இதனால்தான்; இறைவன் மோசேயை சீனாய் மலைக்கு ஏறிவரப்பண்ணி பத்து நியதிக் கட்டளைகளை வழங்கி அவற்றை மக்களிடம் அறிமுகமாக்கும்படி சொல்லி அனுப்புகின்றார். தம் தேவனாகிய கடவுளைக் கனம் பண்ணுவதும், தம் அயலான் மட்டில் நேர்மையாகவும், நன்மையாகவும் நடந்து கொள்வதெப்படி என்பது பற்றியுமான விதிமுறைகளாக அவை இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்கின்ற போக்கினின்றும் மனிதன் மாறி இப்படித்தான் வாழவேண்டும் என்கின்ற ஒரு நிலைமைக்கு அவர்களை உட்படுத்துவதன் மூலம் அவர்கள் மத்தியில் ஒழுங்கு, நேர்மை, நீதி, கட்டுப்பாடு என்பவற்றை இறைவன் அறிமுகப்படுத்தி வைக்கின்றார்.
பிறிதொரு நற்செய்தி வசனங்கள் ஜெருசலேம் தேவாலயத்தை விற்பனைக் கூடமாக்கி, இறைவனை அவமரியாதை செய்கின்ற கள்வர் கூட்டத்தை இயேசு அடித்து விரட்டுகின்ற நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. கோயில் காணிக்கைப் பொருட்கள் விற்பனவு என்கின்ற வகையில் வகை தொகையில்லாமல் கொள்ளை இலாபமீட்டி மக்களை அதாவது அடுத்தவரைச் சுரண்டுகின்ற அந்த வியாபாரிகள், கடவுள் உறையும் அந்த தேவாலயத்தை அதற்கென பயன்படுத்தி, இறைவனை அவமதிக்கின்ற செயலை இயேசுவால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? எனவேதான் தன் தந்தையின் வீட்டைத் தம் அடாத செயலுக்காகப் பயன்படுத்தும் அவர்களை அடித்தும், அவர்களது உபகரணங்களை புரட்டிப் போட்டும் அவர்களைத் துரத்தி விடுகின்றார்.
மனித வர்க்கத்தின் மீது இன்று எத்தனையோ விதமான அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை அனைத்தும் படைத்தவனுக்கு எதிரானவையாகவும், பாமரனுக்கு எதிராகவும் இழைக்கப்படுகின்ற நீதி விரோதச் செயற்பாடுகளாக இருக்கின்றன. இதை முன்கொண்டு செல்பவர்கள் இதை நிறுத்த வேண்டும். அனைவரையும் ஒன்றுபோல எண்ணித் தம் வாழ்வை பிறர் நலச் சிந்தனை கொண்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.
எகிப்தினின்றும் வெளியேறிய மக்கள் அதுவரை மனிதன் உருவாக்கிய ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள்;. அரசன் என்ற தலைவன் வகுத்த சட்டப்படி – அது யாருக்கு நன்மையாக இருந்திருந்தாலென்ன, வாழ்ந்து வந்தார்கள். தவறுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன. சமயங்களில் அது நேர்மையாக இருந்திருக்கலாம், சந்தர்ப்பங்களில் அது அநீதியாகத் தென்பட்டிருக்கலாம். ஆனாலும் முதன் முறையாக இறைவனே மக்களுக்கு ஒழுங்கு விதிகளை அளித்து அதன்படி வாழச் செய்கின்ற நிகழ்வை இஸ்ராயலேரின் வாழ்க்கை வரலாற்றிலேயே அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் இறைவன் மனித சமுதாயம் தவறுகள் அற்ற சமுதாயமாக, ஒழுக்கம் நிறைந்த சமுதாயமாக, அடுத்தவருக்கெதிராக செயற்படாத சமூகமாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார் என நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்மில் பலரும், நடப்புச் சூழலைப் பயன்படுத்தி மனிதனுக்குரிய வளங்களைச் சூறையாடி, அவன் ஒட்டு மொத்த வாழ்க்கையையே சுரண்டி, தம்மை மேலும் மேலும் வளப்படுத்தி கொண்டு, தாம் மட்டும் வாழ நினைத்துச் செயற்படுகின்றவர்களாக இருக்கின்றனர். தம் தவறுகளுக்காக அடுத்தவனைக் காரணம் காட்டுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். சமுதாயம் தொடர்பான எள்ளளவு கரிசனையுமின்றி, இலாபமே சிந்தனையாகக் கொண்டு. இறைவனின் நீதி என்பதை மறந்தவர்களாக அல்லது அதை இட்டு எண்ணியும் பாராதவர்களாகச் செயற்படும் அவர்களை, நின்றறுக்கும் தெய்வம் கவனித்துக் கொண்டதை நம் வாழ்க்கை அனுபவத்தில் நாம் நிறையவே கண்டிருக்கின்றோம்.
பணம் படைத்தவர்கள் வரிசையில் நம் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்காக அடுத்தவனின் வாழும் உரிமையைப் பறித்துவிட முயல்வது மனித சமுதாயத்திற்கெதிரான பாவமாக அமையும். நம் ஓவ்வொருவரதும் வாழ்வுக் காலமும் முற்றுப் புள்ளி கொண்டது என்பதை இந்த தபசு நாட்கள் எமக்கு எடுத்துச் சொல்கின்றன. என்னதான் கோடிகோடியாகச் சேர்த்து வைத்தாலும் போகின்ற பயணத்தில் அவை கைகொடுப்பதில்லை. அடுத்தவன் மட்டில் செய்யும் தருமமொன்றே இறை சந்நிதியில் நமக்காக வழக்காடும் என்பதை மறந்து விடாமல் வாழ்வது நன்றாகும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்