தாழ்ச்சியும் பணிவும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான பண்புகளாக இருத்தல் அவசியம். தாழ்ச்சியும் பணிவும் இல்லாதவர்கள் கடவுளைக் கூடி ஏற்றுக் கொள்ளவும், அவருக்கான இடத்தை தம் வாழ்வில் வழங்கவும் முன் வரமாட்டார்கள். மனிதனை இவ்வுலகில் மாண்புள்ளவனாக உயர்த்தி விடுகின்ற பண்புகளாகத் தாழ்ச்சியும் பணிவும் அமைகின்றன. இவ்வாறான தாழ்ச்சியும், பணிவும் நம் உள்ளத்தில் குடிகொள்ள நமக்குள் ஆன்மீக முதிர்ச்சி ஒன்று தேவை. நல்ல மனப்பக்குவம் அவசியம். விட்டுக் கொடுக்கின்ற சுபாவம் முக்கியம்.
ஆன்மீக முதிர்ச்சி எனும்போது, ஒருவர் பெருமையில் எவ்வளவு உயரமாகத் துள்ளிக் குதிக்கின்றார் என்பதிலல்ல, மாறாக தாழ்ச்சியுடன் எவ்வளவு தூரம் நேராக நடக்கின்றார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது என்பார்கள். பெருமை கொள்ளக் கூடியவை எம் வாழ்வில் எவ்வளவுதான் இருந்தாலும் அந்தப் பெருமைக்குரியவனே நான்தான் என்று தலைகால் புரியாமல் துள்ளுவது பெருமைக்குரிய விடயமேயில்லை. அதைவிடுத்து தனது பெருமைகளை எண்ணி தான் அதற்குத் தகுந்தவனா? என்கின்ற உணர்வுடன் மேலும் தன் பாதையில் நேராக நடக்கின்ற உறுதியைப் பெற்றுள்ளவனே உண்மையில் ஆன்மீக முதிர்ச்சி உள்ளவனாகின்றான்.
தன் வாழ்வில் எல்லாமே தான் போடும் திட்டத்திற்கமைவாகவே நடக்கின்றன, அவ்வாறுதான் நடக்கும், அப்படி நடக்கவும் வேண்டும் என்று எண்ணி வாழும் மாந்தர்கள் பரிதாபத்துக் குரியவர்கள். இந்த மண்ணில் உருப்படியான எதுவும் அவர்களால் சாத்தியமாகாது. தன்னையொத்த ஒரு வாழ்வை அவர்களால் தம் வாழ்வின் எந்த நிலையிலும் உருவாக்கி விட முடியாது. இறைவன்தான் வாழ்வின் அடித்தளம் என்பதை ஏற்றுக் கொள்ளாதவரையிலும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை அவர்களால் ஒன்றுபோல சீரணிக்க மடியாது.
அனைத்து நிலைகளையும், நிலமைகளையும் கடவுளே கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்ள தாழ்ச்;சியும், பணிவும் உள்ளத்தில் தேவை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளும்போது மனதில் ஒரு ஆறுதல் பிறக்கிறது. எதுவுமே அவரால்தான் நடக்கின்றன. அவை அவர் நியமிக்கும் நேரத்தில்தான் நடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முதலில் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் அவரை எங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை முன்னிலைப்படுத்தாமல் மற்றொருவரை முதன்மைப் படுத்தி அவரை எம் தலைவனாக ஏற்றுக் கொள்வது தாழ்ச்சியும், பணிவும் உள்ள மனிதர்க்கு மட்டுமே சாத்தியமானதொன்று.
பலபேருக்கு கடவுளுக்குரிய இடத்தை வாழ்வில் கொடுப்பதற்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. கடவுளை வாழ்விற்குள் புகுத்திக் கொண்டு விட்டால் நம்மால் நாம் இஷ்டப்படி வாழ முடியாது என்பது இவர்கள் நோக்கு. அப்படி அவருக்கு முன்னிடம் கொடுத்த விட்டால் நம் வாழ்வை ஒரு கட்டுப்பாடான வழியில் கொண்டு செலுத்த வேண்டிவரும். நம் விருப்பு வெறுப்புக்களை முன்வைத்து வாழ்வை நடத்திக் கொண்டு போக முடியாது. மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டியிருக்கும் என்றெல்லாம் சிந்தித்து, தம் வாழ்வில் கடவுளுக்கு இடங்கொடுக்க மறுத்து வருவதும் உண்டு. கடவுளுக்கு முக்கியத்துவத்தை வழங்கினால் அவரது ஒழுக்க நெறிக்கு உட்படவும், செய்யும் தவறுகளுக்கு வருந்தவும் வேண்டி வரும் என்பது அவர்களுடைய பயமாக அமைவதால் அதற்கு இடம்கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை: ஆஸ்திகர்களாக அவர்தம் வாழ்வின் போக்கு! நம் வாழ்வு நெறியுள்ளதாக அமையவேண்டுமானால் எபிரேயருக்குச் சொல்லப்பட்டது போன்று 'இறைவனின் கட்டுப்பாடுகளைப் புறக்கணிக்கவும் வேண்டாம்: அல்லது அவரது தண்டனைகளின் பொருட்டு மனச்சோர்வு கொள்ளவும் வேண்டாம்' என்கின்ற அறிவுரைகளைத் தைரியமாக நம் வாழ்விலும் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
தைரியம் என்று சொல்லுகின்றபோது என்னால் எதுவும் ஆகும் என்று சிங்கம் போல கர்ச்சித்துக் கொண்டு வாழ்வது என்பதல்ல அர்த்தம். மாறாக, ஒன்று முடிவடைகின்றபோது நமது எதிர்பார்ப்புக்கள் தவிடுபொடியாகின்றபோது, நாம் தொடங்கிய கருமம் ஒன்று தோல்வி காணும்போது மௌனமாக நமக்குள்ளே இருந்து 'பறவாயில்லை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறவைக்கின்றதுதான் தைரியம் என்பது.
இயேசு யோவானிடமே திருமுழுக்குக் கேட்டுப் போகின்றார். யோவானுக்கு கிறீஸ்து யார் என்று புரியும், இயேசுவுக்கும் தான் கடவுளின் மகன் என்று தெரியும். இருந்தும் இயேசு தன்னை முதன்மைப்படுத்தி நிற்கவில்லை. தன்னைத் தாழ்த்திக் கொண்டு பணிவுடன் தனக்குரிய திருமுழுக்கைப் பெறச் செல்கின்றார். யோவான் மறுத்தபோதும், தன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தேயாக வேண்டும் என்று ஏற்றுக் கொண்டவராகவும் எதையும் தைரியமாக ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் உள்ளவராகவும் யோர்தான் ஆற்றில் திருமுழக்குப் பெறுகின்றார்.
வாழ்வில் நடக்க வேண்டியவை நடக்கவேண்டிய தருணத்தில் நடக்கும் என்று தாழ்ச்சியோடும் பணிவோடும் ஏற்றுக் கொள்கின்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவே கிடையாது. இதை விடுத்து உண்மைக்கும் நன்மைக்கும் அஞ்சுகிறவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். பேரறிஞர் பிளேட்டோ கூறுவதுபோல 'ஒரு குழந்தை இருட்டைக் கண்டு அஞ்சினால் அதை மன்னித்துவிட முடியும், ஆனால் வாழ்வின் பரிதாபம் என்னவென்றால் மனிதர்கள் வெளிச்சத்தைக் கண்டு அச்சப்படுவதுதான்'.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்