது வாழ்க்கையை தொடர்ந்து பயணப்படச் செய்கின்றோம் அல்லாது போனால் பிறர் நமக்காகச் செப்பனிட்டுத் தர நம் வாழ்வின் பயணம் தொடருகின்றது. அதுவுமில்லாவிட்டால் எந்த செப்பனிடலுக்கும் இடம் கொடுக்காதவர்களாய் நாம் இருப்போமானால் வாழ்க்கை நிரந்தரமாகவே தடம் புரண்டு விடுகின்றது.
இறைவன் காட்டும் வழியில் பயணிப்பதென்பது ஒன்றும் சுலபமான விடயமல்ல. யேசுவின் வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கை மீத அமைந்திருக்கவில்லை. அதைப் பின்பற்றி நடப்பதென்பது முள்மிது நடப்பதற்கொப்பானது. இருந்தும் அதைவிட சிறப்பான பேறுள்ள வழி நமக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
தீயினூடாகப் பயணிக்கும் பொன் ஜொலிப்பதுபோல துன்பமான பாதையூடாகப் பயணிக்கின்றபோது நம் வாழ்வு ஒரு அர்த்தம் கொண்டதாக மாறியமைகின்றது. ஆண்டவரின் வதி முறைகளை , வழிமுறைகளை ஏற்றுக் கொண்ட தொண்டனாக எம்மை அமைத்துக் கொண்டால் மட்டுமே எம்மால் இப்படியான மகிமைக்குரிய வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டிருக்க முடியும். அப்போதுதான் நாம் ஒவ்வொரு நாள் பொழுதிலும் செய்கின்ற ஒவ்வொரு பணியிலும், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும், சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிலும் இறைவனின் மகத்துவத்தைக் காணவும் முடியும், அது கொண்ட வரும் வாழ்வை அனுபவிக்கவும் முடியும்.
இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ முற்படும்போது அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறும் மனிதர்களாக மாஙி அமைவோம். இறைவனின் நன்மைத்தனம் நம் வாழ்வில் அள்ளித் தெளிக்கின்ற வசந்தங்களுக்காக நன்றி கூறுபவர்களாக நாம் இருப்போம் என்பது உறுதி!
ஆண்டவனின் தொண்டனாக நாம் அமைகின்ற போது நம் வாழ்வில் அவரை விட்டு விலகுதல் என்கின்ற வார்த்தைக்கே இடம் இருக்கப்போவதில்லை! நம் வாழ்வும் தடம் புரளாமல் சென்று கொண்டெ இருக்கும்.
யேசுவின் வாழ்க்கையைப் பின்பற்றி இறைவனின் தொண்டனாக மாறுவது சிரமமான செயலென்றாலும் அந்த இறைவனின் அருளினால் அது நிச்சயம் கை கூடும். ஆவியானவரின் வழிகாட்டலும் வல்லமையம் எந்த கடினமான பாதையாயினும் அதில் தடையின்றி பயணம் செய்ய வேண்டிய ஞானத்தையும், விவேகத்தையும், தைரியத்தையும் எமக்கு அளிக்கும்.
யேசுவை நேரடியாக அனுபவித்தவர்களே, அவர்களது நன்மைத் தனத்தைக் கண்டு வியந்தவர்களே அவர் முன்னிலையில் இவர் சொல்வதை நாம் எப்படிச் செய்ய முடியும்? இவரை எப்படி நாம் பின்பற்றுவது என்று கேட்டவர்கள்தான். யோவான் நற்செய்தி 6ம் அதிகாரத்தில் இதை நாம் காண்கின்றோம். அவர்கள் சொல்வதோடு நின்றுவிடமால் அவரைவிட்டு நீங்கவும் தலைப்படுகின்றார்கள். பொழுது போக்கிற்காக அவர் வார்த்தையைக் கேட்டுப் போக வந்த மனிதர்கள் போன்று தமக்குப் பொருந்தாத கட்டம் என்று கண்டதும் வெட்டிக் கொண்டு போகின்றவர்களாக அவர்களை நாங்கள் காணுகின்றோம்.. எல்லோரையும் புரிந்து கொண்டிருந்த யேசு தன்னோடு நிலைத்திருந்த பன்னிருவரைக் கேட்கின்றார் அவர்களது முடிவு என்னவாக இருக்கப் போகின்றது? பேதுரு தெளிவான முடிவைச் சொல்லுகின்றார். 'வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமிருக்க. நாம் யாரிடம் போவோம்' என்ற ஞானம் மிக்க இந்த வார்த்தைகள் வழியை யேசுவிடம் கண்டுகொண்ட ஒரு தொண்டனுடைய வார்த்தைகள்! தன்னை முற்றிலுமாக இறை சித்தத்திற்கு அர்ப்பணித்த ஒருவருடைய வார்த்தைகளால்லவா இவை! இவ்வாறான ஒரு மனப்பக்குவம்தான் இன்று நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள எமக்குத் தேவையாக இருக்கின்றன.
' வாழ்வும் வழியும் நீயாக இருக்க, என் வாழ்வைக் கொண்டு நடத்த உறுதுணையாக இருக்கக் கூடிய உன்னை விட்டு விலகுதலுமில்லை தடம் புரள்வதுமில்லை' என்று சொல்லக் கூடிய ஒரு உண்மையான தொண்டனுக்குரிய இயல்புகளை எம்மிடத்திலே நாம் வளர்த்துக் கொள்வோம்..
இதற்கு இறை சித்தம் என்பது அவசியம்! தூய ஆவியின் அருள் உதவி;யானது நிரம்பத் தேவை. யேசுவின் வாழ்ந்து காட்டும் வழிகாட்டுதல் நமக்குத் தேவை. இவை மூன்றும் எமக்குக் கிட்டாத வரையில் சீரிய வழியில் பயணம் செய்யும் வாழ்க்கை நமக்குக் கிட்டப் போவதுமில்லை, நமது வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் நாம் அனுபவிக்கப் போகும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் மனிதர்களாக நாம் வாழப் போவதுமில்லை.
எனவே நம்மை முற்றிலும் இறைவனுக்கே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவர் சித்தத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் வாழ்வை அமைத்துக் கொண்டு, உண்மைத் தொண்டனாக அமைந்து அவரை நன்றி கூறித் துதிப்போம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்