தன்னை அன்பு செய்து வாழ எம்மை அழைக்கும் அவர், நம்மைப் பேல பிறரை அன்பு செய்து வாழவேண்டும் என்றும் அழைக்கின்றார். அவரது அழைப்பு என்பது நம்மை நாம் அன்பு செய்து வாழ வேண்டும் என்று அழைக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7: 12 இதை நமக்குக் கூறுகிறது. அவரது படைப்பான நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே அன்பு செய்யவும், இறைவனின் சாயலாக உருவாக்கப்பட்டு எமக்கான ஆளுமையை உருவாக்கித் தந்து மனிதராக நடமாட விட்ட அவர், தம் படைப்பு சீரழிந்து போவதை விரும்புவதில்லை. தன்னைத் தானே நன்கு கவனித்து வாழவேண்டும் என்பது அவரின் விருப்பம் என்பதில் தவறேதும் இருக்க முடியாது.
ஆனாலும் இதை விட முக்கியமானதொரு அம்சமும் இருக்கிறது. எவ்வாறு நாம் நம்மை அன்பு செய்து வாழவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அப்படியே நம் அயலாரையும் நாம் அன்பு செய்து வாழவேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார் – அதற்கான அழைப்பையும் அவர் மத். 22: 39 இல் எமக்கு விடுக்கின்றார். நாம் எப்படியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதுபோல மற்றவரும் நல்ல நிலையில் வாழ்வதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது சித்தமாக இருக்கின்றது.
எனவே வாழ்க்கை என்ற நாணயத்தைப் பொறுத்தவரையில் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பில் அடுத்தவர்க்காக வாழ்வதை அந்த நாணயத்தின் அடுத்த பக்கம் போல் அமைவதை அவர் வலியுறுத்துகின்றார்.
நல்ல சமாரித்தன் உவமையில் அடிபட்டுக் காயங்களுடன் குற்றுயிராக இருக்கின்ற ஒருத்தனை கண்டும் காணாதது போல பலரும் விட்டுச் செல்லும் நிலையில் - பெரும் அந்தஸ்தோடு வாழ்ந்தவர்கள், மற்றவர்களுக்குச் சேவையாற்ற வேண்டியவர்கள் என்றெல்லாம் பலரும் பாதிக்கப்பட்டவனைப் புறக்கணித்துச் செல்லும்போது, முற்றிலும் சம்பந்தமில்லாதவன், ஒரு வகையில் சொல்லப் போனால் விலக்கப்பட்ட இனத்தவன் ஒருத்தன் அக்கறையோடு எந்த வித பலனையும் எதிர்பாராதவனாக, மனிதம் வாழப் பண்ணும் ஒருவனாக, மனித நேயத்தையே மனதிற் கொண்டவனாகச் செயற்பட்டு காயப்பட்டிருக்கும் தன் அயலவனை ஆதரித்து, தன் பணிகளையெல்லாம் ஒதுக்கி விட்டு, தான் அந்த நிலைக்குட்பட்டிருந்தால் மற்றவர்கள் எந்தளவு தனக்கு ஆதரவு காட்ட வேண்டும் என்று நினைப்பானோ, அந்தளவுக்கும் மேலாக அவனுக்காக முழுச் செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டதை இயேசு மிகவும் உயர்வாகப் போற்றுவதை நாம் அவதனிக்கின்றோம்.
அடுத்தவருக்காக வாழ எம்மை அழைக்கும் இயேசு தம் வாழ்வையும் அதுபோலவே அமைத்துக் கொள்கிறார் – தமது வாழ்வால் தம் வார்த்தைகளுக்கு உயிரூட்டம் தருகிறார். (தொடரும்)
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்