———- நமசிவாய வாழ்க ———-
அகிலத்தின் எல்லா மனிதருக்கும் நான் எனது என்ற அடையாளம் இருந்தே ஆக வேண்டும். இந்த “நான்” மற்றும் “எனது” என்பது என்றுமே ஆணவம் என்ற சொற்பதத்தில் அடங்கிவிடாது.
நான் எனது உடல் எனது உடை என் தாய் என் தந்தை என்னுறவுகள் எனது மொழி எனது நிறம் இப்படி ஏராளம் நாம் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள உபயோகிக்கும் அடையாள வார்தைகளே.
அதாவது அகிலத்தின் எல்லா மனிதர்களும் இயல்பில் தனித்துவமானவர்களே.
நான் என்ற இந்த அடையாளத்தில் ஆணவம் என்றும் தலைவிரித்து ஆடுவது இல்லை.
இங்கே தனித்துவம் என்பது கர்வம் கொண்ட ஈகோ கிடையாது அத்தோடு தன்நலன்மிக்க சுயநலனும் கிடையாது இது தனியே தன்னை அறிவிக்கும் பிரயோகம் மட்டுமே.
தனித்துவத்தின் மகத்துவம் பரிபூரணத்தின் ஆரம்பமென்றாகிவிட்டால் தத்துவத்தின் உந்துகோல் சதாசிவத்தின் வாக்கியமாய் அகிலத்தில் பிறக்கும்.
சிவத்தை சீவனாய் அறிந்தவனுக்கு எளிதாய் அது முக்தியாய் கிடைக்கும். அத்தோடு இதனை எளிதில் அறியாத இந்த அகிலத்தின் மற்றைய மனித சீவன்களின் வெறும் அடையாளப்படுத்தும் அறிமுகம் ஆகின்றது.
உலகத்தின் அனைத்தும் தானாற்றும் தனித்துவமிக்க கருமங்களினாலேயே அறியப்படுகின்றன இதில் நிறைகொண்ட சிவமும் குறைகொண்ட நாமும் ஏன் அந்த பஞ்ச பூதங்களினாலான இந்த அண்டசராசரமும் என்றும் விதிவிலக்காகி விட முடியாது.
புராணங்களில் காமனும் சோமனும் அறியப்பட்டதும் இதிகாசங்களில் ராமனும் சகுனிமாமனும் அறியப்பட்டதும் ஏன் இன்றும் நாம் வாழும் காலங்களில் வாழும் இந்த பிரபலங்கள் அறியப்படுவதும் அவரவர் தனித்துவத்தினால் மட்டுமே.
ஆகையால் தனித்துவத்தை பேணுவோம் அத்தோடு எமக்கான தனித்துவத்தை சிறப்பாக மேல் மேலும் வளர்த்துகொள்வோம். நான் என்ற அடையாளம் வரலாற்றில் பதியப்பட வேண்டுமானால் நாம் எம்மை மிகத்தெளிவாக இந்த அகிலத்துக்கு அறியப்படுத்தி விடுவோம் நான் என்ற ஒன்று இல்லை எனில் கர்மஜீவிக்கி இந்த அகிலத்தில் எந்த வேலையும் இல்லை என்பதை பூரணமாக உணர்ந்து கொள்வோம்.
காலத்தின் போக்கிலே அந்த நானாகிய சீவன் சிவத்தினில் ஒடுங்கி விடட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன்️
சிவனடியான்