பேராசிரியர் சி. மௌனகுரு
இது இந்நெடும் கட்டுரையின் ஐந்தாம் பகுதியும் இறுதிப் பகுதியும் ஆகும்.இதில் பின் நவீனத்துவ மூலவர்களுள் ஒருவரான பிரன்கைஸ் லியோதாட்டின் பாரவையில் கூத்து பார்க்கப் படுகிறது
லேன் பிரன்கைஸ் லியோதார் பின் நவீனத்துவ சிந்தனையாளர்களுள் முக்கியனமானவர்
பிரான்ஸிய மெய்யியளார்
பல்துறைகளிலும் பரிட்சயமானவர்
பல்துறைச் ஆய்வுச் சங்கமம் இவர் ஆய்வுகளில் உண்டு
ஐரோப்பிய சமூகத்தில் முதலாளித்துவ வளர்ச்சியினால் பெரும் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டமையை யாவரும் அறிவர்.
விஞ்ஞான மாற்றங்கள் ஐரோப்பிய சமூகத்தையே புரட்டிப்போட்டு விட்டன. பாரிய மாற்றங்களை இச்சமூகம் பெற்றும் விட்டது.
ஆலைத் தொழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு பிற்பட்ட காலம் விஞ்ஞான அணுகுமுறையான முழுமையான பார்வையை நிராகரித்து எதையும் கூறுகளாகப் பிரித்துப் பார்க்கும் தன்மை கொண்டதான அணுகுமுறையுடையதாக மாறி வந்துள்ளது என்பது லியோதாட்டின் வாதம்.
இதுவரை சமூகத்தைப் புரிந்து கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவியுள்ளன. பூரணமாக எதையும் புரிந்து கொள்ளமுடியாது. இவ்வகையில் தனக்கு முந்தியிருந்த உலகத்தை விளக்கிய தத்துவங்களை பெரிய எடுத்துரைப்புகளாகவே லியோதார்ட் காண்கிறார்.
மாக்ஸிஸம் கூட லியோதார்ட்டைப் பொறுத்த வரை பெரிய எடுத்துரைப்புத்தான்.
லியோதாட்டின் வாதப்படி ஒன்றல்ல பலவுள்ளன.
எத்தனை சமூக குழுமங்கள் உண்டோ அத்தனை வாழ்க்கை முறைகள் உள்ளன.
ஒரு கொள்கைதான் சரியென்றில்லை.
பல கொள்கைகளும் உள்ளன.
வேறுபாடுகள் எங்கும் காணப்படுகின்றன.
வேறுபாடென்பது எதிரானதென்பதன்று.
வேறுபாடுகளை உணர்வு பூர்வமாக அங்கீகரித்து ஒத்தியைபற்ற நிலைமைகளைச் சகித்துக் கொள்ள பின்நவீனத்தும் கற்றுக்கொடுக்கிறது.
இவ்வகையில் பின்நவீனத்தவத்திற்கு லியோதார்ட்டின் சிந்தனையாக பெரிய எடுத்துரைப்புக்கள் என்று எதுவுமில்லை என்பதையும்,
ஒன்றல்ல பலவுள்ளன. இவ்வேறுபாடுகளை அங்கீகரித்தலையும் பிரதானமானவைகளாகக் கொள்ளலாம்.
இவற்றினடிப்படையாக கூத்தினை நோக்குவோம்.
கூத்துக்கள் பெரும் எடுத்துரைப்புக்களா?
என்பது வினா
ஒருசமூகத்தின் பண்பாடு, விழுமியங்கள் கருத்துநிலைகள் என்பவற்றைக் கூறும் பல்வேறு எடுத்துரைப்புக்களில் கூத்தும் ஒன்றாகும்.
கூத்து ஒரு வகையான எடுத்துரைப்பேயாகும்.
குறிப்பிட்ட சமூகத்தின் சமூக அமைப்பு கட்டிக்காக்கும் பண்பாடு, மரபு, பழக்கவழக்கம், மதம், சட்டம் யாவற்றையும் நியாயப்படுத்துவதாக கூத்து அமையும். இதனாலேயே கூத்து அச்சமூகத்தின் பெரும் எடுத்துரைப்பாகின்றது.
கூத்துத் தரும் கருப்பொருள் யாது?
நல்லவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும் அது கடவுளருளால் தீரும் விதமுமே கூத்தின் கருப்பொருளாகும்.
ஆகும். கடவுள் பக்தி, ஒழுக்கம், நற்குணம், வீரம் ஆகியவற்றால் கடவுள் கிருபையுடன் தீயவற்றை வென்று இன்பமடையலாம். இவ்வகையில் கூத்துக்களில் துன்ப முடிவேயில்லை.
கிரேக்க நாடகத் தைப் போல விதி இங்கு மனிதனை அலைக்கழிக்கவில்லை.
அலைக்கழித்தாலும் கடவுள் கிருபையால் அதனை மீறிவிடலாம்.
இன்பமே என்னாளும் துன்பமில்லை
. நிலமானிய ஒழுங்கு முறைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
பெண்கள் கற்போடு இருக்க வேண்டும்,
ஆலயங்கள் தோறும் ஆறுகாலப்பூசை நடக்க வேண்டும்.
சாதிமுறைகளை மீறாமல் மனிதர்கள் வாழவேண்டும்.
இவை ஒழுங்காக உள்ளனவா என்று தேச விசாரணையில் மன்னன் மந்திரியிடம் கேட்பது எல்லாக் கூத்துக்களிலும்முண்டு.
இவையெல்லாம் ஒரு சமூகத்தின் பெரும் எடுத்துரைப்புக்களே.
பெரும் எடுத்துரைப்புக்களாக புராணம், இலக்கியம், இதிகாசம் அனைத்தையும் கொள்ளலாம்.
இவையே அறிவாக நின்று மனித சமூகத்தை இயக்குகின்றன.
பெரும் எடுத்துரைப்பு என்ற கொள்கையினை லியோதார்ட் எடுத்துரைக்கும் முன்னர் இதனைக்கூறியவர் லூசியன் கோல்மான் ஆகும்
. இவரது மேலாண்மைக் கொள்கை (Hegemonic theory) பெரும் எடுத்துரைப்புகளாக இவற்றைக் கூறுவதே.
கூத்து ஒன்றல்ல அது பலவாகும்.
-----------------------------------------------------
தமிழ்நாட்டுத் தெருக்கூத்து வேறு,
ஈழத்துக் கூத்து வேறு.
ஈழத்திலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மலைநாட்டுக் கூத்துக் களுக் கிடையே வேறுபாடுகள் உண்டு
மட்டக்களப்பிலேயே எழுவான்கரை, படுவான்கரைக் கூத்துக்களுக்கிடையே நிகழ்த்துவதில் வேறுபாடுண்டு.
ஒன்றல்லாமல் பலவாகக் கூத்துக்கள் இருப்பினும்கூத்துக்களின் மையப் பொருளும் கட்டமைப்பும் ஒன்றாகவே இருப்பதும் கவனத்திற் கொள்ளத் தக்கது.
இவ்வகையில் பெரும் எடுத்துரைப்புக்கள் எதுவும் இல்லை. என்ற லியோதார்ட்டின் சிந்தனை கூத்துக்குப் பொருந்துமா? என்பது ஐயத்திற்குரியது.
இதுவரை
மிஸல் பூக்கோ,
ழாக் தெரிதா
லியோதார்ட்
ஆகியோரின் சிந்தனைகளினடிப்படையில் கூத்துக்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தோம்.
மிஸல் பூக்கோவின் படி
அதிகாரமும், அதிகார மீறலும் கூத்தில் இருப்பதை அவதானித்தோம்.
தெரிதாவின் படி
பிரதிக்கு மக்களே விளக்கமளிப்பதையும் கட்டுடைத்துப் பார்க்குமிடத்து கூத்து திணிக்கும் அதிகாரத்தையும்
கண்டோம்.
லியோதார்ட்டின் படி
கூத்து அழிந்து விடாமல் கூத்து பெரும் எடுத்துரைப்பாகச் சவால்விட்டு நிற்பதையும்
கூத்து ஒன்றாயில்லாது பலவாக இருப்பினும் ஓர் ஒருமைத்தன்மை கொண்டிருப்பதனையும் பார்த்தோம்.
இவை யாவும் விவாதத்திற்குரிய, கூத்தை மென்மேலும் விளங்குவதற்குரிய முன் முயற்சிகளாகும்.
பின்னமைப்பியலும் , பின்நவீனத்துவமும் பழமையை நிராகரிப்பவை. புதுமையை விளங்கிக் கொள்பவை.
இவ்வகையில் கூத்து பழமையானது.
ஆனால் அது நிராகரிக்க முடியாத படி நம் முன்னின்று கொண்டுதாணிருக்கிறது.
முழு அதிகாரங்களையும் எதிர்த்தல் ,
முழுப் பெரும் எடுத்துரைப்புக்களையும் தகர்த்தல்,
கட்டவிழ்த்துப் பார்த்தல்,
பிரதிக்கு மக்கள் தரும் விளக்கம் (மறுவாசிப்பு)
உண்மை ஒன்றல்ல பல.
என்பன பின்நவீனத்துவக் கருத்துக்களாகும்.
இவற்றுள் பல நமக்குப் பொருந்தி வருவன. சில பொருந்தி வராதன. பொருந்தி வ்ருவதை வைத்துக் கொண்டு கூத்தை விளங்க இதுவரை முயற்சித்தோம்.
அதிகாரம் மோசமானது என முழு அதிகாரத்தையும் எதிர்ப்பது எந்தளவு சரியானது?
ஏதோ ஒரு அதிகார மையத்தில் தான் ஒரு அமைப்பு இருக்கும். அந்த அதிகாரம் மக்கள் நலன் சார்ந்ததா? இல்லையா? என்பதற்கு கிடைக்கும் விடையிலே தான் அதிகாரத்தின் தன்மையை அளவிடமுடியும்.
ஒன்றல்ல பல என்பது உண்மை தான். இது எம்மை எல்லாம் நல்லது தான் என்ற செயலற்ற நிலைக்கு கொண்டு விட்டு விடும்.
(ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் பற்றற்ற நிலை ஞானிகளுக்கு மாத்திரமே வாய்க்கும் என்பர்.
இதுவரை மனித சமூகம் தன் முயற்சியால் கண்டு பிடித்த 'செம்மை, ஒழுங்கு, அறிவு, திறன்களை எங்கு வைத்து நாம் மதிப்பிடலாம்.
பெரும் எடுத்துரைப்புக்கள் சிதறி விட்டமை உண்மையெனினும் அவற்றின் தாக்கத்தினால் சமூக அமைப்புக்கள் உடையாமல் இருப்பதனையும் அவதானிக்க வேண்டும்.
வினா இது தான்
பெரும் எடுத்துரைப்பும், அதிகாரமும் அறிவும் உண்மையும் யார் பக்கம் நிற்கின்றன?
இதற்கு விடை தேடுவதன் வாயிலாகவே அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்.
பின்னமைப்பியலும், பின் நவீனத்துவமும் சிந்தனையில் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தன என்பது உண்மையேயாயினும் அவை யார் பக்கம் அதிகம் நிற்கின்றன என்பதைக் கொண்டே அவற்றின் தன்மைகளை மதிப்பிட வேண்டும்.
அத்தோடு அதன் நல்ல அம்சங்களை கணக்கிலெடுத்து ஆய்வு நெறிகளில் அவற்றை பிரயோசனப் படுத்தவும் வேண்டும்
---------------------------------------------------------------------------
படம் 1. லியோதாட்
படம் 2 தெருக்கூத்தில் படுகளம்