இதில், பிரதமர் மோடி பேசியதாவது: இன்று மன் கி பாத் நிகழ்ச்சி பொன் விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான திட்டம் எப்படி கிடைத்தது என்பது குறித்து மக்கள் நினைக்கின்றனர். மன் கி பாத் குறித்து ஆல் இந்தியா ரேடியா ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில்70 சதவீதம் பேர் இந்த நிகழ்ச்சியை தவறாமல் கேட்கின்றனர். இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டபோது, அதில் அரசியல் இருக்கக்கூடாது. அரசையோ அல்லது எனது பெயரில் அரசையோ பாராட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது உற்சாகமும், பலமும் உங்களிடம் இருந்து தான் கிடைக்கிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி ஏராளமான மக்கள் பேசி வருகின்றனர். இதன் மூலம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பெரிய தாக்கம் ஏற்பட்டது. இது அரசின் நிகழ்ச்சியல்ல. மக்களின் நிகழ்ச்சி. தேசத்தின் உற்சாகம் குறித்தும் இந்த நிகழ்ச்சி பேசி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய நம்பிக்கை வைத்தும், அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கான கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் 'மை கவ் இந்தியா ' ஆப் மூலம் கருத்துகள் வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமானதாக மாற்றி வருகிறேன். இந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட பல விஷயங்களை மீடியாக்கள் ஏற்று கொண்டுள்ளன. தூய்மை இந்தியா, சாலை பாதுகாப்பு, போதை மருந்துக்கு எதிரான விஷயங்களை ஏற்றுகொண்டு அதனை பெரிய பிரசாரமாக செய்தன. இந்த நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சென்ற மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இன்றைய இளைஞர்கள், தங்களை நம்பாத வரை எதையும் செய்ய மாட்டார்கள். ஒன்றின் மீது நம்பிக்கை ஏற்பட்டால், அதனை செய்து முடிப்பார்கள். சமூக வலைதளங்கள் வாயிலாக, இளைஞர்களுடன் பேசுவதில் முயற்சி கொண்டு வருகின்றேன். இன்றைய இளைஞர்கள் பெரிய இலக்குகளையும், திட்டங்களையும் கொண்டுள்ளனர். இது நல்ல விஷயம் என கருதுகிறேன். பெரிய அளவில் கனவு கண்டு, பெரிய சாதனை படைக்க வேண்டும்
நாளை அரசியல் சாசன நாளாகும். 1949 நவ.,26 ல் தான் நமது அரசியல் சாசனம் ஏற்று கொள்ளப்பட்டது. உரிமை மற்றும் கடமைகள் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டதே நமது அரசியலமைப்பின் சட்டத்தின் தனித்துவம் ஆகும். இந்த இரண்டுக்கும் இடையிலான நமது செயல்பாடு, தேசத்தை முன்னெடுத்து செல்லும். 2020ல் நாம் குடியரசாக மாறி 70 ஆண்டுகளாக ஆகும். 2022ல் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் கூறினார்.
'மன் கி பாத்' தின் 47வது நிகழ்ச்சி நிகழ்சியில் மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் தொன்மையான மொழி ‘தமிழ் மொழி’ - என்றும் குறிப்பிட்டிருந்தார்.