இந்த ஆனாலும் என்ற ஒன்றே எதிர் காலம் என்னாகுமோ என்ற கேள்வியை மனதில் குடையப் பண்ண போதுமானது!
நாம் உயர உயரப் போகலாம். அதில் தடையேதும் கிடையாது. .ஆனாலும் .அந்த உயரப் போனதன்பின் என்ன?
எதையும் என்னாலே பண்ண முடியும் என்று நாம் இறுமாப்பு அடையலாம். ஆதில் தடையேதும் இல்லை. ஆனாலும் இறுதியில் என்ன? அந்த இறுதி என்ற ஒன்றை நாம் சந்திப்பதென்பது மட்டும் உறுதி! அதிலிருந்த தப்பி விடலாம் என்பது தப்புக் கணக்கு! நம் உயர்வும், வளமும், உழைப்பின் பயனும், வாழ்வின் சிறப்பும் நாம் கண்டடைந்த அனைத்துமே கடவுளின் அருளாக மாறி நம்மோடு நிலைக்க வேண்டும். அல்லாது போனால் நம்மில் உள்ள, நம்மோடு உள்ள அனைத்துமே வீண்தான்.
லாசர் ஊனம் வடியும் புண்களுக்கு எஜமானன். ஆவன் உணவுக்காக தவம் கிடந்த வீட்டின் எஜமானோ பெரும் செல்வந்தன்! தன் உழைப்பால் உயர்ந்தவன், நல்ல சமூக அந்தஸ்தோடு திகழ்ந்தவன். அனாலும் என்ன? முடிவு என்ற ஒன்று இருந்ததல்லவா? பபுணம் படைத்தவன் என்பதற்காக அவனால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. அவனும் அந்த முடிவு என்ற நியதிக்குட்பட்டே ஆகவேண்டியிருந்தது. ஆக இருவருமே அதைச் சந்திக்க நேர்ந்தது. அதில் முடிவு என்னவாயிற்று? ஊனமாக வாழ்ந்தவன் ஆபிரகாம் மடியிலே,...உயர்வாக வாழ்ந்தவன் அனலின் இடையிலே!
இது எதைக் காட்டுகின்றது? பணம் படைத்தவன் இறைவனின் கிருபையோடு வாழவில்லை என்பதையல்லவா நமக்குக் காட்டுகின்றது.
யோபு செல்வம் படைத்திருந்த ஒருவன். இறைவனின் கிருபை அனைத்தையும் அவனிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தது. துன்பங்கள் அடுக்கடுக்காய் அவனைப் பீடித்து அவனை நடுத் தெருவில் கொண்டு வந்து சேர்த்தாலும் அவனிடம் இருந்தவை அனைத்தும் இறைவனின் கிருபையினாலே அவனுக்குக் கிடைத்திருந்த காரணத்தினால் அவை மீண்டும் அவனை வந்து சேர்ந்தன.
'நானே வாழ்வும் வழியும்' என்று அனைத்துக்கும் நானே என்று அவர் சொல்லுகின்றபோது, 'என்னில் வாழ்பவன் இறந்தும்கூட வாழ்வான்' என்று தன்னில் வாழ்வதுதான் உண்மை வாழ்வு என்று அவர் எடுத்துக் காட்டுகின்றபோது, நம் மேன்மை அனைத்தும் அவர் கிருபைக்குட்பட்டதாக இருக்கின்ற போதுதான் அது ஒரு நிறைவுள்ள வாழ்வாக அமைகிறது என்;பது தெளிவாகிறது அல்லவா?
நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, நம் வாழ்வைத் தெளிவாக அறிந்திருந்து, நமக்கு வேண்டும் காலத்தில் வேண்டும் வரங்களைத் தரும்போது அது அவரின் அருளூற்று என்பதைத் தெரிந்து கொண்டு நமக்குள்ளே அவரது கிருபையை உள்வாங்கிக் கொள்வோமானால். அவை இறுதி வரைக்கும் எம்;மோடு நிலைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இதோ அவர் வருகையை எதிர்பார்த்திருக்கின்ற நாம், அவரது கிருபையையும் எதிர்பார்த்திருக்கின்றவர்களாக – அதை நம்மோடு இணைத்துக் கொள்ளும் அவாவுடன் காத்திருப்போம்! என்றும் எப்போதும் எங்கும் எமது காலம் முடியலாம். ஆனாலும், அந்த முடிவு நமக்குக் கலக்கத்தைக் கொடுக்கும் ஒன்றாக மட்டும் இருக்கப்போவதில்லை. அந்த லாசரைப் போலவும், யோபுவைப் போலவும் முழுமை பெற்றவர்களாய் நாம் இருக்கப்போகின்றோம் என்பது மட்டும் திண்ணம். அதற்கு அவரது கிருபை ஒன்றே நமக்குப் போதும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்